• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறைவார்த்தையும் நம் வார்த்தையும். இன்றைய இறைமொழி. ஞாயிறு, 12 ஜூலை 2026.

Sunday, July 12, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 12 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு
எசா 55:10-11. திபா 65. உரோ 8:18-23. மத் 13:1-23

 

இறைவார்த்தையும் நம் வார்த்தையும்

 

நாம் கேட்கும் இறைவார்த்தைக்கான நம் பதிலிறுத்தலையும், நாம் பேசும் வார்த்தைகளின் ஆற்றலையும் முன்வைத்து நம் வாழ்வை நெறிப்படுத்த இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.

 

(அ) முதல் வாசகப் பின்புலமும் பொருள் (எசா 55:10-11)

 

இறைவாக்கினர் எசாயா நூலை முதல் எசாயா, இரண்டாம் எசாயா, மூன்றாம் எசாயா என்று பிரிக்கிறார்கள் விவிலிய ஆசிரியர்கள். இன்றைய முதல் வாசகம் இரண்டாம் எசாயா என்னும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எசாயா பாபிலோனியாவில் நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள் நடுவில் இறைவாக்குரைக்கிறார். இஸ்ரயேல் மக்கள் மீண்டும் தங்கள் சொந்த நாடு திரும்புவார்கள் என்று அவர் அறிவித்தபோது மக்கள் அவ்வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். கடவுள் தம் வார்த்தைக்கு பிரமாணிக்கமாக இருப்பாரா என்னும் தயக்கம் வருகிறது. அன்றைய மத்திய அண்மைக் கிழக்குப் பகுதியில் அரசர் பேசும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை என்று கருதப்பட்டன. எழுத்து வழக்கைவிட பேச்சு வழக்கே அதிகமாக இருந்த அக்காலத்தில் ஒருவர் பேசும் சொற்களும் அவர் செய்யும் செயல்களும் இணைந்து செல்ல வேண்டும் என்பது வாழ்வியல் நடைமுறையாக இருந்தது.

 

இதன் பின்புலத்தில் இறைவாக்குரைக்கிற எசாயா, இயற்கை உலகில் நடந்தேறுகிற ஒரு நிகழ்வை உருவகமாகத் தருகிறார். மழையும் பனியும் மேலிருந்து கீழே இறங்கி வருகின்றன. அவை வருவதன் நோக்கத்தை நிறைவு செய்யாமல் – நிலத்தை நனைத்து விதையும் உணவும் தராமல் – திரும்பிச் செல்வதில்லை. இயற்கை உலகில் நடக்கிற நிகழ்வுகளைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கிற கடவுளும் அவ்வாறே செயல்படுவார் என்பது இறைவாக்கினர் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.

 

ஆண்டவராகிய கடவுளின் சொற்கள் ‘வெறுமையாகத்’ திரும்புவதில்லை. வெறுமையாகத் திரும்புகிற சொற்கள் வெறும் காற்றில் கலந்த ஒலிகளாக மாறுகின்றன. கடவுள் வெறுமனே காற்றில் ஒலிக்கிற ஓசைகளைப் பேசுவதில்லை. மாறாக, மண்ணில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களை அவர் செய்கிறார்.

 

(ஆ) பதிலுரைப் பாடல் விளக்கம் (திபா 65)

 

தாவீதுக்கு உரியது என்று வழங்கப்பட்டுள்ள இத்திருப்பாடல் இஸ்ரயேல் மக்களின் குழுமப்பாடலாகவும் உள்ளது. வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய இஸ்ரயேல் மக்கள் விதை விதைத்து பயிர் செய்யத் தொடங்குகிறார்கள். அவர்கள் பெறுகிற வளத்தையும் நிறைவையும் எடுத்துரைக்கிறது இப்பாடல்.

 

‘ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர். உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன’ என்று பாடுகிறார் ஆசிரியர். விவசாயத்தால் வரும் விளைச்சல் என்பது காலத்தைப் பொருத்தது என்றாலும், அதனால் வருகிற நிறைவு ஆண்டு முழுவதும் நீடிக்கிறது.

 

(இ) இரண்டாம் வாசகப் பின்புலமும் பொருள் (உரோ 8:18-23)

 

‘இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள்’ என்று தொடங்குகிறது வாசகம். உரோமைத் திருச்சபை அனுபவித்த துன்பங்களையோ, அல்லது பாவத்தின் விளைவாக ஒட்டுமொத்த மானுடமும் அனுபவிக்கிற சாவு என்ற துன்பத்தையோ இச்சொல்லாடல் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.

 

வரப்போகிற மாட்சியோடு ஒப்புடும்போது துன்பங்கள் மறையக்கூடியவை, சிறியவை என்கிறார் பவுல். இதை விளக்குவதற்காக, ‘பேறுகால வேதனை’ என்னும் உருவகத்தைக் கையாளுகிறார். ஒரு பெண் அனுபவிக்கிற பேறுகால வேதனை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. ஆனால், அவர் குழந்தை பெற்றெடுத்தவுடன் புதிய உயிர் இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதன் மகிழ்ச்சி அவருடைய துன்பத்தை மறக்கச் செய்கிறது. அல்லது அத்துன்பம் வழியாகவே அவர் புதிய உயிர் என்னும் மகிழ்ச்சிக்குள் நுழைகிறார்.

 

படைக்கப்பட்ட நிலையிலிருந்து நாம் எப்படியாவது வெளியேறி வேண்டும் என்று நாம் அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.

 

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுமே நமக்கு பேறுகால வேதனையையே தருகிறது. காலையில் துயில் எழுவது தொடங்கி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நிறைவேற்றும் எந்த வேலையும் பொறுப்பும் நமக்கு பேறுகால வேதனையை தருகின்றன. விதை விதைக்கும் விவசாயி செய்கிற அனைத்துச் செயல்களும் – விதைத்தல், நீர் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிர்களைப் பேணி வளர்த்தல் – அவருக்கு பேறுகால வேதனையையே தருகின்றன. ஆனால், அறுவடை செய்யும்போது அவர் தன் துன்பத்தையெல்லாம் மறந்துவிடுகிறார். அல்லது, தன்னுடைய துன்பங்கள் வழியாகவே அறுவடை என்னும் மகிழ்ச்சிக்குள் நுழைகிறார்.

 

(ஈ) நற்செய்தி வாசகப் பின்புலமும் பொருள் (மத் 13:1-23)

 

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: விதைப்பவர் உவமை, உவமைகளின் நோக்கம், விதைப்பவர் உவமையின் விளக்கம். இந்த வாசகப் பகுதியோடு இயேசுவின் ‘உவமைகள் பொழிவு’ தொடங்குகிறது. விண்ணரசுக்கான ஏழு உவமைகளை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். விதைப்பவர் அல்லது விதைகள் உவமையே முதல் உவமை.

 

இஸ்ரயேல் மக்களின் விவசாய வாழ்வைப் பார்க்கும்போது, முதலில் அவர்கள் விதைகளை விதைத்துவிடுகிறார்கள். பின்பு நிலத்தை உழுகிறார்கள். பரந்த வெட்ட வெளியாக இருக்கிற நிலத்திற்கு வருகிற விதைப்பவர் விதைகளை அள்ளித் தூவத் தொடங்குகிறார். நான்கு வகையான நிலப்பகுதிகளில் விதைகள் விழுகின்றன: (அ) வழியாக மாறிய நிலம். (ஆ) பாறைகள் நிறைந்த நிலம். (இ) முட்செடிகள் நிறைந்த நிலம். (ஈ) நல்ல நிலம்.

 

மக்கள் நடக்கும் வழி என்பது வயலின் வரப்புகளை அல்லது, வயல்நடுவே மக்கள் நடந்து சென்றதால் ஏற்பட்ட பாதையையும் குறிக்கிறது. இந்த வழி மக்கள் நடந்ததால் மண் இறுகிப்போய் இருக்கிறது. நிலத்தின்மேலே கிடக்கிற விதைகள் வானத்துப் பறவைகளுக்கு உணவாகின்றன.

 

பாறைகள் நிறைந்த நிலம் மேலோட்டமாக மண்ணைக் கொண்டிருக்கிறது. மண்ணில் உள்ள ஈரப்பதம் வேகமாக விதைகளை வளரச் செய்கிறது. ஆனால், அப்பயிர்களால் வேர்விட இயலாது.

 

முட்செடிகள் நிறைந்த நிலம், விதைக்கு வேண்டிய உரத்தையும் ஊட்டத்தையும் தண்ணீரையும் முழுமையாக விதைக்குக் கிடைக்காமல் செய்கிறது. மேலும் முட்செடிகளின் நிழல் பயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.

 

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு, அறுபது, முப்பது என்று கனி தருகின்றன. விதைகள் இயல்பிலேயே உள்ள ஆற்றலால் முப்பது மடங்கு கனி தருகின்றன. சூழல் உகந்ததாக அமைந்தால் அறுபது மடங்கு, கடவுளின் உடனிருப்பால் நூறு மடங்கு பலன் கொடுக்கிறார்கள்.

 

இரண்டாம் பகுதியில் இயேசு உவமைகள் வழியாகப் பேசுவதன் நோக்கத்தை வாசிக்கிறோம். முதல் நோக்கம், விண்ணரசின் மறைபொருளை – காண இயலாதவற்றை – காணக்கூடிய சொல்லோவியங்களால் புரிந்துகொள்ள முயற்சி செய்வது. இரண்டாம் நோக்கம், இயேசுவின் குழுமத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு இதன் பொருள் புரிந்துகொள்ள இயலாமல் இருக்கிறது. இயேசுவின் எதிரிகள் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள இயலாத அளவுக்கு போதனையை மறைபொருளாக மாற்றுகிறது.

 

மூன்றாம் பகுதியில் விதைப்பவர் உவமையின் விளக்கத்தைக் கூறுகிறார். மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் விளங்கிய பிரச்சனைகளையும் நாம் இங்கே புரிந்துகொள்ள முடிகிறது. இயேசு அறிவித்த சொற்கள் அவருடைய எதிரிகள் காதுகளில் விழுகின்றன. ஆனால், வழியோரம் விழுந்த விதைகள்போல அவற்றை அலகை எடுத்துவிடுகிறான். அவருடைய வல்ல செயல்களால் பயன்பெற்றவர்கள் பாறைநிலம்போல இருக்கிறார்கள். வேகமாக இயேசுவை நம்புகிறார்கள். ஆனால், நம்பிக்கையில் அவர்கள் நிலைத்திருக்கவில்லை. முட்செடிகள்போல இருந்தவர்கள் இயேசுவின் சொற்களால் நெகிழ்ந்தாலும் முழுமையான பதிலிறுப்பை தரவில்லை – எடுத்துக்காட்டு, ஏரோது அந்திபா, இயேசுவின் பின்பற்ற விரும்பிய இளைஞர். நல்ல நிலம்போல இருந்தவர்கள் அன்னை கன்னி மரியா, யோசேப்பு, திருத்தூதர்கள்.

 

(உ) வாழ்வியல் பாடங்கள்

 

(1) இறைவார்த்தைக்கான நம் பதிலிறுப்பு

 

புனித பெரிய அந்தோனியாரின் மனமாற்ற நிகழ்வைப் பற்றி நாம் கேட்டிருக்கிறாம். அகுஸ்தினாரின் மனமாற்றத்துக்குக் காரணமான நிகழ்வுகளில் இந்நிகழ்வும் ஒன்று. ‘நீ நிறைவுள்ளவராக விரும்பினால் உனக்கு உள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. பின் என்னைப் பின்தொடர்’ என்று ஆலயத்தில் அறிவிக்கப்பட்ட வார்த்தைகள் தமக்கே அறிவிக்கப்பட்டதாக உணர்கிற புனித அந்தோனியார் உடனடியாக பதிலிறுப்பு செய்கிறார். அன்றைய நாளில் அந்த ஆலயத்தில் இருந்த மற்றவர்கள் எந்தப் பதிலிறுப்பும் செய்யவில்லை. இறைவார்த்தையைக் கேட்டல் என்பது நாம் தரும் பதிலிறுப்பில்தான் நிறைவுபெறுகிறது. மன்னிப்பு பற்றி அறிவிக்கக் கேட்டால் நாம் மன்னிக்க வேண்டும். அன்பு பற்றி அறிவிக்கக் கேட்டால் அன்பு செய்ய வேண்டும்.

 

இறைவார்த்தை விவிலியத்தின் வழியாகவும், மனச்சான்றின் வழியாகவும், மற்றவர்களின் வழிகாட்டுதல் வழியாக நம்மிடம் வருகிறது. நாம் தரும் பதிலிறுப்பு என்ன? நம் பதிலிறுப்புக்கான தடைகள் எவை? நம் பதிலிறுப்பைத் தள்ளிப் போடக் காரணம் என்ன?

 

(2) நம் சொற்கள், நேரம், திறன்கள், வாழ்க்கை

 

விதைக்கிறவர் போல நாம் ஒவ்வொரு நாளும் நம் சொற்களையும், நேரத்தையும், திறன்களையும், வாழ்க்கையையும் விதைக்கிறோம். அவற்றை நாம் நடைபாதையில், பாறைகள்மேல், முட்கள்நடுவில் விதைக்கும்போது நம்மால் பலன்தர முடிவதில்லை. ஒவ்வொரு பொழுதையும் முழுமையாகக் கனிதரும் அளவில் செய்ய வேண்டும். நாம் செய்யும் அனைத்திலும் நூறு மடங்கு என்னும் பயனை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

 

(3) இயற்கையோடு இணைந்த வாழ்வு

 

மழை, பனி, மேய்ச்சல், நிலம், படைப்பு, விதை, வழி, பாறை, முட்செடிகள் என்று இயற்கை உலகின் சொற்களால் நிறைந்துள்ளன இன்றைய வாசகங்கள். இயற்கையின் சுழற்சியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையின் ஒரு பகுதியே நாம் என்பதை மனத்தில் வைத்து வாழும்போது இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கிற நம் மனநிலை மாறும்.

 

இறைவார்த்தைபோல நம் வார்த்தையும் கனிதர இறைவன் அருள்கூர்வராக!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: