• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறப்பும் நினைவும். இன்றைய இறைமொழி. ஞாயிறு, 2 நவம்பர் ’25.

Sunday, November 2, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

துன்புறும் திருச்சபை புனித அகுஸ்தினார் இறந்தோர் உயிர்ப்பு அழியாத ஆன்மா இறப்பு-நினைவு இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு உத்தரிக்கிற நிலை மோட்சம்-நரகம் 2 மக்கபேயர் 12 1 கொரி 15 இறப்புக்குப் பின் வாழ்வு வாழ்வின் நிலையாமை பின்னோக்கி வாழ்தல் இறந்தோருக்கு இறைவேண்டல் நம்பிக்கை-எதிர்நோக்கு-அன்பு

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 2 நவம்பர் ’25
இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு
எசேக்கியேல் 37:1, 4-6, 12-14. 1 பேதுரு 1:3-9. யோவான் 20:11-18

 

இறப்பும் நினைவும்

 

இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. ‘நான் இறந்து கடவுளோடு இருக்க வேண்டும்’ என்று சொல்லி மோட்சம் செல்ல விரும்புபவர்களும் இறப்பை விரும்புவதில்லை. பிறப்பைப் பிடிக்கும் அளவுக்கு இறப்பை நமக்குப் பிடிப்பதில்லை. இறப்பு நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. நாம் கட்டிய கோட்டைகளை உடைத்துவிடுகிறது. நாம் கண்ட கனவுகளைச் சிதைக்கிறது. இறப்பு நமக்கு மறுவாய்ப்பை வழங்குவதில்லை. ஆனால், நாம் விரும்புகிறோமோ இல்லையோ நம் அழையா விருந்தினராக நம் வீட்டின் நடுவறைக்கு வந்து செல்கிறது இறப்பு.

 

ஆனால், இறப்பு என்பது ஓர் எதார்த்தம். நாம் பேசும்போது பேசுகிற முதல் வார்த்தை இறந்தால்தான் அடுத்த வார்த்தை பிறக்கிறது – வாக்கியம் நிறைவு பெறுகிறது. நாம் நடக்கும்போது எடுத்து வைக்கிற முதல் அடி இறந்தால் தான் அடுத்த அடி பிறக்கிறது – பயணம் நிறைவு பெறுகிறது. நம் உடலில் உள்ள செல்களின் இறப்பே நம் வளர்ச்சியாக மாறுகிறது.

 

இறப்பை நாம் நினைவுகூர்கிறோம். நமக்கு வலி தருவது எல்லாம் நம் நினைவில் நிற்கிறது. இன்னொரு பக்கம் இறப்பை நாம் நம் கண்முன்னிருந்து அகற்றிவிட்டோம். ஆகையால், இறப்பைப் பற்றிய நினைவும் மறைந்து வருகிறது.

 

இன்றைய நாளில் இறந்த நம் முன்னோர்களை நினைவுகூறுகின்றோம். நேற்று நாம் நினைவுகூர்ந்தவர்களும் இறந்த நம் முன்னோர்களே. அவர்கள் மகிமை பெற்றவர்கள். கடவுளை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். இன்று நாம் நினைவுகூர்பவர்கள் பாதி வழி சென்று மீதி வழி செல்ல முடியாதவர்கள். ‘துன்புறும் திருச்சபையில்’ உள்ள இந்த உறுப்பினர்களுக்காக நாம் இன்று செபிக்கின்றோம்.

 

துன்புறும் நிலை அல்லது உத்தரிக்கிற நிலை என்றால் என்ன?

 

நம்முடைய கத்தோலிக்க நம்பிக்கையில் மோட்சமும் நரகமும் உண்டு. ‘மோட்சம் போகும் அளவிற்கு புண்ணியம் செய்யாதவர்கள்’ அல்லது ‘நரகத்தில் வீழ்த்தப்படும் அளவிற்கு மோசமாக இல்லாதவர்கள்’ என்னும் இடைப்பட்ட மக்கள், சிறிதுகாலம் துன்புற்று, தங்கள் தவற்றுக்குப் பரிகாரம் செய்து மோட்சத்திற்குள் நுழைபவர்கள் இவர்கள்.

 

இறந்தவர்களுக்காக செபிப்பது சரியா?

 

காலத்தையும் இடத்தையும் கடந்த நம் முன்னோர்களுக்கு, காலத்திற்கு இடத்திற்கும் உட்பட்டு நாம் செய்யும் செபமும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலியும் பலன் தருமா? இயேசு எல்லாப் பாவங்களுக்காகவும் இறந்து மீட்பைக் கொண்டுவந்துவிட்டார் என்றால், நான் செய்யும் செபம் அவருடைய இறப்பைவிடப் பெரியதா? அவர் செய்த மீட்புச் செயல் இறந்தவர்களுக்கு கிடையாதா? துன்பத்தை உணர உடல் அவசியம். உடல் இல்லாத ஆன்மாக்கள் எப்படி துன்புற முடியும்? வெறுங்கையராய் வீடு திரும்பிய இளைய மகனை தந்தை ஏற்றுக்கொள்வது போல, புண்ணியம் ஏதும் இல்லாத வெறுங்கையராய் நாம் செல்லும்போது கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டாரா? கிறிஸ்தவ மதம் சாராதவர்களுக்கு என்ன நடக்கும்? போன்ற கேள்விகள் இந்த நாளுக்குச் சவாலாக இருக்கின்றன. இறப்பைப் போலவே மேற்காணும் கேள்விகளுக்கும் நம்மிடம் விடை இல்லை.

 

2 மக்கபேயர் 12-இல் இறந்தோர்க்காக செபிக்க யூதா பணம் திரட்டுவதைப் பார்க்கிறோம். மேலும், 1 கொரி 15-இல் வாழ்வோர் ஒருவர் இறந்த ஒருவரின் சார்பாக திருமுழுக்கு பெறும் நிகழ்வைப் பார்க்கிறோம். ‘இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?’ – இந்தக் கேள்விக்குச் சில இடங்களில் ‘ஆம்’ என்றும், பல இடங்களில் ‘இல்லை’ என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.

 

இன்றைய நாளில் நாம் என்னதான் செய்கிறோம்? இன்று இருப்போர் நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள்.அவர்கள் நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும் அவர்கள் என்றும் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள்.

 

புனித அகுஸ்தினார், தன் ‘ஒப்புகைகள்’ நூலில், தன் தாய் மோனிக்காவின் இறப்பைப் பதிவு செய்யும் இடத்தில் குறிப்பிடும் விடயம் நமக்கு விடை தருகின்றது.

 

அது என்ன?

 

‘என் தாய் இறந்த பின்னர் அவரை நாங்கள் அவருடைய கணவருக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என நினைப்பார் என்று எண்ணினோம். ஆனால், அவரோ, ‘என்னை எங்கு வேண்டுமானாலும் அடக்கம் செய். ஆனால், பீடத்தில் என்னை நினைக்க மறவாதே. என் ஆண்டவர் என்னை எங்கிருந்தும் உயிர்ப்பிக்க வல்லவர்’ என்றார்.’

 

அகுஸ்தினாரின் இந்தப் பதிவு நமக்கு மூன்று விடயங்களைச் சொல்கின்றது:

 

(அ) நம் இறப்புக்குப் பின்னர் உடல் ஒரு பொருட்டு அல்ல. அல்லது, உடல் இறந்துவிடுகிறது. ஆன்மா வாழ்கிறது. (ஆ) இறந்தவர்களை நாம் இறைவேண்டலில் நினைவுகூர வேண்டும். (இ) இறந்த நாம் அனைவரும் உயிர்ப்போம். நம்மை உயிர்ப்பிக்க ஆண்டவரால் மட்டுமே இயலும்.

 

ஏறக்குறைய இந்த விடயங்களைத்தான் இன்றைய நாளில் நாம் நினைவுகூருகின்றோம். ‘மனித ஆன்மா அழிவுறுவதில்லை’ என்ற நம்பிக்கை சமயங்களைக் கடந்த ஒன்றாகவும், பல மெய்யிலளார்களின் கூற்றாகவும் உள்ளது. ஆன்மா அணிந்துகொள்ளும் ஆடைதான் உடல். அல்லது, ஆன்மா குடியிருக்கும் வாடகை வீடுதான் உடல். பொய்யுடல் அழியத்தான் வேண்டும். கண்ணுக்குத் தெரியாத அந்த ஆன்மா நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இடத்தில் அல்லது ஒரு நிலையில் வாழ்கின்றது. அந்த நிலையில் அது இறைவனில் இளைப்பாறுகிறது.

 

இன்றைய திருநாள் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:

 

(அ) வாழ்வின் நிலையாமை

 

எந்த நேரத்திலும் எதுவும் நேரிடலாம். இங்கு வந்தவர் எல்லாம் அங்கு செல்ல வேண்டும் என்பது வாழ்வின் எதார்த்தம். அவர்கள் சென்றுவிட்டார்கள், நாம் செல்வோம் என்பதும் எதார்த்தம். நாம் இன்று கல்லறைகளில் ஏற்றும் மெழுகுதிரி உருகி மறைவது போல, நம் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் உருகி மறைகின்றது. நாம் ஏற்றும் அகர்பத்திகள் புகையாய் காற்றில் மறைவது போல, நாமும் மறைகின்றோம். ஆனால், அதுவரை நாம் எரிகின்றோம். அதுவரை மணம் வீசுகின்றோம். கண்களைத் திறந்து பார்க்கும்போது நம் கண்முன் நிற்கும் அனைத்துக்கும் உயிர் இருக்கின்றது. கண்களை மூடிவிட்டால் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. மறைந்து போகாத கடவுளைக் காண நாம் உடலின் கண்களை மூடித்தான் ஆக வேண்டும். ஆக, அந்த நாளை மனத்தில் நிறுத்த இந்த நாள் நம்மை அழைக்கிறது. ‘இவ்வுலகில் எதுவும் நிரந்தரமல்ல’ என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது இந்நாள். ‘நாம எப்பவும் இருப்போம்’ என்று நினைத்து வாழ்ந்தவர்கள் இன்று கல்லறைகளில் இருக்கிறார்கள். இப்படி நினைத்து வாழும் நாமும் ஒருநாள் கல்லறையில் இருப்போம். இதுதான் இயற்கையின் நியதி. ஆகையால்தான் சபை உரையாளர், ‘வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது. அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலக முடியாது. பணம் கொடுத்தும் தப்ப முடியாது’ (காண். 8:7-8) என்கிறார். ஆனால், நாம் பயப்படத் தேவையில்லை. ‘இறப்புதான் வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ நம்மைத் தூண்டுகிறது’. எனவே, நிலையற்ற இத்தருணத்தை – ஒளியை – பயன்படுத்தி, நிலையானதைச் சம்பாதிக்க வேண்டும். நம்முடையை நிலையாமையை, வலுவின்மையைக் கொண்டாடும் மனமுதிர்ச்சி அவசியம். இந்த மனமுதிர்ச்சி பெற நாம் பற்றுக்களைக் களைதல் வேண்டும். பயம் மற்றும் குற்றவுணர்வு விடுத்தல் வேண்டும்.

 

(ஆ) இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை நிர்ணயிப்பது இறப்புக்கு முன் உள்ள வாழ்வே

 

இறப்புக்குப் பின் உள்ள வாழ்வைப் பற்றிப் பல நேரங்களில் சிந்திக்கும் நாம் இறப்புக்கு முன் உள்ள வாழ்வை மறந்துவிடுகின்றோம். இந்த வாழ்வே அந்த வாழ்வைத் தீர்மானிக்கிறது எனில், குறுகிய இந்த வாழ்வை நன்முறையில் வாழ்தல் நலம். இதையே மேலாண்மையியலில், ‘பின்னோக்கி வாழ்தல்’ என்று அழைக்கின்றனர். அதாவது, என் அடக்கச் சடங்கின்போது அங்கு நிற்பவர்கள் என்னைப் பற்றி என்ன பேச வேண்டும் என்பதை நான் எழுதுவது. பின் அதை அப்படியே வாழ்வாக்குவது. எடுத்துக்காட்டாக, ‘இவர் மிகவும் எளிமையாக வாழ்ந்தார்’ என்று அவர்கள் சொல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றால், ‘நான் இப்போது எளிமையாக வாழ்வது.’ ‘எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே. வலிமை மிகுந்தோர்க்கு எண்பது. அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்’ என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (90:10). ஆண்டுகள் எழுபது என்றாலும், பத்தாண்டுகள் எனக் கணக்கிட்டால், வெறும் ஏழு பத்தாண்டுகளே. இவற்றில் முதல் 35 ஆண்டுகள் கற்றலிலும் நிற்றலிலும் கடந்து விடுகிறது. அதற்குப் பின்னர் வரும் ஆண்டுகளில் நாம் வற்றத் தொடங்குகின்றோம். கற்றல், நிற்றல், வற்றல் என நகரும் ஆண்டுகளில் நாம் நன்மதிப்பீடுகளைப் போற்றல் நலம்.

 

(இ) இறப்பில் நாம் தனியர்கள் இல்லை

 

இறப்பு ஒரு கொடிய அனுபவமாக இருக்கக் காரணம் அதை நாம் தனியாக அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம்தான். ஆனால், இறப்பில் நாம் தனியாக இல்லை. நம்மை நினைவுகூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இறந்த நம் முன்னோர்களுடன் நாம் இறைவேண்டலில் துணைநிற்பது போல, நம்மோடும் நமக்குப் பின் வரும் தலைமுறையினர் துணைநிற்பர். ஆக, இறப்பு நம்மை ஒருபோதும் பிரித்துவிடவோ, தனித்துவிடவோ இயலாது. இன்றைய நாளில் நாம் முடிந்தவரை பல இறந்தோரை நினைத்துப் பார்ப்போம். செல்டிக் நாகரீகத்தில், இறந்தோர் அனைவரும் வானத்துக்கு ஏறிச்செல்லும் ஓட்டைகளே நட்சத்திரங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த ஓட்டைகள் வழியே வானின் ஒளி நட்சத்திரங்களாக நம் கண்களுக்குத் தெரிகின்றன. அந்த நட்சத்திரங்கள் ஒளியில் நம் மெழுகுதிரி ஒளியை இணைத்துக்கொள்வோம்.

 

இறுதியாக,

 

சில நாள்களுக்கு முன் நான் வாசித்த போஸ்டர் ஒன்றுடன் சிந்தனையை நிறைவு செய்கின்றேன்.

 

‘யாராவது இறந்தால் ‘ரெஸ்ட் இன் பீஸ்’ – அமைதியில் இளைப்பாறுங்கள்! என்கிறோம். யாரையாவது பார்த்து, ‘லிவ் இன் பீஸ்’ – அமைதியில் வாழுங்கள்! என்று சொல்கிறோமா? இறந்தோருக்கு அல்ல, வாழ்வோருக்கே இன்று அமைதி தேவைப்படுகிறது.’

 

எதார்த்தமான பதிவு இது. வாழ்வோருக்கு அமைதி தேவையே. ஆனால், அதை அவர்களே இழக்கின்றனர். அவர்களால் அதைப் பெற்றுக்கொள்ள இயலும். ஆனால், இறந்தோர் தங்கள் அமைதியைப் பெற்றுக்கொள்ள அவர்களால் இயலாது. நாமே அதற்கு உதவி செய்ய வேண்டும்.

 

‘அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்’ (மத் 5:9) என்னும் மலைப்பொழிவுச் சொற்களை நான் இப்படித்தான் புரிந்துகொள்கின்றேன்: ‘தங்கள் இறைவேண்டல் வழியாக இறந்தோருக்கு அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவர்.’

 

‘உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!’ எங்களது இறைவேண்டல் உங்களை அடைகிறது என்பது எங்கள் நம்பிக்கை. உங்கள் ஆசீர் எங்களை அடைகிறது என்பது எங்கள் எதிர்நோக்கு. உங்களையும் எங்களையும் இணைத்ததும் இணைப்பதும் அன்பு.

 

ஆண்டவரே, இறந்த நம்பிக்கையாளர்கள் உம் இரக்கத்தால் நிலையான அமைதியில் இளைப்பாறுவார்களாக! முடிவில்லாத ஒளி அவர்கள்மேல் ஒளிர்வதாக! இன்றும்! என்றும்!!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: