
இன்றைய இறைமொழி
வியாழன், 30 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 30-ஆம் வாரம், வியாழன்
உரோமையர் 8:31-39. லூக்கா 13:31-35
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், ஏரோது, இயேசுவைக் கொல்லத் தேடுவதாக, பரிசேயர் வந்து அவர்களிடம் சொல்கின்றனர். இரண்டாம் பகுதியில், இயேசு எருசலேம் நகரத்தின் கடின உள்ளத்தை நினைத்துப் புலம்புகிறார்.
பரிசேயர் இயேசுவிடம் வந்து ஏரோது பற்றிச் சொல்லக் காரணம் என்ன? இயேசுவின்மேல் உள்ள அக்கறையில் சொன்னார்களா? அல்லது அவரை எச்சரிக்கும் நோக்கில் ஏரோதுவின் பெயரை இழுத்தார்களா? காரணம் எப்படி இருந்தாலும், இயேசு, தன் பணி மற்றும் பயணத்தின் இலக்கு என்பதை மிக அழகாக அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன் பயணம் இறப்பு நோக்கியே என்பதை இயேசு நன்கு அறிந்தவராக இருக்கிறார்.
‘இன்றும் நாளையும் நான் பேய்களை ஓட்டுவேன், பிணிகளைக் குணமாக்குவேன். மூன்றாம் நாளில் என் பணி நிறைவு பெறும்’ எனச் சொல்கிறார் இயேசு.
இங்கே, ‘மூன்றாம் நாள்’ என்பது இயேசுவின் உயிர்ப்பு நாளைக் குறிப்பதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், இயேசுவைப் பொருத்தவரையில் எல்லா நாள்களும் பணியின் நாள்களே. அவர் தன் பணியைத் தொடர்ந்து ஆற்றிக்கொண்டே இருப்பார்.
மேலும், இரண்டாம் பகுதியில், தனக்கு எருசலேம் இழைக்கப்போகும் அநீதியை நினைத்து அதன்மேல் கோபப்படாமல், அதைக் கண்டு பரிதாபம் கொள்கிறார். கோழி தன் இறக்கைகளுக்குள் வந்து அடைக்கலம் புகாத தன் குஞ்சுகள்மேல் கோபம் கொள்வதில்லை. அவை அழிந்து விடுமோ என்று அச்சப்படுகின்றன, அல்லது அவற்றின் இயலாமை நினைத்துப் பரிதாபப்படுகின்றன.
இந்த வாசகம் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றது:
(அ) நமக்கு எதிர்வரும் பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனக் கற்பிக்கிறது. பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகள் வரலாம். ஆனால், அவை வரும் என எதிர்பார்பத்தவருக்கு அவை எந்தவொரு அச்சுறுத்தலையும் தருவதில்லை.
(ஆ) நம் பணி மற்றும் பயணத்தின் இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். இயேசுவுக்கு இருந்தது போல.
(இ) நமக்கு எதிராகத் தீங்கு நினைப்பவர்கள், அல்லது நம்மைப் புரிந்துகொள்ளாதவர்கள்மேல் கோபப்படுவதற்குப் பதிலாக இரக்கம் கொள்வது.
இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? எனக் கேட்கிற பவுல், ‘நம்மேல் அன்புகூர்ந்தவரின் செயலால் அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம்’ என்கிறார். அன்பு நமக்கு எதிர்த்தகைவைத் தருகிறது. கடவுள்தாமே நமக்கு அனைத்தின்மேலும் வெற்றி தருகிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: