• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கையறுநிலையும் நம்பிக்கையும். இன்றைய இறைமொழி. செவ்வாய், 3 பிப்ரவரி ’26.

Tuesday, February 3, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நம்பிக்கை கையறுநிலை தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் நோய் நீங்குதல் இறந்தவர் உயிர்பெறுதல்

இன்றைய இறைமொழி
செவ்வாய், 3 பிப்ரவரி ’26
பொதுக்காலம் நான்காம் வாரம், செவ்வாய்
2 சாமு 18: 9-10, 14, 24-25, 30- 19: 3. மாற் 5:21-43

 

கையறுநிலையும் நம்பிக்கையும்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வல்ல செயல்கள் நடந்தேறுகின்றன: (அ) நோய் நீங்குதல். (ஆ) இறந்தவர் உயிர்பெறுதல். இரண்டு வல்ல செயல்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன. இலக்கிய அடிப்படையில் முதல் வல்ல செயல் இரண்டாம் வல்ல செயல் நடந்தேறுவதற்கான சூழலை உருவாக்கித் தருகிறது.

 

கையறுநிலையில் உள்ள இரண்டு நபர்களை நாம் இங்கே காண்கிறோம்:

 

(அ) இரத்தப்போக்கினால் வருந்திய பெயரில்லாத பெண் – இவருடைய உடல்நலம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மருத்துவத்திற்காக இவர் செலவழித்தும் எந்தப் பயனும் இல்லை. எந்த மருத்துவராலும் இவருடைய நோயைக் குணமாக்க இயலவில்லை. இயேசுவின் ஆடையைத் தொட்டாலே குணமடைவேன் என்ற நம்பிக்கை இவருக்கு நலம் பெற்றுத் தருகிறது. தனக்கும் இயேசுவுக்கும் என்ற நடக்கிறது நிகழ்வு. ஆனால், இயேசு அவரைப் பொதுவில் அழைத்து நம்பிக்கைக்கான முன்மாதிரியாக அவரை நிறுத்துகிறார்.

 

(ஆ) தொழுகைக்கூடத் தலைவர் யாயிர் – தன் மகளுடைய உடல்நலத்துக்காக இயேசுவிடம் வருகிறார் யாயிர். தொடக்கத்தில் நம்பிக்கை நிறைந்தவராக இருந்தாலும், இயேசுவைச் சுற்றி நிற்கிற கூட்டமும் அதனால் நிகழ்கிற தாமதமும் அவருடைய நம்பிக்கையைக் குறைக்கிறது. தன் கண்முன் நடந்தேறிய வல்ல செயலால் மீண்டும் அவர் நம்பிக்கை கொள்கிறார். ஆனால், சிறுமி இறந்துவிட்டாள் என்ற செய்தியைக் கொண்டு வந்த அவருடைய பணியாளர்கள் அவருடைய நம்பிக்கையை மீண்டும் குறைக்கிறார்கள். அவருடைய கையறுநிலையில் இயேசு அவரைத் திடப்படுத்துகிறார்: ‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!’

 

நம் கையறுநிலையில் நாம் கடவுளிடம் நம்பிக்கை கொள்ள இன்றைய நாள் அழைப்பு விடுக்கிறது.

 

முதல் வாசகத்தில் தாவீது அரசரின் கையறுநிலையை வாசிக்கிறோம். அவருடைய மகன் அப்சலோம் அவருக்கு எதிராகப் புரட்சி செய்கிறான். மகன் என்ற நிலையிலிருந்து எதிரி என்னும் நிலைக்கு மாறுகிறான். ஆனாலும் அவனுடைய இறப்பு தந்தை என்னும் நிலையில் தாவீதுக்கு துயரம் தருகிறது: ‘என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே!’

 

உரியாவைக் கொன்ற நாள் முதல் தாவீது அரசரின் இல்லத்திலிருந்து வாள் அகலவே இல்லை.

 

நோய், இறப்பு, இழப்பு போன்ற நேரங்களில் நாம் கையறுநிலையில் இருக்கிறோம்.

 

நம் கையறுநிலை நம் நம்பிக்கையால் மாறுகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: