• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

புனிதத்தின் முன்சுவை. இன்றைய இறைமொழி. சனி, 1 நவம்பர் ’25.

Saturday, November 1, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

எதிர்நோக்கு மனச்சுதந்திரம் புனிதம் புனிதர் அனைவர் பெருவிழா அனைத்துப் புனிதர்கள் விழா புனிதர் நிலை புனித கார்லோ அகுதிஸ் புனித பியர் ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தி புனித தேவசகாயம் பொதுநிலையினர் பாதுகாவலர் புனித வாழ்வு மகிமைபெற்ற திருஅவை முத்திரையிடப்பட்டவர்கள் புனித விழுமிய வாழ்வு உயரிய மாற்றம் சுதந்திரப் பறவை உள்ளார்ந்த போராட்டம் உண்மை வாழ்க்கை இறைபிரச்சன்னம் சாந்தமானவர் உண்மையானவர் கடவுள் நம்பிக்கைக்குரியவர்

இன்றைய இறைமொழி
சனி, 1 நவம்பர் ’25
புனிதர் அனைவர் பெருவிழா
திருவெளிப்பாடு 7:2-4, 9-14. 1 யோவான் 3:1-3. மத்தேயு 5:1-12அ

 

புனிதத்தின் முன்சுவை

 

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திருத்தந்தை 14-ஆம் லியோ இரண்டு பேரை – கார்லோ அகுதிஸ் மற்றும் பியர் ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தி என்னும் இரண்டு இளவல்களை – புனிதர் நிலைக்கு உயர்த்தினார். புனிதர் நிலை என்பது அனைவருக்கும் சாத்தியம் என்ற எதிர்நோக்கு இந்த நிகழ்வின் வழியாக பலருக்குக் கிடைத்தாலும், கார்லோ அகுதிஸைவிட துன்பப்பட்டவர்களோ, அல்லது ஜோர்ஜோ ஃபிரஸ்ஸாத்தியைவிட கூர்நோக்கு கொண்ட இளவல்களும் எங்கள் நாட்டிலும் இருக்கிறார்கள் என்ற ஏக்கம் பலர் உள்ளங்களில் எழுந்தது.

 

புனிதர் அனைவரையும் திருஅவை கண்டுகொள்வது சாத்தியம் இல்லை! அல்லது அது சில நேரங்களில் கண்டுகொள்ளவில்லை!

 

கார்லோ அகுதிஸ் அவர்களுடைய திருப்பண்டத்தைச் சேகரித்து அதை நம் ஆலயங்களில் நிறுவி காணிக்கை எடுக்கும் அக்கறையை நாம் நம் பங்கின் இளையோர்களை ஊக்குவிப்பதிலோ, அல்லது கார்லோ அகுதிஸ் போல கணினி கற்பிப்பதிலோ நாம் காட்டுவதில்லை. புனிதர்கள் என்பவர்கள் நம் வாழ்வின் துன்பங்களைப் போக்குபவர்கள், நோய், வறுமை, இறப்பு ஆகியவற்றினின்று விடுவிப்பவர்கள் என்று நாம் அவர்களுடைய மேன்மையைக் குறைத்துவிட்டதும் வருத்தத்திற்குரியது.

 

இன்னொரு பக்கம், புனித தேவசகாயம் அவர்கள் பொதுநிலையினரின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார். புனித தேவசகாயம் அவர்கள் துன்புற்றபோது திருஅவை அவருடன் நிற்கவில்லை. ஆனால், அவர் இறந்த பின்னர் அவரைப் புனிதராகக் கொண்டாடுகிறது. கந்தமாலில் சமயத் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க இப்போது முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் நம்மோடு இருந்து துன்புறும்போது அவருக்கு ஆதரவாகச் செயல்படாமல் இருந்துவிட்டு அவரைப் புனிதராக்கி தேரில் தூக்கிச் செல்வதால் (அவருக்கு) என்ன பயன்?

 

பிரான்சு நாட்டின் முக்கிய நகரில் வாழும் ஒரு பெண் கண்பார்வை இழந்த தன் கணவரையும், 23 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள மகனையும் ஒருநாள் விடாமல் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.

 

படுத்த படுக்கயாகக் கிடக்கிற தன் தாய்க்குப் பக்குவம் பார்த்து, நினைவுக்குறைவால் வருந்தும் தன் சகோதரிக்குத் தேவையானதைச் செய்துவிட்டு விரைவாக அலுவலகம் செல்கிறார் ஒரு பெண்.

 

தந்தையின் இறப்பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் கடன்சுமையைச் சுமக்க தன் கல்லூரிப் படிப்பை இடையில் விட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தின் சுமையைச் சுமக்கிறார் இளைஞர் ஒருவர்.

 

திருஅவையின் அட்டவணைக்குள் வராதவர்கள், ஆனால், புனித வாழ்வை வாழ்ந்தவர்கள், அல்லது திருஅவையின் போதனைப்படி ‘மகிமைபெற்ற திருஅவையில்’ இருக்கும் அனைத்து இனியவர்களின் திருநாள் இன்று. இன்றைய முதல் வாசகம் (காண். திவெ 7:2-4,9-14) இவர்களை முத்திரையிடப்பட்டவர்கள் என்றழைக்கின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் யோவான், நாம் இங்கேயே கடவுளின் மக்களாக இருக்கிறோம் என்று புனித நிலையை இவ்வுலகம் சார்ந்ததாகப் பதிவு செய்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவில் காணப்படும் பேறுபெற்றோர் பாடத்தை வாசிக்கின்றோம். இக்குணங்களைக் கொண்டிருப்பவர்கள் புனித நிலையை அடைகிறார்கள் அல்லது விண்ணரசை உரிமையாக்கிக்கொள்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள முடியும்.

 

உரோமையில் புனிதர் பட்டமளிப்பு விழா நடந்த மறுநாளில் இணையதள தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றில் அதே செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குப் பின்னூட்டம் இட்டவர்களில் ஒருவர், ‘மனிதர்களாகச் சேர்ந்து ஒருவரை எப்படி புனிதராக்க முடியும்?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். புனிதராக்குகின்ற மனிதர்கள் இறைவனின் பெயரால், திருஅவையின் பெயரால், அல்லது இறைமக்களின் பெயரால் இந்நிகழ்வை நடத்துகிறார்கள் என்று நாம் சொன்னாலும் அவருக்கு அப்பதில் ஏற்புடையதாக இருக்காது.

 

‘நான் நீதிமான்களை அல்ல. பாவிகளையே அழைக்க வந்தேன்’ என்று சொன்ன இயேசு, ‘அனைத்துப் புனிதர்கள் விழா’ கொண்டாட விரும்புவாரா? என்று கேட்டார் என் நண்பர். இயேசு ஒருவேளை நம்மோடு இருந்தால் ‘அனைத்துப் பாவிகள் விழா’ தான் கொண்டாடியிருப்பார் என்றார் அவர்.

 

புனிதர்களை நாம் மிகவும் கொண்டாடி அவர்களை அந்நியப்படுத்திவிடும், அல்லது உடுப்பி ஓட்டல் சர்வர் நிலையில், நம்மிடம் ‘ஆர்டர்’ எடுத்து, அதைக் கொண்டு வந்து நம் தட்டில் வைக்கும் நபராகப் பார்க்கும் போக்கும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறது.

 

அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் வாழ்வதோ, அல்லது அவர்கள் விட்டுச்சென்ற விழுமியங்களை வாழ்வாக்குவதோ நமக்குக் கடினமாக இருக்கும் என்று, அவர்களின் வழித்தோன்றல்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்களது பக்தர்களாக மாறும் எளியை வழியைத் தெரிவுசெய்துகொண்டோமோ என்று கேட்கவும் தோன்றுகிறது.

 

இந்தத் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

 

ஒன்று,

 

‘உங்களுக்குப் புனிதராக விருப்பமா?’ என்று நம்மிடம் யாராவது கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்? புனிதர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தாம். ஆனால், சாதாரண மனிதர்களைவிட அவர்கள் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா’ செய்தார்கள். அந்தக் கொஞ்சம் ‘எக்ஸ்ட்ரா’ தான் அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துகிறது. அவர்கள் யாரும் செல்லாத பாதையில் நடந்து சென்றார்கள்.

 

பயத்தால் பீடிக்கப்பட்ட மக்கள் நடுவே கொஞ்சம் எக்ஸ்ட்ரா துணிச்சல் கொண்டார்கள் – செபஸ்தியார் போல! தன் திறமை மதிக்கப்படாத இடத்தில் கொஞ்சம் எக்ஸ்டரா பொறுமை காத்தார்கள் – பதுவை அந்தோனியார் போல! சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைத்தவர்கள் நடுவில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கொடுத்தார்கள் – பிரான்சிஸ் அசிசி, வனத்து அந்தோனியார் போல! இவர்கள் சேரி மக்கள். இவர்களுக்கு என்ன செய்ய முடியும்? என்று கேட்டவர்கள் நடுவில், அந்த மக்களுக்காக கொஞ்சம் எக்ஸ்ட்ரா தன் ஆற்றலையும் நேரத்தையும் கொடுத்தார்கள் – அன்னை தெரசா போல! இப்படி இவர்கள் கொஞ்சம் கொஞ்சம் எக்ஸ்டரா செய்தார்கள். அவ்வளவுதான்!

 

நம்முடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் என்று நம்மிடையே வாழ்ந்து இன்று மறைந்தவர்களும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்தவர்கள்தாம் – அவர்களும் இன்று புனிதர்களே! ஆக, நாம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யும்போதும், எக்ஸ்டரா மைல் நடக்கும்போதும் புனிதராகிறோம்.

 

இரண்டு, இருப்பது அல்ல, மாறுவது. இருப்பது அல்ல, மாறுவதே மதிப்பு பெறுகிறது. மாற்றம் கூடக்கூட மதிப்பு கூடுகிறது. பால் மதிப்புக்குரியதுதான். ஆனால், பால் தயிரானால் அதன் மதிப்பு கூடுகிறது. வெண்ணெய் அல்லது பாலாடைக்கட்டியானால் இன்னும் கூடுகிறது. பால்கோவா, பால் அல்வா ஆனால் இன்னும்கூடுகிறது. நெய் ஆனால் இன்னும் அதிக மதிப்பு பெறுகிறது. ஆனால், இந்த மாற்றம் எளிதான செயல் அல்ல. இந்த மாற்றத்திற்கு தன்னையே உட்படுத்த பால் நிறைய சூட்டைத் தாங்க வேண்டும், பாத்திரம் விட்டு பாத்திரம் மாற வேண்டும், மத்தால் திரிக்கப்பட வேண்டும், கையால் சுரண்டப்பட வேண்டும்.

 

புனிதர்கள் சொல்லும் இரண்டாம் பாடம் இதுதான். நாம் இருப்பதில் அல்ல. நாம் எப்படி மாறுகிறோம் என்பதில்தான் மதிப்பு இருக்கிறது.

 

பாரக் ஒபாமா அவர்களின் மனைவி மிஷல் ஒபாமா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை, ‘பிகமிங்’ என்ற தலைப்பில் நூலாக உருவாக்கியுள்ளார். ‘நான் என்னவாக மாற விரும்புகிறேன்’ என்ற கேள்வி நம்முடைய இருப்பையே புரட்டிப்போடும் என்கிறார். ‘அவரால் முடியும், அவளால் முடியும். என்னால் ஏன் முடியாது?’ என்று கேட்டதால்தான் லொயோலா இஞ்ஞாசியார் மாற்றத்தின் கருவியாகிறார். ஆக, நாம் எப்படி மாற வேண்டும் என்பதைக் கற்றுத்தருகிறார்கள் புனிதர்கள்.

 

மூன்று, எதிர்நோக்கு. ‘எல்லாம் கடந்துவிடும்’ என்பர். சரி! கடந்தால் என்ன? கடந்தாலும் காத்திருத்தல்தான் எதிர்நோக்கு. ‘எல்லாம் கடந்துவிடும்’ என நினைப்பவர்கள் புனிதர்கள் ஆக முடியாது. ‘துன்பம் கடந்துவிடும்’ என்று செபஸ்தியார் நினைத்திருந்தால் ஓய்ந்திருப்பார் இல்லையா? எதிர்நோக்கு கொண்டிருந்தார். கடந்துவிடுவதற்கு முன் துன்பத்தை ஏற்கின்றார். நம் வாழ்வில் எதிர்நோக்கு என்னும் மெழுகுதிரியை நாம் அணையாமல் காத்துக்கொள்ள நம்மைத் தூண்டுகின்றனர் புனிதர்கள். கொஞ்சம் எக்ஸ்ட்ரா, கொஞ்சம் மாற்றம், கொஞ்சம் எதிர்நோக்கு – இதுவே புனிதம்!

 

நாம் எல்லாருமே புனிதர்கள், இப்போது வரை. ஆனால் இன்னும் நாம் புனிதர்களாக நம்மை முழுமையாக வெளிப்படுத்தவில்லை – நமக்கு, பிறருக்கு, இந்த உலகத்திற்கு. ஆனால் கடவுளுக்குத் தெரியும் நாம் எந்த சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று. அவருக்குத் தெரியும் நாம் யாரைப்போல உருப்பெற்றவர்கள் என்று. அவருக்குத் தெரியும். அவருக்குத் தெரியும் நாம் புனிதர்களென்று!

 

இதோ! கொஞ்சம் கொஞ்சமாக நாம் புனிதர்களாக வளர்கிறோம். நம்மிலிருந்து நாம் வெளியே வருகிறோம். நம் கூட்டை நாமே கொத்திக் கொத்தி உடைத்துக் கொள்கிறோம். நம்மை நாமே படைத்துக் கொண்டிருக்கிறோம். கடவுளே நம் உள்ளிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நம்மால் மட்டும் தான் அதை உணர முடியும் – கொஞ்சம் கொஞ்சமாக, நம் இயல்பு நிறைவு பெறும் போது!

 

அப்படியென்றால், யார் புனிதர்? புனிதர் என்பவர் மனச்சுதந்திரம் பெற்றவர். தன் வாழ்வின் ஆதாரத்தோடு தொடர்பு கொண்டிருப்பவர். தன் மையம் எது என்ன என்பதைக் கண்டுகொண்டவர். புனிதருக்குத் தெரியும் தான் எங்கிருந்து வந்தோம் என்பதும் எங்கே செல்கிறோம் என்பதும்! தான் வலுவற்றவன் தான் என்றாலும், தான் படைக்கப்பட்டது நிரந்திரத்திற்கு என்பதை அவருக்குத் தெரியும்!

 

புனிதர் என்பவர் ஒரு சுதந்திரப் பறவை! அவர் தன் வேர்களிலிருந்தும், தன் குணாதிசயத்திலிருந்தும், தன் வரையறைகளிலிருந்தும், தன் பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் அல்ல – இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால் தான் அவர் புனிதரா? – புனிதர் என்பவர் இவைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவைகள் வழியாகவும், இவைகளிலும் சுதந்திரமாகக் கடந்து செல்பவர்.

 

புனிதர் தன் உள்ளார்ந்த போராட்டங்களை வென்று வெற்றிகரமாக வெளியே வந்தவர்! புனிதர் எந்த நிலையிலும் தன்னை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும் என்று நினையாதவர்! புனிதர் கடவுளை நோக்கி கதறியழத் தெரிந்தவர். சின்னக் குழந்தை போல எல்லாவற்றையும் நம்பத் தெரிந்தவர்.

 


தன்னோடும், தன் அருகில் இருப்பவரோடும் சமாதானம் செய்து கொள்பவர். புனிதர் தன்னிடம் இல்லாததை நினைத்து வருந்துபவர் அல்ல. இருப்பதை வைத்து மகிழ்பவர்.

 

புனிதருக்கு நடிக்கத் தெரியாது. முகமூடி அணியத் தெரியாது. மற்றவரின் வாழ்வைப் போல தன் வாழ்வை அவர் அமைத்துக் கொள்ள ஒருபோதும் அவர் நினைப்பதில்லை. மற்றவரைப் போல வாழ வேண்டும் என்றும் எண்ணுவதில்லை. தன்னைப் போல இருப்பதே தனக்குப் போதும் என்று உறுதியாக நம்புபவர். புனிதருக்கு தன் உண்மை என்ன என்று தெரியும்! தான் யாரென்று தெரியும்! காற்று நிரப்பப்பட்ட பலூன் அல்ல அவர். காற்றே இல்லாத பலூனும் அல்ல அவர். ஆற்றலோ, ஆசைகளோ, ஆண்மையோ இல்லாதவர் அல்ல அவர்.

 

புனிதர் தானே உலகைப் படைத்து அதை பரிசாக தன் கடவுளுக்குப் படைப்பவர் அவர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், சந்திக்கும் ஒவ்வொரு நபரிலும், சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீரிலும், வியர்வையிலும் கடவுள் ஒளிந்திருப்பது அவருக்குத் தெரியும்.

 

புனிதர் பொருட்களையும், உடலையும், உடலின் மணத்தையும், சுகத்தையும், அதன் நிறத்தையும், வழுவழுப்பையும் அன்பு செய்பவர். வாழ்வின் எதார்த்தங்கள் ஒரு இசை போல ஒழுங்கானவை என்றும் அதே நேரத்தில் கடினமானவை என்பதையும் உணர்ந்தவர்.புனிதர் எல்லாரையும் விட்டு ஒதுங்கி நிற்பவர் அல்ல. சாதாரணமானவர்களோடு சாதாரணமாக நிற்பவர். வாழ்வோடு முழுமையாகக் கலந்தவர். தன் உடலின் உணர்வுகளோடு வாழத் தெரிந்தவர். ஆனால் அவர் எதையும் மிகைப்படுத்துவதில்லை.

 

புனிதர் சாந்தமானவர். ஆகையால் தான் இந்த உலகை அவர் உரிமையாக்கிக் கொள்கிறார். அங்கே மகிழ்ச்சியாக அவர் வாழ்கிறார். புனிதர் தனக்குத் தானே சிரிக்கத் தெரிந்தவர். தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தயங்காதவர். புனிதர் தன்னால் இயன்றவற்றை முழுமையாகச் செய்பவர் – தன் முழு ஆற்றலோடு செய்பவர். தான் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பார். இந்த உலகத்தைத் தான் ஒருவர் தான் மாற்ற முடியும் என்றும் மீட்க முடியும் என்றும் அவர் நினைப்பதில்லை. புனிதர் தன்னைக் கடவுளாக எண்ணிக்கொள்வதில்லை. புனிதர் மனிதர்களை மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாதவரையும் அன்பு செய்பவர். அவைகளோடு தான் இணைக்கப்பட்டுள்ளதை அறிந்தவர் அவர். புனிதர் உண்மையானவர்.

 

புனிதர் சில நேரங்களில் கடவுளை அறிவதில்லை! அவர்கள் கடவுளை மறந்து விடுவார்கள்! அவர்கள் கடவுளை திட்டுவார்கள்! அவர்கள் கடவுளிடம் சண்டை போடுவார்கள்! ஆனால் அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்று.

 

இனிய திருநாள் வாழ்த்துக்கள்! புனிதர்களாகிய உங்கள் அனைவருக்கும்!

 

புனிதத்தின் முன்சுவையை நாம் இன்று அனுபவிக்க நம்மை அழைக்கிறது இத்திருநாள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: