
இன்றைய இறைமொழி
திங்கள், 2 பிப்ரவரி ’26
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல், விழா
மலாக்கி 3:1-4 (அ) எபிரேயர் 2:14-18. லூக்கா 2:22-40
ஆண்டவரை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் இன்றைய விழாவுடன் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்கள் நிறைவுபெறுகின்றன. கிறிஸ்து பிறந்த 40-ஆம் நாளில் அவருடைய பெற்றோர் அவரைக் காணிக்கையாக அர்ப்பணிக்கிறார்கள். ‘பாரஸ்தெசாய்’ என்னும் கிரேக்கச் சொல்லை இங்கே பயன்படுத்துகிறார் நற்செய்தியாளர் லூக்கா. இந்தச் சொல்லுக்கு ‘பலியாக்குதல்’ என்பது பொருள். இதே சொல்லை புனித பவுல் உரோமையருக்கு எழுதுகிற திருமடலில் பயன்படுத்தி இவ்வாறு அறிவுரை வழங்குகிறார்: ‘கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைக் படையுங்கள்’ (உரோ 12:1). எருசலேம் ஆலயத்தில் இயேசுவின் பெற்றோர் அவரை ‘பலியாக்கும்’ இந்த நிகழ்வு அவருடைய கல்வாரிப் பலியின் முன்னோட்டமாக அமைகிறது. பலியாக்கப்படுகிற எதுவும் தன்னையே முழுமையாக அழித்துக்கொள்கிறது. பலிப்பொருள்களை நாம் திரும்ப எடுத்துக்கொள்வதில்லை.
இன்று நாம் வாசிக்கிற முதல் வாசகத்தில் (எபி 2:14-18), ‘மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளைப் போல ஆகவேண்டியதாயிற்று’ என்று இயேசுவின் தலைமைக்குரு பணி பற்றி வாசிக்கிறோம். மற்ற தலைமைக்குருக்கள் பலி செலுத்தும்போதெல்லாம் பலிப்பொருளுக்கும் அவர்களுக்கும் ஓர் இடைவெளி இருக்கும். ஆனால், இயேசுவின் பலியில், பலிப் பொருளும் பலி செலுத்துபவரும் ஒன்றாக இருக்கிறார்கள்.
இன்றைய வழிபாட்டில் நாம் மெழுகுதிரிகள் ஏந்திப் பவனி வருகிறோம். எரிந்து உருகுகிற மெழுகு இயேசுவின் முழுமையான பலியை நமக்கு நினைவூட்டுவதோடு நாமும் நம்மையே கடவுளுக்கு முழுமையாகப் பலியாக்க நம்மை அழைக்கிறது.
மலாக்கி நூலிலிருந்து வாசிக்கிற முதல் வாசகம், இயேசுவை ‘உடன்படிக்கையின் தூதர்’ என்றழைக்கிறது. யோசேப்பும் மரியாவும் குழந்தையைக் கைகளில் ஏந்தி வந்து சிமியோன் மற்றும் அன்னாவின் கைகளில் வழங்குகிறார்கள். புதிய இஸ்ரயேலுக்கும் பழைய இஸ்ரயேலுக்கும் இடையே இணைப்புக்கோடாக நிற்கிறது குழந்தை.
சிமியோன் மரியாவைப் பார்த்துக் கூறும் சொற்கள் மரியாவின் புதிய பயணத்திற்கு – கல்வாரி நோக்கிய பயணத்திற்கு – அவரைத் தயாரிக்கின்றன. மரியாவின் மௌனம் நமக்கு வியப்பளிக்கிறது. மரியா குழந்தைக்கும் தமக்கும் இடையே இருக்கிற உடல்சார் உறவைப் பலியாக்குகிறார்.
இன்றைய நாள் நமக்கு விடுக்கும் அழைப்புகள் எவை?
(அ) பலியாக நம்மை அர்ப்பணிக்க – நாம் ஏந்தும் மெழுகுதிரிகளுடன் நம்மையே – எண்ணங்கள், சொற்கள், செயல்கள் – கடவுளுக்கு அர்ப்பணிக்க முன்வருவோம்.
(ஆ) நம் குடும்பங்களிலும் குழுமங்களிலும் ஒருவர் மற்றவரை இணைக்கிற உடன்படிக்கையின் தூதர்களாக மாறுவோம்.
(இ) வாழ்வின் எதார்த்தங்கள் நமக்குப் புரியாதபோது மௌனமாக இருந்து பொறுமை காப்போம்.
‘வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்!’ என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறது பதிலுரைப் பாடல் (திபா 25). நம் இதயத்தின் வாயில்களை உயர்த்த அவர் உள்ளே நுழையட்டும். அவர் இன்றும் நம் வழியாகத் தம்மையே பலியாக்குகிறார்.
இன்றைய நாள் அர்ப்பண வாழ்வின் நாள் எனவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டவருக்குத் தம்மையே அர்ப்பணித்துள்ள ஆண், பெண் துறவியர்களை நாம் நினைவுகூர்கிறோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: