இன்றைய இறைமொழி
வெள்ளி, 1 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 17-ஆம் வாரம், வியாழன்
புனித அல்ஃபோன்ஸ் மரிய லிகோரியார், ஆயர், மறைவல்லுநர்
லேவியர் 23:1, 4-11, 15-16, 27, 34-38. மத்தேயு 13:54-58
இயேசு தன் சொந்த ஊரில் நிராகரிக்கப்படும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் நேரிடையாகவே பதிவு செய்கின்றனர். யோவான், இந்நிராகரிப்பை உருவகமாக எழுதுகின்றார்: ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை’ (காண். யோவா 1:11).
இயேசுவின் இருத்தலும் இயக்கமும் அவருடைய சொந்த ஊராரிடம் ஒரே நேரத்தில் இரண்டு வகை உணர்வுகளை எழுப்புகின்றன: ஒன்று, வியப்பு. இரண்டு, தயக்கம். இயேசுவின் போதனையைக் கண்டு வியப்படைகின்றனர். போதித்தல் என்பது ரபிக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று என்ற பின்புலத்தில், ரபி அல்லது ரபி பள்ளியின் பின்புலம் எதுவும் இல்லாமலேயே இயேசு போதிப்பது அவர்களுக்கு வியப்பு தருகின்றது. அந்த வியப்பை அவர்கள் தயக்கமாக மாற்றுகின்றார். ‘என்ன இருந்தாலும் இவர் …’ என்று ஒருவர் சொல்லத் தொடங்க, ஒவ்வொருவராக அதைத் தொடர்கின்றனர்.
போதகராகவே ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்ற மக்கள் தன்னைக் கடவுளாக அல்லது கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணத்தில் இயேசு வல்ல செயல்கள் எதுவும் அங்கு செய்யவில்லை. மாற்கு நற்செய்தியாளர், இதையே, ‘வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை’ என்று பதிவு செய்கின்றார்.
‘இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?’ என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. அவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து, ‘இறைவனிடமிருந்து’ என்று சொல்ல இயலாதவாறு, அவர்களுடைய முற்சார்பு எண்ணம் அவர்களைத் தடுத்தது.
நிராகரிக்கப்படுதல் ஒரு கொடுமையான உணர்வு.
ஊராரின் மனநிலை இயேசு தங்களைப் போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறது.
அடுத்தவரும் என்னைப் போலவே இருந்துவிட்டால் எனக்கு நெருடல் இல்லை. என்னைவிட அவர் சிறந்தவர் என்ற எண்ணம் வரும்போதுதான் தயக்கம் வருகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: