இன்றைய இறைமொழி
வெள்ளி, 3 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 26-ஆம் வாரம்
பாரூக்கு 1:15-22. லூக்கா 10:13-16
இயேசு எழுபத்திரண்டு பேரை அனுப்பும் நிகழ்வுக்கும், அனுப்பப்பட்டவர்கள் இயேசுவிடம் திரும்பும் நிகழ்வும் இடையே உள்ளது இன்றைய பாடப் பகுதி. திருந்த மறுத்த நகரங்களை இயேசு சபிக்கிறார். இயேசு சபிக்கும் நிகழ்வை அவருடைய கோபத்தின் அல்லது கையறுநிலையின் வெளிப்பாடு என எடுத்துக்கொள்ளலாம். நற்செய்தி வழங்குபவர் என்னதான் முயற்சிகள் எடுத்தாலும், அதை ஏற்று அதற்கேற்றாற்போல வாழ்வது மற்றவரை, அதாவது, நமக்கு வெளியிலிருப்பவரைச் சார்ந்தே அமைகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இயேசு வழங்கும் சாபங்களை எப்படிப் புரிந்துகொள்வது?
(அ) கொராசின், பெத்சாய்தா, கப்பர்நகூம் ஆகிய நகரங்கள் தங்களுடைய வளர்ச்சியை மையப்படுத்தியதாக இருந்தனவே தவிர, தங்கள் நடுவில் இருந்த இயேசுவையும் அவரை அனுப்பிய கடவுளையும் கண்டுகொள்ளவில்லை. ஆக, கண்டுகொள்ளாத்தன்மை அவர்களுடைய முதல் தவறு.
(ஆ) அவர்கள் தங்கள் முதன்மைகளைச் சரிசெய்யவில்லை. கடவுளையும் அவருக்கு உரியதையும் நாடாமல் தங்களுக்குரியதை – பெயர், புகழ், வளர்ச்சி – மட்டுமே நாடினார்கள்.
(இ) அவர்கள் குறுகிய பார்வை கொண்டிருந்தார்கள். தங்கள் முன்பாக நற்செய்தியை அறிவித்தவர்கள் சாதாரண மனிதர்கள் என்று பார்த்தார்களே தவிர, அவர்களை அனுப்பிய இயேசுவையும், அந்த இயேசுவை அனுப்பிய கடவுளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
இன்றைய முதல் வாசகத்தில், பாரூக்கு நூலில் உள்ள புலம்பல் பாடல் ஒன்றை வாசிக்கிறோம். இறைவாக்கினர் எரேமயாவின் செயலராக இருந்தவர் பாரூக்கு. நெபுகத்னேசர் பேரரசர் எருசலேம் நகரையும் ஆலயத்தையும் தீக்கிரையாக்கி மக்களை அடிமைகளாக பாபிலோனியாவுக்கு எடுத்துச்சென்றபோது எரேமியாவுடன் சென்றவர் பாரூக்கு. மக்கள் தங்களுக்குள்ளே, ‘ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின்போக்கில் நடந்தோம். வேற்றுத் தெய்வங்களுக்குப் பணி செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்’ எனப் புலம்புகிறார்கள். இந்தப் புலம்பல் அவர்களுடைய துன்பத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. இந்தப் புலம்பலை அவர்கள் முன்னதாகவே எண்ணியிருந்தால் ஒருவேளை மனம் திரும்பியிருப்பார்கள். நேரம் கடந்த புலம்பலால் எந்தப் பயனுமில்லை. நேரம் கடந்த புலம்பல் பல நேரங்களில் நம் இழப்பின் வலியை அதிகரிக்கிறது.
தாங்கள் அடைந்த துன்பங்களுக்குக் காரணம் தங்களுடைய தீமையே என்கிறார் பாரூக்கு. கடவுள் அறிவித்த கேடுகளும் சாபங்களும் தங்களுக்கு வரக் காரணம் தங்களுடைய செயல்களே என ஏற்றுக்கொள்கின்றார் பாரூக்கு. இதன் வழியாக, மனமாற்றத்திற்கும், தீங்கற்ற நல்வாழ்வுக்கும் மக்களை அழைக்கின்றார். ஆனால், ‘கடவுளின் இரக்கம் நம்மை மீட்டது’ என்று அவர் சொல்லத் தொடங்கினால், மக்கள் தங்கள் தீமையிலேயே தொடர்ந்து இருப்பார்கள்.
‘நம் வழிகளை ஆய்ந்தறிவதும் நம்மைப் படைத்தவரிடம் திரும்பி வருவதும் மனமாற்றம்’ என்கிறது விவிலியம் (காண். புல 3:40). நாம் செல்லும் வழி பற்றிய தெளிவான பார்வை, விழிப்புநிலை, நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றிய விமர்சனப் பார்வை, அவை வழியாகக் கடவுள் வழங்கும் செய்தியைத் திறந்த மனநிலையோடு ஏற்றல் ஆகியவை இருந்தால், நாம் ஆண்டவரையும் அவரை அனுப்பிய தந்தையையும் புறக்கணிக்காத வாழ்க்கையை வாழ்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, திருந்த மறுத்த நகரங்களைச் சாடுகின்றார். அதாவது, கடவுளின் இரக்கத்தைப் பதிவு செய்யும் இளைய மகன் எடுத்துக்காட்டை எழுதுகின்ற லூக்காதான், நாம் மனம் மாறாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் என்றும் எச்சரிக்கின்றார். கண்டிக்கும் முகம் ஆணுடைய முகம்.
கடவுளின் கண்டிக்கின்ற, ஆண் முகத்தை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
இயேசு, இன்றைய நற்செய்தி வாசகத்தில், தான் பணியாற்றித் திருந்த மறுத்த நகரங்களைச் சபிக்கின்றார். இயேசுவின் சாபம் அல்லது நிந்தனை மனமாற்றத்திற்கான அழைப்பாக அமைகின்றது. இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
இறைவனின் செய்தியைக் கேட்கின்றவர்கள் அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். அல்லது அது வெற்றுக் குரலாக மாறிவிடும். இயேசுவின் சமகாலத்தவர் இயேசுவின் போதனையைக் கேட்டதோடு, அவருடைய வல்ல செயல்களையும் கண்டனர். ஆனால், அவர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவரை நம்பவில்லை. ஆகையால், அவர்கள் சாபத்திற்கு உள்ளாகின்றனர்.
செயல்களால் பதிலிறுப்பு செய்வது மிகவும் அவசியம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: