இன்றைய இறைமொழி
சனி, 2 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 17-ஆம் வாரம், சனி
லேவியர் 25:1, 8-17. மத்தேயு 14:1-12
உயிர்ப்புப் பெருவிழா நள்ளிரவுத் திருப்பலியில் புதிய நெருப்பு அர்ச்சிக்கப்படும்போது, திருத்தொண்டர், ‘காலங்கள் அவருடையன யுகங்களும் அவருடையன’ எனக் கூறுகிறார். இடம் மனிதர்களுக்கு உரியது, காலம் கடவுளுக்கு உரியது. ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதியாகிய இன்று நான் எங்கே இருக்க வேண்டும் என்பதை என்னால் தெரிவு செய்ய இயலும். ஆனால், ஆகஸ்ட் 2 நான் இருப்பதைத் தெரிவு செய்ய என்னால் இயலாது. இது கடவுளால் வழங்கப்படுகிற ஒரு கொடை. கடவுள்தாமே ஒவ்வொன்றையும் அதனதன் நேரத்தில் செய்து முடிக்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் யூபிலி கொண்டாட்டம் பற்றிய அறிவுரையை இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார். ‘ஓய்வு, ஒப்புரவு, ஆய்வு, ஆரம்பம்’ என்பது யூபிலி ஆண்டின் இலக்காக இருக்கிறது. ஆண்டவராகிய கடவுள் அனைத்தையும் செய்கிறார் என்பதை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்துகொள்வதற்கு யூபிலி அழைப்பு விடுக்கிறது.
கடன்களை மன்னிக்கவும், நிலத்திற்கு ஓய்வு கொடுக்கவும், அடிமைகளுக்கு விடுதலை தரவும் யூபிலி ஆண்டு அழைப்பு விடுக்கிறது. அறிவுரையின் இறுதியில், ‘நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்’ என மொழிகிறார் கடவுள். கடவுளுடைய பேரிரக்கத்தின்மேல் நம்பிக்கை கொண்டவர்களாக இஸ்ரயேல் மக்கள் வாழவும், அவர்கள் கடவுளிடமிருந்து பெறுகிற இரக்கத்தை நற்செயல்கள் வழியாக மற்றவர்களோடு அவர்கள் பகிர்ந்துகொள்ளவும் அழைப்பு பெறுகிறார்கள்.
நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவான் கொல்லப்படும் நிகழ்வை வாசிக்கிறோம். அவருக்கு வரையறுக்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை அவர் அறிந்ததோடல்லாமல் அவர் அதைச் செயல்படுத்துகிறார். ஏரோதுவின் குழப்பமான மனநிலையையும் நாம் இங்கே காண்கிறோம். மனக்குழப்பத்தில் இருக்கிற ஏரோது தீமை செய்வதைத் தேர்ந்துகொள்கிறார். நம் வாழ்வில் சில நேரங்களில் சூழல் நம்மை தவற்றில் சிக்கவைக்கிறது.
கடவுள்தாம் அனைத்திலும் அனைத்துமாய் செயலாற்றுகிறார் என்ற பரந்த புரிதல் இருக்கும்போது வாழ்க்கைப் பயணம் இனிதாகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: