மே மாதம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் இதயங்களில் சிறப்பு பெற்ற மாதமாகும். இது இயேசுவின் தாய் தூய கன்னி மரியாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலம். மலர்கள் மலரும் இந்நேரத்தில், அன்பு, பக்தி, நன்றியுடன் மரியன்னையை மகிழ்விக்க நாமெல்லாம் அழைக்கப்படுகிறோம். மரியன்னை ஒரு வரலாற்று நபராக மட்டுமல்ல உயிரோடு நம்முடன் வாழ்ந்துவரும் தாய். சிலுவையின் அடியில் இயேசு, "இதோ உன் தாய்" (யோவான் 19:27) என்று கூறி அவரை நமக்கு தாயாகக் கொடுத்தார். அந்த நிமிடத்திலிருந்து, மரியாள் நம்மை தனது மகனான இயேசுவிடம் அழைத்துச் செல்கிறார். கானாவூர் திருமணத்தில் மரியன்னை சொன்னதுபோல், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று நம்மை வழிநடத்துகிறார்.
இன்றைய அவசரமான உலகில், மரியன்னை பக்தி நமக்கு அமைதி, ஜெபம், மனமாறுதல் மற்றும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கையை கற்றுத்தருகிறது. இறைவார்த்தையை இதயத்தில் தாங்கி வாழ்ந்த மரியாள், தாழ்மையும் நம்பிக்கையும் கொண்ட வாழ்வின் முன்மாதிரி. மரியன்னை இருக்குமிடங்களில் அமைதி நிலைக்கும், அவரை வரவேற்கும் இதயங்களில் கிறிஸ்து ஆட்சி செய்கிறார். திருஅவை நமக்கு நினைவூட்டுவது: மரியன்னை பக்தி எப்போதும் திருப்பலி மற்றும் திருவழிபாட்டிற்கு வழி நடத்த வேண்டும். உண்மையான மரியன்னை அன்பு, இயேசுவின் அன்பாக மாற வேண்டும்.
ஆகவே, இந்த மாதத்தில் செபமாலை, நவநாள் ஜெபம், மரியன்னைப் பாடல்கள் ஆகியவை நம்மை திருப்பலியில் ஆழமாக ஈடுபடுத்தட்டும். குடும்பங்கள், பள்ளிகள், ஆலயங்கள் இம்மாதத்தில் அழகிய மரபுகளை மீண்டும் உயிர்ப்பிக்கட்டும்: மே மாத முடிசூட்டல், குடும்ப செபமாலை, மரியன்னைப் பாடல்கள், இறைவார்த்தையை தியானித்தல், இரக்கச் செயல்கள், நமது தினசரி அர்ப்பணிப்பாகட்டும்.
சிறுவர்கள் "அம்மா மரியா”வை அன்புடன் அணுகட்டும். இளைஞர்கள் தூய்மை, துணிவு, சீடத்துவம் ஆகியவற்றின் முன்மாதிரியை அவரில் காணட்டும். இந்த மே மாதத்தில், உங்கள் குடும்பங்களையும் வாழ்க்கையையும் மரியன்னையின் பாதுகாப்புக்குள் ஒப்படைக்க தீபகம் அழைக்கிறது. பயம், நோய், துன்பம் எதுவாக இருந்தாலும் அன்னை மரியாவை நாடுங்கள். ஏனெனில், தாயன்புடன் அவர் எப்போதும் நமக்காக மன்றாடிக் கொண்டிருப்பவர் அன்னை மரியா.
நற்செய்தியின் நட்சத்திரமான மரியன்னை, குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பாராக. இளைஞர்களை உறுதிப்படுத்துவாராக, துன்புறுவோருக்கு ஆறுதல் அளிப்பாராக. நம் அனைவரையும் இயேசுவிடம் நடத்துவாராக.
அன்னை மரியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
என்றும் அன்புடன்
அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர் தீபகம்