• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அழைப்பின் மேன்மையும் விலையும். இன்றைய இறைமொழி. புதன், 1 அக்டோபர் ’25.

Wednesday, October 1, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இறையாட்சி குழந்தை இயேசுவின் புனித தெரசா சிறுமலர் குழந்தை தெரசா அழைப்பின் மேன்மை அழைப்பின் விலை சீடத்துவ மேன்மை சீடத்துவ முதன்மை வசதி இழத்தல் பாதுகாப்பு இழத்தல் உறுதியற்ற தன்மை இழத்தல் முதன்மைகள் இழத்தல் உறவுகள் இழத்தல் முன்னோக்கிய பார்வை திரும்பிப் பார்த்தல் நெகேமியா சீடத்துவ முழுமை சீடத்துவ அர்ப்பணம்

இன்றைய இறைமொழி
புதன், 1 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் வாரம்
குழந்தை இயேசுவின் புனித தெரசா – நினைவு

நெகேமியா 2:1-8. லூக்கா 9:57-62

 

அழைப்பின் மேன்மையும் விலையும்

 

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய மூவர் இயேசுவை எதிர்கொள்ளும் நிகழ்வே இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு இம்மூவருடனும் உரையாடுகிறார். ஒவ்வோர் உரையாடலும் சீடத்துவத்தின் மேன்மை மற்றும் அதற்கு ஒருவர் தர வேண்டிய விலையையும் முன்மொழிகிறது.

 

(அ) உரையாடல் ஒன்று: வசதி என்னும் விலை

 

‘நான் உம்மைப் பின்பற்றுவேன்’ என்று ஒருவர் இயேசுவிடம் கூறுகிறார். அவருக்கு விடையளிக்கிற இயேசு, மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை என்கிறார். வசதி வாய்ப்புகள், சௌகரியங்கள் போன்றவற்றை இழத்தல் ஒருவர் சீடத்துவத்துக்குக் கொடுக்க வேண்டிய விலையாக இருக்கிறது.

 

(ஆ) உரையாடல் இரண்டு: முதன்மைகள் என்னும் விலை

 

தம்மைப் பின்பற்றி வருமாறு இயேசு ஒருவரை அழைக்க, அவரோ, ‘தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதி தாரும்!’ என்கிறார். ‘இறந்தோர் அடக்கம் செய்யப்படுவார்கள்’ என மொழிகிற இயேசு, ‘நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்’ என்கிறார். சீடத்துவத்தில் முதன்மைகள் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், கவனச்சிதறல்கள் அறவே கூடாது.

 

(இ) உரையாடல் மூன்று: திரும்பிப் பார்த்தல் என்னும் விலை

 

தானாக இயேசுவைப் பின்பற்ற விழைகிற ஒருவர், ‘நான் போய் முதலில் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர வேண்டும்!’ என்கிறார். ‘கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கிறவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல’ எனப் பதில் கூறுகிறார் இயேசு. இந்த உரையாடல் எலியா-எலிசா உரையாடலை நமக்கு நினைவூட்டுகிறது. எலிசா தான் அழைக்கப்பட்டபோது வீட்டுக்குச் சென்று தான் பயன்படுத்திய கலப்பையை உடைத்து விறகாக்கி, தன் எருதுகளை விருந்தாகப் படைக்கிறார். ஆனால், இங்கே உழுபவர் திரும்பிப் பார்த்தல் என்னும் உருவகத்தைப் பயன்படுத்துகிறார் இயேசு. திரும்பிப் பார்த்துக்கொண்டே உழுபவரின் வேகம் குறையும். அவர் தன் கால்களையும் காயப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், உடனடியாக முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் இயேசு.

 

நம் வாழ்வின் அழைத்தல் மேன்மையாக இருக்கும்போது, அதனுடன் வருகிற வலிகளும் அதிகமாகவே இருக்கின்றன. வசதிக்குறைவுகள் ஏற்றல், முதன்மைகளைச் சரிசெய்தல், உடனடியாக முடிவெடுத்து முன்னேறிச் செல்தல் என்பவை இயேசு தருகிற சீடத்துவப் பாடங்களாக அமைகின்றன.

 

இந்த மூன்று பாடங்களையும் தன் வாழ்வில் செயலாற்றுபவராக நம் முன் நிற்கிறார் நெகேமியா. இன்றைய முதல் வாசகம், நெகேமியா நூலின் தொடக்கப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாரசீக நாட்டு மன்னரின் அரண்மனையில் இருக்கிற நெகேமியா எருசலேமில் உள்ள தன் மூதாதையரின் கல்லறைகளைச் சரி செய்ய விழைகிறார். எருசலேம் நகரைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது. இந்தப் பணியை ஏற்றால் அவர் எருசலேம் பயணம் செய்ய வேண்டும், நிறைய வசதிக் குறைவுகளைச் சந்திக்க வேண்டும். இருந்தாலும் புறப்படுகிறார். தான் போவதற்கு முன்பாக அரசரின் அனுமதி பெறுதல், வழிகளைக் கடப்பதற்கான அனுமதி பெறுதல், மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி பெறுதல் என முதன்மைகளைச் சரிசெய்கிறார். உடனடியாக முடிவெடுத்து அவர் முன்னேறிச் செல்லாவிட்டால், அரண்மனையில் அடிமையாகவே இருந்து தன் வாழ்வை முடித்திருப்பார். உடனடிச் செயல்பாடு சிறந்த தலைவராக அவரை உயர்த்துகிறது.

 

தான் சமாரியர்களால் நிராகரிக்கப்பட்ட இடத்தில், தன்னைப் பின்பற்றி வருபவர்கள் கொண்டிருக்க வேண்டிய சீடத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு.

 

‘நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்’ என்று தன்னிடம் சொன்ன ஒரு இளவலிடம், சீடத்துவத்தின் சவால்களை முன்வைக்கிறார் இயேசு.

 

மற்ற இரு இளவல்களிடம், ‘என்னைப் பின்பற்றி வாரும்,’ என இயேசுவே சொல்ல, அவர்களில் ஒருவர் தன் தந்தையை அடக்கம் செய்வதிலும், மற்றவர் தன் வீட்டில் பிரியாவிடை பெறுவதையும் முன்வைக்கின்றனர்.

 

‘கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் உழுவதற்கு தகுதியற்றவர்’ என்ற தன் சமகால பழமொழியால் அவர்களுக்கு விடை பகர்கின்றார் இயேசு.

 

இது ஒரு விவசாய உருவகம். கலப்பை என்பது இன்றைய நவீன டிராக்டர் கலப்பை, சட்டி கலப்பை, ஜே.சி.பி, பொக்லைன் என மாறிவிட்டது.

 

கலப்பையில் கை வைத்து உழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கும்?

 

அ. கலப்பை நேர் கோட்டில் செல்லாது

 

ஆ. உழுத இடத்தையே உழுது கொண்டிருக்கும் நிலை வரும்

 

இ. உழுகின்ற நபரின் காலையே கலப்பை நோகச் செய்துவிடும்

 

இது இயேசுவைப் பின்பற்றும் சீடத்துவத்திற்கும் பொருந்தும்.

 

அ. வாழ்க்கை நேர் கோட்டில் செல்லாது.

 

ஆ. புதியதாக எதுவும் செய்யாமல் செய்ததையே திரும்ப செய்வதில் இன்பம் காண வைக்கும்.

 

இ. சீடருக்கே அது ஆபத்தாக முடியும்.

 

மேலும், திரும்பிப் பார்க்கும்போது நாம் இறந்த காலத்திற்குள் மீண்டும் செல்கின்றோம். நாம் பழையவற்றில் இன்பம் காண எத்தனிக்கிறோம். ஆனால், வாழ்வு என்பது நிகழ்காலத்திலும், புதியது தரும் சவாலை எதிர்கொள்வதிலும் இருக்கிறது என்கிறார் இயேசு.

 

சீடத்துவத்தின் மூன்று முக்கிய பண்புகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு:

 

அ. ‘நரிகளுக்கு பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்கு கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை’

 

நாம் வசிக்கும் வீடு நமக்கு ஒரு முக்கியமான இடம். இந்த உலகத்தில் எங்கு நமக்கு இடம் இல்லை என்றாலும் நம்முடைய வீட்டில் நமக்கு இடம் உண்டு. பசியாய், தாகமாய் இருந்தாலும் வீட்டில் நாம் தங்கிக்கொள்ள முடியும். யாருடைய துணையும் இல்லாமல் வீட்டிற்குள் நம்மால் இருந்துகொள்ள முடியும். ஆக, வீடு நமக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறது. ஆனால், இயேசு தனக்கு உறுதித்தன்மையும், பாதுகாப்பு உணர்வும் இல்லை என்றும், தன்னுடைய சீடர்களும் அதே மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் சொல்கிறார். ஏன்? வீடு நமக்கு எந்த அளவுக்கு உறுதித்தன்மையையும், பாதுகாப்பு உணர்வையும் தருகிறதோ அந்த அளவுக்கு நம்மைச் சிறைபிடித்தும் விடுகிறது. சிலர் தாங்கள் வீடு கட்டி விட்டதால் அந்த இடத்தை விட்டு புலம் பெயர வாய்ப்பு கிடைத்தாலும் புலம் பெயராமல் வீட்டை மட்டுமே பற்றிக்கொண்டு இருந்துவிடுகின்றனர். சீடராக இருப்பவர் வாழ்வின் உறுதியற்ற தன்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் அனுபவிப்பவராக இருக்க வேண்டும்.

 

ஆ. ‘வருகிறேன். ஆனால், அப்பாவை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன்’

 

இரண்டு அர்ப்பணங்கள் ஆபத்தானவை. இந்த நபர் இரண்டு மான்களை ஒரே நேரத்தில் விரட்ட முனைகின்றார். சீடத்துவத்திற்கான அர்ப்பணம் முழுமையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் இயேசு.

 

இ. ‘கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் கூடாது’

 

கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்த்தல் உழுதலைத் தாமதமாக்கும், கோணல் மாணலாக்கும். அதைவிட, உழுபவரின் காலில் ஏர் பாய்ந்து கால் புண்படும். புளிப்பு மாவு போன்றது இது. புளிப்பு மாவை கலந்து மாவில் வைத்துவிட்டால் அவ்வளவுதான். அது தன்னுடைய பாதையில் முன்னோக்கிச் செல்லும். புளிக்காரத்தை நிறுத்தவோ, அதை திரும்ப சரி செய்யவோ இயலாது.

 

உறுதியற்ற தன்மையை ஏற்றல், முழுமையான அர்ப்பணம் தருதல், முன்னோக்கிச் செல்தல் – இவை மூன்றும் சீடத்துவத்திற்கான பண்புகள்.

 

இன்று நாம் சிறுமலர் குழந்தை தெரசாவின் (சின்ன ராணி, மௌனப்புன்னகையாள்) திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘சிறிய வழி’ என்னும் அரிய வழியைக் கற்றுக்கொடுத்தவர் இவர். குழந்தை போன்ற உள்ளம் கொண்டிருத்தலும், வாழ்வின் பெரியவற்றை விட சிறியவற்றைத் தழுவிக்கொள்வதே நலம் என்றும் கற்றுத் தருகின்றார் இவர்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: