• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

முட்புதர் தீய்ந்துபோகவில்லை! இன்றைய இறைமொழி. புதன், 16 ஜூலை ’25.

Wednesday, July 16, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

மிதியான் பாலைவனம் கடவுளின் உடன்படிக்கை ஆண்டவருடைய வெளிப்பாடு ஆண்டவருடைய அழைப்பு கடவுளின் உடனிருப்பு மோசே வாழ்க்கை முட்புதர் எகிப்திய ஒடுக்குமுறை

இன்றைய இறைமொழி
புதன், 16 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – புதன்
விடுதலைப் பயணம் 3:1-6, 9-12. மத்தேயு 11:25-27

 

முட்புதர் தீய்ந்துபோகவில்லை!

 

மிதியான் பாலைநிலத்தில் சுற்றித்திரிகிற மோசே அந்நாட்டின் அர்ச்சகருடைய மகளை மணம் முடிக்கிறார். திருமணம், குழந்தை, ஆடு மேய்க்கும் பணி எனத் தன் அன்றாட வாழ்வில் மூழ்கியிருந்த அவரை, காட்சி வழியாகத் தடுத்தாட்கொள்கிறார் ஆண்டவராகிய கடவுள். ‘முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.’ இது நேரிடையான காட்சி என்றாலும், இந்நிகழ்வை உருவகமாகவும் புரிந்துகொள்ளலாம்: ‘இஸ்ரயேல் மக்களின் வாழ்வு ஒடுக்குமுறையால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.’ ‘மோசேயின் உள்ளத்தில் எகிப்திக்குத் திரும்ப வேண்டும் என்னும் ஆர்வம் எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.’ ‘ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பேரன்பு எரிந்துகொண்டிருந்தது. ஆனால், தீய்ந்துபோகவில்லை.’ ஆண்டவராகிய கடவுள் தம் சார்பாக மோசேயை எகிப்துக்கு அனுப்புகிறார். ‘நான் உன்னோடு இருப்பேன்’ என்னும் வாக்குறுதியையும் தருகிறார்.

 

தந்தையாகிய கடவுளைப் போற்றிப் புகழ்கிறார் இயேசு. ஏன்? விண்ணரசு பற்றிய மறைபொருள் – அதாவது, இயேசு – ஞானியர்களுக்கு வெளிப்படுத்தப்படாமல், குழந்தைகளுக்கு – அதாவது, எளியவர்களுக்கு, சின்னஞ் சிறியவர்களுக்கு – வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, கடவுளின் வெளிப்பாட்டைப் பெறுவது நம் செயல்களாலோ அல்லது தகுதியாலோ அல்ல, மாறாக, அவருடைய அருள்கொடையினாலேயே.

 

மோசேயைப் போல நாமும் நம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளில் மூழ்கியிருக்கும்போது, ஆண்டவருடைய வெளிப்பாடும் அழைப்பும் நடந்தேறுகின்றன. ஆடுகளின்மேல் உள்ள கண்களை நாம் திருப்பி முட்செடிமேல் பதிக்க வேண்டும். நம் வாழ்வு சில நேரங்களில் முட்புதர் போல எரிந்துகொண்டிருப்பதாக உணரலாம். ஆனால், அது எரிந்தாலும் தீய்ந்துபோவதில்லை. அதுவே ஆண்டவராகிய கடவுள் நம் வாழ்வில் நிகழ்த்தும் வல்ல செயல். நம் தகுதியின் பொருட்டு அல்ல, மாறாக, அவருடைய அருளின் பொருட்டே நாம் அழைக்கப்படுகிறோம், அனுப்பப்படுகிறோம். அவருடைய உடனிருப்பே நமக்கு உற்சாகம் தருகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: