• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இணைப்புக் கோடு. இன்றைய இறைமொழி. வியாழன், 3 ஜூலை ’25.

Thursday, July 3, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Post-Resurrection Apparition My Lord My God Act of Surrender Gospel Empiricism புனித தோமா புனித தோமையார் இந்தியாவின் திருத்தூதர் நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள் என் ஆண்டவரே என் கடவுளே சரணாகதி திதிம் என்னும் தோமா Wounded Christ Encounter Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வியாழன், 3 ஜூலை ’25
புனித தோமா இந்தியாவின் திருத்தூதர் – பெருவிழா
எசாயா 52:7-10. எபேசியர் 2:19-22. யோவான் 20:24-29

 

இணைப்புக் கோடு

 

‘நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்’

 

இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின் கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும் இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு புனித தோமா.

 

இயேசுவின் இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று நிலைகளில் செயல்படுகின்றனர்: (அ) யூதர்களுக்குப் பயந்து, அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று பயந்து பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களின் செயல்பாடாக இருந்திருக்கும். (ஆ) எருசலேமை விட்டு வெளியே சென்றவர்கள், தங்கள் சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும் பணிக்குச் சென்றனர். (இ) புனித தோமாவோ மக்களோடு மக்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றார்.

 

புனித தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான குறிப்புகளைத் தருகின்றார். இலாசரின் இறப்பு செய்தி கேட்டு இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய திருத்தூதர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா, ‘நாமும் செல்வோம். அவரோடு இறப்போம்’ (காண். யோவா 11:16) என்று துணிகின்றார். இயேசுவின் இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும் இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை நமக்கு எடுத்துரைக்கிறது.

 

தொடர்ந்து, இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய பிரியாவிடை உரையில், ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?’ என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு விடையளிக்கின்ற இயேசு, ‘வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ என அறிக்கையிடுகின்றார். ‘நானே’ என்ற வார்த்தை இங்கே முதன்மையானது. ஏனெனில், முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்று ஆண்டவராகிய கடவுள் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.

 

இறுதியாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘ஆண்டவர்’ என்ற வார்த்தையை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. ‘ஆண்டவரைக் கண்டோம்’ என திருத்தூதர்கள் தோமாவிடம் சொல்கின்றனர். ‘அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து’ என்று, எந்தவொரு தலைப்பும் இல்லாமல், ‘அவர்’ என்று இயேசுவை அழைக்கின்றார். ஆனால், இயேசு தோன்றி, ‘இதோ! என் கைகள்!’ என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. ‘நான் சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?’ என அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். அல்லது இயேசுவின் இருத்தல் அவரை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கும். தோமா இந்த இடத்தில் செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும் மேலானது: ‘நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!’ என்று தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா.

 

இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம். ஆண்டவராகிய கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது. இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். நம் தந்தை மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது. இறையனுபவம் பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால் அது இல்லை என்று ஆகிவிடுவதில்லை. ‘என் ஆண்டவரே! என் கடவுளே!’ என்ற சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால் எத்துணை நலம்!

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா, ‘நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோரின் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!’ என உரைக்கின்றார். மெசியா வருகையை முன்னுரைக்கும் பாடமாக இருக்கும் இந்த இறைவாக்கு, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் தருகின்றது. பழங்காலத்தில் செய்திகள் அறிவிப்பவர் மலைமேல் ஏறி நின்றி எல்லா மக்களுக்கும் கேட்குமாறு அறிவிப்பார். போர் மற்றும் வன்முறையின் செய்திகளைக் கேட்டுப் பயந்து நின்ற மக்களுக்கு, ஆறுதல் மற்றும் அமைதியின் செய்தியை அறிவிக்கின்றார் இத்தூதர். இவரின் செய்தி நல்வாழ்வைவும் விடுதலையையும் தருகின்றது. புனித தோமா நம் மண்ணில் அறிவித்த செய்தியும் நமக்கு நல்வாழ்வையும் விடுதலையையும் கொண்டு வந்தது. இன்று நாம் ஒருவர் மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வையே நற்செய்தியாக அமைத்துக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

இரண்டாம் வாசகத்தில், கட்டடம் என்னும் உருவகத்தைப் பயன்படுத்தி, திருஅவையின் ஒழுங்கு மற்றும் ஒருங்குநிலையை எபேசு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் பவுல். திருத்தூதர்கள் இக்கட்டடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியின் வழியாகவே நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைகிறார்கள்.

 

தோமா என்னும் கதைமாந்தரை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி என்று சொல்லப்படுகின்ற, ‘தோமையாரின் நற்செய்தியிலும்’ பார்க்கின்றோம். இவர் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

 

(அ) பெயர்

 

யோவான் நற்செய்தி இவரை திதிம் என்னும் தோமா என்றும், ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா என்றும் அழைக்கின்றது. ‘திதிம்’ (இரட்டை) என்ற சொல்லைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில் ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு. நான், ‘திதிம்’ என்பதை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன்: (அ) ‘திதிம்’ என்பது தோமாவிடமிருந்த இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது. இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச் செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார் (காண். யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற சீடர்களுக்குத் தோன்றியபோது, ‘நான் நம்பமாட்டேன்’ (காண். யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில் துணிவும் அவநம்பிக்கையும் கொண்டவர் இவர். (ஆ) இவருடைய நற்செய்தியில், ‘இயேசுவும் நாமும் – எல்லா மனிதர்களும் – இரட்டையர்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இயேசுவைப் பற்றிய புதிய புரிதலையும், நம்மைப் பற்றிய புதிய புரிதலையும் தருகின்றது. இயேசு நம்மைப் போன்றவர். நாம் அனைவரும் இயேசு போன்றவர்கள். இன்னும் அதை நாம் உணராமல் இருக்கிறோம். அதுதான் பிரச்சினை.

 

(ஆ) கேள்வி கேட்பது நல்லது

 

யோவான் மற்றும் தோமா நற்செய்தி நூல்களில், தோமா கேள்வி கேட்கும் நபராக இருக்கின்றார். ‘ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர்?’ (காண். யோவா 14:5) என்று யோவானிலும், மற்றும் இறையாட்சி பற்றிய நிறைய கேள்விகளைத் தோமாவிலும் கேட்கின்றார். நம் வாழ்வில் எழும் கேள்விகளை இயேசுவிடம் – கடவுளிடம் – எழுப்புவது நலம் எனக் கருதுகிறேன்.

 

(இ) குழுமம் இன்றியமையாதது

 

உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (காண். யோவா 20:24). குழுமம் இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது. இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப் பற்றிச் சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது.

 

(ஈ) வழிப்போக்கனாய் இரு

 

தோமா நற்செய்தி (வசனம். 42) – ஏற்றுக்கொள்ளப்படாத நூல் – இயேசு சொல்லும் இந்தக் குறுகிய வசனத்தைக் கொண்டுள்ளது: ‘வழிப்போக்கனாய் இரு!’ அதாவது, எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதன்மேலும் இலயிக்காமல், நீ தொடங்கிய புள்ளியையும், அடைய வேண்டிய புள்ளியையும் மனத்தில் வைத்து நடந்துகொண்டே இரு. அதிக சுமை தூக்கும் வழிபோக்கனும், அதிகமாய்க் கவனம் சிதறும் வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை.

 

தோமா வழியாக நாம் பெற்ற நற்செய்திக்குச் சான்றுபகர்வதும், நற்செய்தியை அறிவிப்பதும் நம் கடமைகள் ஆகும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: