• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

என்னோடு பேச மாட்டாயா? இன்றைய இறைமொழி. வெள்ளி, 3 ஏப்ரல் 2026.

Friday, April 3, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வெள்ளி, 3 ஏப்ரல் 2026
திருப்பாடுகளின் வெள்ளி
எசா 52:13-53:12. எபி 4:14-16, 5:7-9. யோவா 18:1-19:42

 

என்னோடு பேச மாட்டாயா?

 

இன்றைய நாளில் நாம் இயேசுவின் பாடுகளின் வரலாற்றை யோவான் நற்செய்தியிலிருந்து வாசிக்கின்றோம். பிலாத்து இயேசுவைப் பார்த்து, ‘என்னோடு பேச மாட்டாயா?’ (யோவா 19:10) எனக் கேட்கின்றார். இன்றைய நாள்களில் நாம் ஆண்டவரின் மௌனத்தை அதிகமாகவே அனுபவிக்கின்றோம். அவர் இல்லையா? அல்லது அவர் பேசுவது இல்லையா? அல்லது அவர் பேசுவது நமக்குப் புரியவில்லையா? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றோம். திருவழிபாட்டில் இன்றைய நாள் மௌனத்தின் நாள் எனவும் அழைக்கப்படுகிறது.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் நிறையப் பேருடைய குரலைக் கேட்டோம். காட்டிக்கொடுத்தவரின் குரல், மறுதலித்தவரின் குரல், கூட்டத்தின் குரல், ஆட்சியாளர்களின் குரல், இயேசுவின் குரல். யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவின் இறப்பு ஒரு பலி. பாவக்கழுவாய் நாளில் (யோம் கிப்பூர்) பலி செலுத்திவிட்டு திருத்தூயகத்திலிருந்து வெளியேறும் தலைமைக்குரு, ‘இது நிறைவேறிற்று!’ என்கிறார். அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு மௌனம் காக்கிறார் இயேசு.

 

முதல் வாசகத்தில் நாம் காணும் துன்புறும் ஊழியனும் மௌனம் காக்கிறார். இயலாமை மற்றும் கையறுநிலையின் வெளிப்பாடு அல்ல, மாறாக, ஒடுக்குவோர் முன் ஒடுக்கப்படுவோர் செய்கிற போராட்டம் இது.

 

நாம், இன்றைய நாளில், பாடுகளின் வரலாற்றைச் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

 

இன்றைய வாசகத்தில் என்னைக் கவர்ந்த ஏழு வார்;த்தைகளை (சிலுவையில் இயேசு பேசும் ஏழு வார்த்தைகள் அல்ல!) உங்களோடு சிந்திக்க விழைகின்றேன்:

 

  1. ‘யாரைத் தேடுகிறீர்கள்?’ (18:4,7)

 

தன்னைக் கைது செய்ய வந்தவர்களைப் பார்த்து இயேசு கேட்கின்றார்.

 

இயேசுவுடைய பணி வாழ்வின் தொடக்கத்தில் அவருடைய முதற்சீடர்கள் அவரைத் தேடு வருகின்றனர். நிக்கதேம் இரவில் தேடி வருகின்றார். அலுவலர் ஒருவர் தேடி வருகிறார். சமாரியர்கள் தேடுகிறார்கள். கிரேக்கர்கள் தேடுகிறார்கள். இவர்கள் அனைவரின் தேடல்களில் தேடுபொருள் தெளிவாக இருந்தது. தம்மைத் தேடி வந்தவர்களின் தேடுபொருள் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அவர்களை இருமுறை கேட்கின்றார் இயேசு.

 

இன்று நான் எதை, யாரைத் தேடுகிறேன்? தேடுபொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தால் தேடல் எளிதாகும். பல நேரங்களில் எனக்கு அது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது நான் பயனற்றவற்றைத் தேடுகிறேன். என் தேடலைச் சரி செய்ய அழைக்கிறார் இயேசு.

 

  1. ‘நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?’ (18:23)

 

தன் கன்னத்தில் அறைந்தவரைப் பார்த்து இயேசு இதைக் கேட்கின்றார்.

 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னவர், இங்கே, கன்னத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, ‘ஏன்?’ என்று கேட்கின்றார். இங்கே இயேசு தன்னுடைய தன்மதிப்பைக் காத்துக்கொள்கின்றார். நான் வலுவற்றவன் என்பதற்காக என்னை அடிக்காதே என்றும், நான் பேசுகிறேன் என்றால் நீயும் பேசு, அதைவிட்டு, உனக்கு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவோ, அல்லது நான் வலுவற்று இருக்கிறேன் என்பதற்காகவோ என்னை அடிக்காதே.

 

இன்று நாம் நம்மைவிட வலுவற்றவர்களை நம் கையால் அல்லது வார்த்தையால் அடிக்கிறோம். ‘நான் சின்ன பிள்ளையா இருக்கிறதுனாலதான என்னை அடிக்கிற?’ என்றோ, அல்லது ‘நான் இயலாதவனாக இருக்கிறேன் என்பதற்காகத் தானே அடிக்கிறாய்?’ என்றோ நம்மைக் கேட்டுவிட்டால், அங்கே அவமானப்படுவது நாம்தான். ஏனெனில், நீதியை அங்கே காப்பாற்ற மறுக்கின்றோம். ஆக, எனக்கு கீழ் இருப்பவர்களை நான் எப்படி கையாளுகிறேன்?

 

  1. ‘நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?’ (18:34)

 

பிலாத்துவைப் பார்த்து இயேசு இக்கேள்வியைக் கேட்கின்றார்.

 

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், இயேசுவை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் – ஆட்டுக்குட்டி, இறைவாக்கினர், மெசியா, இறைமகன், இஸ்ரயேலின் அரசன் – அது அழைப்பவரின் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக இருக்கக் கூடாது. இங்கே பிலாத்து இயேசுவிடம், ‘நீ யூதரின் அரசனா?’ எனக் கேட்க, இயேசு, இக்கேள்வி எங்கிருந்து வருகிறது எனக் கேட்கின்றார்.

 

இன்று நான் இயேசுவை எப்படி அழைக்கிறேன்? இயேசு எனக்கு யார்? இயேசுவை அப்படி அழைக்க என்னை உந்தித் தள்ளும் தனிப்பட்ட வாழ்வியல் அனுபவம் என்ன?

 

  1. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிகொடுக்கின்றனர்’ (18:37)

 

இயேசு பிலாத்துவிடம் கூறும் மறுமொழி இது. இதைச் சொன்னவுடன், பிலாத்து, ‘உண்மையா அது என்ன?’ எனக் கேட்கின்றார்.

 

‘உண்மையா?’ அது என்ன? அது எங்கே கிடைக்கும்? கிலோ எவ்வளவு? என்ற நிலையில் இருக்கிறது பிலாத்துவின் கேள்வி. ஆனால், உண்மையைச் சார்ந்திருந்தால் அன்றி உண்மை பற்றி நமக்குத் தெரியாது. யோவான் நற்செய்தியில் இயேசு உண்மை என அழைக்கப்படுகின்றார்.

 

முரண்படாத நிலையே உண்மை. இன்று உண்மையைப் பற்றிய என் புரிதல் என்ன? நான் எத்தனை முறை உண்மையோடு சமரசம் செய்துள்ளேன்?

 

  1. ‘மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது’

 

இயேசு பிலாத்துவிடம் சொல்கிறார்.

 

பிலாத்து தான் ஆளுநராய் இருப்பதால் தனக்கு எல்லார் மேலும் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் அதிகாரம் உண்டு என நினைக்கிறார். தவறு! நான் யாருடைய அதிகாரத்தை மதிக்கிறேனோ அவர்தான் என்மேல் அதிகாரம் செலுத்த முடியும். இல்லை என்றால் அதிகாரத்தால் பயன் இல்லை. அதுபோல நான் யாருக்கு அதிகாரம் கொடுக்கிறேனோ அவர்கள்தாம் என்னை ஆட்சி செய்ய முடியும்.

 

இன்று நான் என் வாழ்வின் அதிகாரத்தை என்னிடம் வைத்திருக்கிறேனா? அல்லது அடுத்தவர்களிடம் கொடுத்திருக்கிறேனா? நான் அடுத்தவரின் அதிகார எல்லையை மீறுகிறேனா?

 

  1. ‘நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்’ (19:19)

 

பிலாத்து சிலுவையில் எழுதி வைத்த குற்ற அறிக்கை இது.

 

இந்த நான்கு வார்த்தைகளும் நம் வாழ்வின் நான்கு முக்கியக் கூறுகளைக் கூறுகின்றன. ‘நாசரேத்து’ – இது இயேசுவின் ஊர். அவருடைய வேர், தொடக்கம், ஆதாரம். அவர் பேசும் மொழி, குடும்ப பின்புலம், சாதி, மதம் எல்லாம் இதில் அடங்கும். ‘இயேசு’ – அவருடைய பெயர். இது காரணப்பெயராகவும் இருந்தது. அவர் பாவங்களிலிருந்து மக்களை மீட்கிறார். ‘யூதர்களின்’ – நான் யாருக்காக? என்ற கேள்விக்கான விடை இது. இதுதான் நம் வாழ்வின் இலக்கு. ‘அரசன்’ – நான் யாராக?’ என்ற கேள்விக்கான விடை இது. இது நம் வாழ்வின் நோக்கத்தை நிர்ணயிக்கிறது.

 

இன்று, என் வேர், பெயர், இலக்கு, நோக்கம் தெளிவாக இருக்கிறதா. ‘நத்தம்பட்டி யேசு … …’ என நான் எப்படி என் ‘குற்ற அறிக்கையை’ நிறைவு செய்வேன்?

 

  1. ‘நான் எழுதியது எழுதியதே’ (19:22)

 

பிலாத்து தன்னிடம் குறைகூற வந்த மக்களிடம் கூறுகின்றார்.

 

எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது. ஒரு பக்கம், பிலாத்து மக்கள் எதைச் சொன்னாலும் செய்யும் கைப்பாவையாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கறாராக இருக்கின்றார். நான் எழுதியது எழுதியதே என்கிறார். நீ சொல்வது போல ஆட முடியாது என்று அதட்டி மக்களை விரட்டுகின்றார்.

 

இன்று நான் மற்றவர்களைப் பற்றி, ‘எழுதியது எழுதியதே’ எனக் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்கள் எவை? நான் என் வாழ்வில் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இருக்கிறேனா?

 

எல்லாவற்றுக்கும் மேலாக,

 

இயேசு இறக்க வேண்டும் என ‘எழுதியது எழுதியதே’.

 

ஆக, நமக்கு என்ன எழுதப்பட்டிருக்கோ அப்படித்தான் நடக்கும். அதை விதி என்றாலும் சரி, கடவுளின் திருவுளம் என்றாலும் சரி, கர்மா என்றாலும் சரி.

 

ஆனால், எழுதியது எழுதியது என்றாலும், அந்த எழுத்தை நான் என் வாழ்வாக்க இயலகிறதா?

 

இயேசுவே,

 

‘என்னோடு பேசமாட்டாயா?’ என்று கேட்போம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: