• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

மனித கையறுநிலையில் பொறுமை. இன்றைய இறைமொழி. செவ்வாய், 14 ஜூலை 2026.

Tuesday, July 14, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 14 ஜூலை 2026
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
எசா 7:1-9. மத் 11:20-24

 

மனித கையறுநிலையில் பொறுமை

 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு இரண்டு மனிதர்களின் கையறுநிலையை நம்முன் கொண்டுவருகிறது.

 

முதல் வாசகத்தில், அரசர் ஆகாபுவின் கையறுநிலையை வாசிக்கிறோம். சிரிய-எஃப்ராயின் போரின் பின்புலத்தில் அமைந்திருக்கிற இந்த வாசகப் பகுதியில், எதிரிகளின் படையெடுப்பைப் பற்றிக் கேள்வியுற்றவுடன் அரசர் ஆகாபு அச்சம் கொள்கிறார்.

 

‘பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன’ என்று பதிவு செய்கிறார் எசாயா.

 

ஆகாபின் உள்ளத்தில் எழுந்த குழப்பத்தையே இந்த உருவகம் எடுத்துரைக்கிறது. மனித சத்தங்கள் அதிகமாக இருக்கும்போது கடவுளின் மென்மையான குரலை நம்மால் கேட்க முடிவதில்லை.

 

ஆகாபின் கையறுநிலை அவருக்கு அச்சம் தருகிறது. அந்த அச்சத்தை அவர் களைய வேண்டுமெனில் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரிகிற எதிரியை வெற்றிகொள்வதற்கு கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்ப வேண்டும். இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு நிறைய துணிச்சல் தேவை.

 

நற்செய்தி வாசகத்தில், திருந்த மறுத்த நகரங்களைச் சபிக்கிறார் இயேசு. இயேசு கடவுள் என்னும் நிலையில் அனைவருடைய உள்ளங்களையும் மாற்றியிருக்கலாமே? என்ற கேள்வி நம்மில் எழுகிறது. மேலும், சமய சுதந்திரம் பற்றி இன்றைய நம் புரிதலின் பின்புலத்தில் ஒரு சமயத்தின் கடவுளையோ, சமயத்தின் அறிவித்தலையே நம்பாத மற்றவரை சபித்தலும், ‘ஐயோ, கேடு!’ என அழைத்தலும் எந்த அளவுக்கு ஏற்புடையதாகும்?

 

இயேசு மனித நிலையில் எதிர்கொண்ட கையறுநிலையாக இந்நிகழ்வை எடுத்துக்கொள்வோம். ‘எல்லாரும் என்னிடம் உதவி பெற்றுவிட்டு கடைசியில் என்னைத் தனியாக விட்டுவிட்டார்கள்!’ என்று நாம் சில நேரங்களில் புலம்புகிறோம். இயேசுவும் அதே மாதிரியான நிலையை உணர்கிறார். தம் போதனையைக் கேட்டவர்களும் தாம் நிகழ்த்திய வல்ல செயல்களால் பயனடைந்தவர்களும் தம்மை நம்பவில்லை அல்லது தாம் கடவுளின் மகன் என்பதை நம்பவில்லை என்று இயேசு உணர்கிறார்.

 

இயேசு தம்முடைய கையறுநிலையில் மனம் மாறாத நகரங்களைச் சாடுகிறார். இந்தச் சாடுதல் மனமாற்றத்துக்கான அழைப்பு என்றும் கருதப்படுகிறது.

 

நம் கையறுநிலையில் நாமும் கடவுளையும் மற்றவர்களையும் சில நேரங்களில் நிந்தனை செய்கிறோம்.

 

வாழ்வின் கையறுநிலையில் பொறுமையை நாம் கற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: