
இன்றைய இறைமொழி
திங்கள், 13 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
எசா 1:11-17. மத் 10:34-11:1
நாம் ஒன்றை ஒருவரிடமிருந்து பெறும்போது அதற்கு கைம்மாறாக நாம் எதையாவது செய்ய நினைக்கிறோம். யாருக்கும் கடன்படாமல் இருக்கும் பொருட்டு நாம் உடனடியாக கைம்மாறு செய்துவிடுகிறோம்.
ஆண்டவராகிய கடவுள் நமக்கு கைம்மாறு செய்யுமாறு நாம் அவரை அனுமதிக்க நம்மை அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக மக்களிடம் பேசுகிறார். எளிதானவை வேறு, நன்மையானவை வேறு என்று வேறுபடுத்திக் காட்டுகிறார் கடவுள். வெளிப்புற சமய அடையாளங்களும் கொண்டாட்டங்களும் பயனற்றவை என்று சொல்கிற இறைவாக்கினர், சமூக நீதி சார்ந்த செயல்களை அவர்கள் செய்யுமாறு அறிவுறுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியோடு இயேசுவின் திருத்தூது பேருரை நிறைவு பெறுகிறது. கடவுளை ஏற்றுக்கொள்பவர்களுக்கான கைம்மாற்றை கடவுளே வழங்குகிறார். சீடர்களை வெறுப்பவர்களும் நிராகரிப்பவர்களும் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவருடைய சொற்களுக்கு கீழ்ப்படிபவர்களுக்குக் கடவுள் கைம்மாறு வழங்குகிறார்.
எளிதானவற்றுக்கும் நன்மையானவற்றுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து எளிதானவற்றைப் பின்பற்றுதலை விடுத்து சரியானவற்றைப் பற்றிக்கொள்ள அழைக்கின்றன இன்றைய வாசகங்கள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: