
இன்றைய இறைமொழி
வியாழன், 1 ஜனவரி ’26
புத்தாண்டு நாள்
மரியா இறைவனின் தாய் – பெருவிழா
எண் 6:22-27. கலா 4:4-7. லூக் 2:16-21
இன்று புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். மனிதர்களாகிய நமக்கு இடம் சொந்தம். கடவுளுக்கு காலம் சொந்தம். 2026 என்னும் புதிய காலத்தை தம் கரத்தில் ஏந்தி அந்தக் காலத்திற்குள் நம்மை நகர்த்துகிற கடவுளுக்கு நன்றி கூறுவோம். ‘காலங்கள் அவருடையன, யுகங்கள் அவருடையன. ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருக்கே!’
அன்னை கன்னி மரியாவை இறைவனின் தாய் (‘தெயோடோகோஸ்’) என்று எபேசு திருச்சங்கம் அறிவித்ததை நினைவுகூர்ந்து சிறப்பிக்கிறோம். கிறிஸ்து பிறப்பின் எட்டாவது நாளாகிய இன்று குழந்தைக்கு அவருடைய பெற்றோர், ‘இயேசு’ என்று பெயரிடுகிறார்கள்.
முத்து ஒன்றைத் தேடிய இளவரசன் பற்றிய கதையோடு (தழுவல்: புனித தோமாவின் பணிகள், ‘ஓர் ஆன்மாவின் பாடல்’) சிந்தனையைத் தொடங்குவோம்.
அவன் ஓர் அன்பார்ந்த இளவரசன். கீழைநாட்டின் அரசனாக அவனை முடிசூட்ட விரும்புகிற அவனுடைய பெற்றோர் அவனுடைய ஆற்றலைச் சோதிப்பதற்காக எகிப்து நாட்டில் உள்ள முத்து ஒன்றை எடுத்துவர அவனை அனுப்புகிறார்கள். விலைமதிப்பில்லாத அந்த ஒற்றை முத்தை ஒரு பெரிய பாம்பு பாதுகாத்து வந்தது. எந்நேரமும் சீறிக்கொண்டே இருக்கும் அந்த பாம்பின் பாதுகாப்பில் உள்ள முத்தை எடுத்து வருவதற்காக எகிப்து செல்கிறான் இளவரசன். மாறுவேடத்தில் இருக்கிற இளவரசன் தான் எகிப்துக்கு வந்த நோக்கத்தை யாரிடமும் சொல்லாமல் முத்தைத் தேடுவதில் கருத்தாயிருக்கிறான். ஒருநாள் தனக்கு அருகில் வசித்த ஒருவனிடம் தான் வந்த நோக்கத்தைச் சொல்லிவிடுகிறான். அடுத்த சில நாள்களில் அவனுடைய உணவில் ஏதோ ஒரு மருந்து கலக்கப்பட அவன் தான் வந்த நோக்கத்தை மறந்துவிட்டு, எகிப்திய அரசனுடைய அடிமையாக வேலை செய்யத் தொடங்குகிறான்.
இளவரசனைப் பற்றிய எத்தகவலும் இல்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த அவனுடைய பெற்றோர் தன் மகனுக்கு நேர்ந்ததைப் பற்றி வருந்தி கடிதம் ஒன்றை எழுதி கழுகின் வழியாகக் கொடுத்து அனுப்புகிறார்கள்: ‘தூக்கத்திலிருந்து நீ விழித்தெழு! நீ ஓர் இளவரசன். உன் அடிமைத்தனத்தை நினைத்துப் பார்! நீ தேடிச் சென்ற விலைமதிப்பில்லாத முத்தைப் பற்றி கருத்தாயிரு! நீ அதற்காகவே அங்கு அனுப்பப்பட்டாய்! விரைந்து வா! மாட்சியின் ஆடை உனக்காகக் காத்திருக்கிறது!’
கழுகின் வழியே வந்த செய்தி கேட்டு விழித்தெழுகிற இளவரசன் தன் வருகையின் நோக்கம் மறந்தது கண்டு வருந்தி முத்தை தேடிச் செல்கிறான். பாம்பைக் கொன்றழித்து முத்தைக் கைப்பற்றி நாடு திரும்புகிறான்.
புத்தாண்டின் முதல் நாள் அன்று நாம் அனைவருமே முத்தெடுக்கச் சென்ற இளவரசன் போல இளமையுடன் எதிர்நோக்குடனும் ஆவலுடனும் இருக்கிறோம். நாள்கள் நகர நகர நம் பயணத்தின் இலக்கை மறந்துவிட்டு அடிமையாக வாழ்கிறோம். விழித்தெழும்நாளில் முத்தைக் கண்டுகொள்கிறோம். நம் வாழ்க்கையே நாம் தேடிச் செல்லும் முத்து.
நம் தேடலை என்றும் நினைவுகூர்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் தம் அன்பார்ந்த இஸ்ரயேல் மக்களை ஆரோன் வழியாகத் தேடி வருகிறார். தலைமைக்குருவாகிய ஆரோன் ஆண்டவராகிய கடவுள் சார்பாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்க வேண்டிய ஆசியை மோசே வழியாகக் கற்பிக்கிறார்:
‘ஆசி வழங்குவாராக! அருள் பொழிவாராக! அமைதியை அருள்வாராக!’ என்று உடலுக்கும், ஆன்மாவுக்கும், உள்ளத்துக்கும் நலம் தருகிறார் ஆண்டவராகிய கடவுள்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் தங்கள் ஆற்றலால் அல்ல, மாறாக, இறைவனின் ஆற்றலால் தாங்கள் இயங்குவதை நினைவில்கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கைப் படகின் துடுப்பை இறைவனின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு நாம் கொஞ்சம் சற்றே படகில் இளைப்பாறுவோம்.
நற்செய்தி வாசகத்தில், மூன்று நபர்களின் மூன்று செயல்களை நாம் வாசிக்கிறோம்.
இடையர்கள் வானதூதர்களின் செய்தியைக் கேட்டவுடன் புறப்பட்டு வருகிறார்கள். மெசியாவைக் காண வேண்டுமெனில், ஆட்டு மந்தையை விட்டுவிட்டு நகர வேண்டும். மேலானதைப் பெற வேண்டுமெனில் கீழானதை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.
இயேசுவின் சமகாலத்தில் இடையர்கள் தாழ்வானவர்களாகக் கருதப்பட்டார்கள். பொய்யர்கள், திருடர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வழியாகவே ஆண்டவராகிய கடவுள் தம் மகனின் பிறப்புச் செய்தியை ஊராருக்கு அறிவிக்கிறார். ‘ஊருக்கும் உலகுக்கும்’ அவர்கள் அறிவித்த செய்த வியப்பை ஏற்படுத்துகிறது.
வானதூதர் மங்கள வார்த்தை சொன்னபோது அவருடைய வாழ்த்தை உள்ளத்தில் இருத்துகிறார் மரியா. பின்னர் கடவுளுடைய வார்த்தையை தம் வயிற்றில் இருத்துகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மனத்தில் இருத்துகிறார். ‘சும்பல்லோ’ என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘அனைத்தையும் கூட்டிச் சேர்த்தல்’ என்பது பொருள். வாழ்வின் புள்ளிகளை இணைத்துப் பார்க்கிறார் மரியா.
புதிய ஆண்டில் நாம் அடையும் வெற்றிக்கு மேற்காணும் மூன்று செயல்களும் அவசியம்: (அ) மேன்மையானதை அடைய தாழ்வானதை விட்டுவிட வேண்டும். (ஆ) மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு அச்சமும் இன்றி வாழ வேண்டும். (இ) வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் – நம் கட்டுக்குள் இருந்தாலும் இல்லை என்றாலும் – இணைத்துப் பார்க்க வேண்டும். அப்படி இணைத்துப் பார்ப்பதற்கான ஆழ்ந்த அமைதி வேண்டும். அவசரமும் பரபரப்பும் குறைக்க வேண்டும்.
இரண்டாம் வாசகத்தில், ‘காலம் நிறைவேறியபோது’ கடவுள் தம் மகனை அனுப்பினார் என்கிறார் பவுல். காலத்தைக் கழித்தல் வேறு, நிறைவேற்றுதல் வேறு. புத்தாண்டின் முதல் நாளில் நாம் காலத்தின் புனிதத்தை மேன்மையை உணர்ந்துகொள்வோம். நாம் செய்கிற செயல்கள், ஓடுகிற ஓட்டங்கள் அனைத்தும் காலத்தை நிறைவேற்றுவதற்காக இருக்க வேண்டுமே அன்றி, காலத்தைக் கழிப்பதற்காக அல்ல.
காலத்தின் ஓட்டத்தில் இருக்கும் நாம், காலத்தைக் கடந்த நிலையை அடைவதையே இலக்காகக் கொள்வோம்.
நாம் தேடி வந்த முத்தை எடுத்தவுடன், நமக்காகக் காத்திருக்கும் மாட்சி என்னும் ஆடை நோக்கி ஓடுவோம். நம் வாழ்வின் நோக்கத்தை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். நம் எண்ணம் எல்லாம் விலையுயர்ந்த முத்தைக் குறித்ததாகவே இருக்கட்டும். சீறும் எந்தப் பாம்பையும் நாம் வென்றுவிடலாம். ஏனெனில், நாம் இளவரசர்கள், இளவரசிகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்புடன்,
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: