• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

திறவுகோலே, வாரும்! இன்றைய இறைமொழி. சனி, 20 டிசம்பர் ’25.

Saturday, December 20, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

கிறிஸ்து பிறப்பு நவநாள் இம்மானுவேல் தாவீதின் திறவுகோல் விண்ணகத்தின் திறவுகோல் ஆகாசு அரசன் பொறுமை-அமைதி

இன்றைய இறைமொழி
சனி, 20 டிசம்பர் ’25
திருவருகைக்கால வார நாள்
கிறிஸ்து பிறப்பு நவநாள் – 4

எசாயா 7:10-14. லூக்கா 1:26-38

 

திறவுகோலே, வாரும்!

 

ஓ தாவீதின் திறவுகோலே, இஸ்ரயேல் வீட்டின் செங்கோலே,
நீர் திறக்க, எவரும் பூட்ட இயலாது.
நீர் பூட்ட, எவரும் திறக்க இயலாது.
வாரும்! இருளிலும் இறப்பின் நிழலிலும் வாழ்வோரைச் சிறையினின்று வெளியேற்றும்!

 

‘ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.’

 

‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே என்றார். வானதூதர் அவரிடம், … கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்றார். பின்னர் மரியா, ‘நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்றார்.’

 

திறவுகோலைக் கொண்டிருத்தல் ஒருவர் அந்த இல்லத்தின்மேல் கொண்டிருக்கிற உரிமையையும் அதிகாரத்தையும் குறிக்கிறது. விண்ணகத்தின் திறவுகோலைக் கொண்டிருக்கிற இயேசு அதைத் திறந்து அனைவரையும் உள்ளே அனுமதிக்கிறார் (காண். லூக் 23:43). மேலும், திறவுகோல் என்பது மறைபொருளை விளக்குகிற, பிரச்சினையிலிருந்து நம்மை விடுவிக்கிற கருவியாகவும் இருக்கிறது.

 

‘தாவீதின் திறவுகோல்’ என்பது மூன்று விடயங்களைக் குறிக்கிறது: (அ) நகரத்தின் திறவுகோல். அதாவது, ஓர் அரசன் ஒட்டுமொத்த நகரத்தின்மேல் அதிகாரம் கொண்டிருக்கிறார். அவருடைய அனுமதியின்றி, யாரும் உள்ளே வரவும் வெளியே செல்லவும் இயலாது. (ஆ) கருவூலத்தின் திறவுகோல். ஒரு நாட்டின் சொத்துகளைப் பாதுகாக்கின்ற கருவூலத்தின் திறவுகோல் அரசரிடமே இருக்கின்றது. (இ) ஆலயத்தின் திறவுகோல். எருசலேமில் ஒரு கதவு மூடப்பட்டே இருக்கும். அதாவது, அந்தக் கதவை மெசியாவால் மட்டுமே திறக்க முடியும் என்பது இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை. மெசியா மட்டுமே அந்தக் கதவைத் திறக்கவும், மூடவும் முடியும்.

 

போர்கள் சூழ்ந்த நிலையில் குழப்பத்திலிருந்த ஆகாசு அரசனுக்கு இம்மானுவேல் அடையாளம் தருகிறார் எசாயா. ‘இது எங்ஙனம் ஆகும்?’ என்று குழப்பத்திலிருந்த மரியாவுக்கு விளக்கம் தருகிறார் கடவுளின் தூதர். ஆகாசு மற்றும் மரியா ஆகியோர் தங்களுடைய குழப்பங்கள் நீங்கி தெளிவைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

 

பிரியமானவர்களே, நம் வாழ்வின் திட்டங்களும் செயல்பாடுகளும் நம் கட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். ஆனால், அவை இறைவனின் கட்டுக்குள் இருக்கின்றன என்பதை உணர்ந்து நாம் சற்றே தள்ளி நிற்கும்போது அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறோம். குழப்பம், அச்சம், தயக்கம், கலக்கம் நம் வாழ்வைச் சூழும்போது பொறுமையுடனும் அமைதியுடனும் இருப்போம். கடவுள் வந்து திறந்துவிடும் வரை, பூட்டுபோல காத்திருப்போம். அவர் நம்மைப் பிடித்துத் திறக்குமாறு அவருடைய கைகளில் நம்மையே ஒப்புவிப்போம்.

 

தாவீதின் திறவுகோலே, எங்கள் வாழ்க்கையைத் திறந்தருளும்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: