இன்றைய இறைமொழி
வியாழன், 2 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் வாரம்
தூய காவல் தூதர்கள் – நினைவு
நெகேமியா 8:1-4, 5-6, 7-12. மத்தேயு 18:1-5, 10
சீடத்துவத்துக்கான மூன்று பாடங்களை – வசதியின்மை ஏற்றல், முதன்மைகளைச் சரிபடுத்துதல், முடிவு எடுத்து முன்னேறிச் செல்தல் – மொழிகிற இயேசு, தமக்கு முன்பாக எழுபத்திரண்டு (அல்லது எழுபது பேரை) அனுப்புகிறார். இவ்வாறாக, இயேசுவின் பணியின் வட்டம் விரிவதுடன் பணியாளர்கள் எண்ணிக்கையும் உயர்கிறது. இருவர் இருவராக அவர்களை அனுப்புவதன் வழியாக ஒருவர் மற்றவருடன் இணைந்து செயல்படுவதற்கும் கற்றுக்கொடுக்கிறார். அறுவடை மிகுதியாகவே இருக்கிறது.
குறைவான பொருள்கள் கொண்ட பயணம், நிலையாக ஒரே வீட்டில் தங்குதல், காண்பவர் அனைவருக்கும் அமைதி மொழிதல், நோய்கள் நீக்கி நலம் தருதல், பேய்களை ஓட்டி நற்செய்தி அறிவித்தல், எதிர்ப்புகளைக் கண்டால் எதிர்கொள்தல் என அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் பணியாளருடைய வாழ்வு இயேசுவின் வாழ்வை ஒத்ததாக இருக்கிறது. அவர்கள் செய்கிற பணியும் இயேசுவின் பணியாகவே இருக்கிறது. இவ்வாறாக, இயேசுவின் நீட்சிகளாகச் செல்கிறார்கள் அவருடைய சீடர்கள்.
திருமுழுக்கின் வழியாகவும், திருநிலைப்பாட்டின் வழியாகவும் நாம் அனைவரும் இயேசுவின் நீட்சிகளாகச் செயல்படுகிறோம் எனில், நம் வாழ்வு அவருடைய வாழ்வைப் போல இருக்கிறதா? நாம் செய்கிற பணிகள் இயேசு செய்த பணிகளைப் போல இருக்கின்றனவா?
முதல் வாசகத்தில், ‘ஆண்டவரின் மகிழ்வே உங்களுடைய வலிமை’ என்னும் அழகான வாக்கியத்தை வாசிக்கிறோம்.
பாபிலோனிய நகருக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார்கள். செருபாபேல், எஸ்ரா ஆகியோர் தலைமையில் எருசலேம் ஆலயம் கட்டிமுடிக்கப்படுகிறது. எருசலேம் நகரின் மதில்களைச் சரிசெய்து, வாயில்களை நிலைநிறுத்துகிறார் நெகேமியா. அனைவரையும் ஒரே ஆளெனக் கூட்டுகிற எஸ்ரா அவர்கள்முன் திருச்சட்டத்தை வாசிக்கிறார். மக்கள் அழத்தொடங்குகிறார்கள்.
இவ்வளவு நாள்கள் பகைவரின் வசைமொழி மட்டுமே கேட்ட காதுகள் இப்போது ஆண்டவரின் சொற்களைக் கேட்கின்றன என்னும் மகிழ்ச்சி ஒரு பக்கம்.
இவ்வளவு பிரமாணிக்கமுள்ள ஆண்டவருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக மனம் வருந்தி அவர்கள் வடிக்கும் அழுகை இன்னொரு பக்கம்.
அவர்களின் அழுகையை நிறுத்தச் சொல்கிற எஸ்ரா, இல்லம் திரும்பி மகிழ்ந்திருக்குமாறும், இல்லாதவரோடு உணவைப் பகிர்ந்துகொள்ளுமாறும் அறிவுறுத்துகிறார்.
‘நீங்கள் அழுது புலம்ப வேண்டாம்!’ என்றும், ‘வருந்த வேண்டாம்!’ என்றும் சொல்லும் எஸ்ரா, தொடர்ந்து, ‘ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை’ என்கிறார்
‘ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை’ என்ற வாக்கியம் பல நிலைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ‘ஆண்டவர் மக்கள் மேல் கொள்ளும் மகிழ்வு,’ ‘மக்கள் ஆண்டவர்மேல் கொள்ளும் மகிழ்வு,’ ‘ஆண்டவரில் மக்கள் மகிழ்தல்,’ ‘ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சி’ என்று பல நிலைகளில் புரிந்துகொள்ளப்பட்டாலும், மகிழ்ச்சி என்பது நமக்கு வலிமை தருகின்றது என்பது இங்கே முன்மொழியப்படுகின்றது.
நம் அழுகையும், கண்ணீரும், வருத்தமும் நம் ஆற்றலை நம்மிடமிருந்து உறிஞ்சுகின்றன. ஆனால், மகிழ்ச்சி நம் ஆற்றலைப் பெருக்குகிறது. ஏற்கெனவே தங்கள் வலிமையை இழந்து நிற்கும் மக்கள் புத்துணர்ச்சி பெறுமாறு தூண்டுகின்றார் எஸ்ரா.
நற்செய்தி வாசகத்தில், இயேசு தனக்கு முன்பாக எழுபத்திரண்டு பேரை இருவர் இருவராக அனுப்புகின்றார். செல்கின்ற அவர்கள் அனைவருக்கும் ‘அமைதியை’ வாழ்த்தாகக் கூறுகின்றனர். அமைதியை விரும்புபவரிடம்தான் அமைதி தங்கும் என்பது இயேசு தருகின்ற புதிய செய்தியாக இருக்கின்றது.
ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் உள்ளம் வலிமை பெறுகின்றது.
அமைதியை விரும்பும் உள்ளம் அமைதியைப் பெற்றுக்கொள்கின்றது.
(அ) இறைவார்த்தை வாசிக்கப்படுவதை நாம் கேட்கும்போது, அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கும்போது, நாம் கொடுக்கும் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது? குறிப்பாக, நற்செய்தி நூல்கள் வாசிக்கப்படும்போது நாம் வெறும் வார்த்தைகளைக் கேட்டு நிறுத்திக்கொள்கிறோமா? அல்லது அந்த வார்த்தையின் பின்னால் மறைந்திருக்கும் கிறிஸ்து நிகழ்வில் பங்கேற்கிறோமா?
(ஆ) வார்த்தையை வாசிக்கக் கேட்டவர்கள் விருந்துக்குச் செல்லுமாறு பணிக்குமாறு எஸ்ரா. இல்லாதவர்களுடன் பகிர்ந்து உண்ணுதலைக் கற்பிக்கின்றார். ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்ளும் ஒருவர் யாவரும் மகிழ்ந்திருக்கவே விரும்புகிறார்.
(இ) திருச்சட்டம் அமைதியைத் தருகின்றது. திருத்தூதர்கள் அமைதியை அறிவிக்கின்றனர். அமைதியை விரும்புபவரிடமே அமைதி தங்குகிறது எனில், நம் விருப்பம் என்ன?
குழந்தைகளை வளர்க்க தந்தையர்கள் போதவில்லை. ஆகையால்தான், கடவுள் ஞானத்தந்தையர்களை வழங்குகிறார்’ என்பது மரபுவழி வாக்கியம். மனிதர்கள் தங்களைக் காத்துக்கொள்ள இயலாதவர்கள். எனவே, கடவுள் காவல்தூதர்களை நியமித்துள்ளார்.
நற்செய்தி வாசகத்தில் (நினைவுக்கு உரியது), ‘இவர்களது வானதூதர்கள் என் தந்தையின் திருமுன் எப்போதும் இருக்கிறார்கள்’ என்று எச்சரித்து, குழந்தைகளுக்கு யாரும் இடறலாக இருத்தல் கூடாது என அறிவுறுத்துகின்றார்.
‘நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், ‘இதுதான் வழி. இதில் நடந்துசெல்லுங்கள்’ என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்’ (காண். எசா 30:21) என்னும் வார்த்தைகளிலும் வானதூதரின் குரலே ஒளிந்துள்ளது.
‘நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்’ (திபா 91) என்று ஆண்டவராகிய கடவுள் வாக்குறுதியாக மொழிகின்றார்.
இத்திருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?
(அ) கடவுள் நம்மோடு துணைநிற்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியை காவல்தூதர்கள் நமக்குத் தருகிறார்கள். மேலும், காவல்தூதர்களின் உடனிருப்பு நம்மை நேரிய வழியில் நடக்கத் தூண்டுகிறது. நம் தன்மதிப்பை உயர்த்துகின்றது.
(ஆ) நம் காவல்தூதரை நாம் கண்டதில்லை. ஆனால், அருகில் நடக்கும் அமரும் நகரும் அவருக்கு நாம் ஒரு பெயர் வைத்து அழைக்கலாம்.
(இ) நம் பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் சில நேரங்களில் காவல் தூதர்கள்போல நம்மோடு இருக்கின்றனர்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: