
இன்றைய இறைமொழி
புதன், 4 பிப்ரவரி ’26
பொதுக்காலம் நான்காம் வாரம், புதன்
புனித ஜான் தெ பிரிட்டோ (அருளானந்தர்), நினைவு
2 சாமு 24:2, 9-17. மாற் 6:1-6
பெரிய கூட்டம், இரண்டு வல்ல செயல்கள் – இரத்தப்போக்குடைய பெண் நலம் பெறுதல், யாயிரின் மகள் உயிர்பெறுதல் என ஹீரோ போல வலம் வந்த இயேசு சொந்த ஊருக்கு வருகிறார். அவரை ஜீரோ ஆக்குகிறார்கள் அவருடைய சொந்த ஊரார். சொந்த ஊருக்கு வெளியே மக்கள் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்கிறார்கள். சொந்த ஊரில் மக்கள் இயேசுவைக் குறித்து இடறல்படுகிறார்கள்.
இயேசுவின் சொந்த ஊரில் மூன்று விடயங்கள் நிகழ்ந்தேறுவதைப் பதிவு செய்கிறார் மாற்கு:
(அ) அவர்கள் இயேசுவை – அவருடைய போதனையை, வல்ல செயல்களை – ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். ‘உன் நிகழ்காலத்தை ஏற்கத் தயங்குபவர்கள் உன் இறந்தகாலத்தைத் தோண்டிப் பார்ப்பார்கள்’ என்பது பழமொழி. இயேசுவின் நிகழ்காலத்தை ஏற்கத் தயங்குகிற அவருடைய சொந்த ஊரார் அவருடைய இறந்தகாலம் நோக்கி – பிறப்பு, வளர்ப்பு, பின்புலம் பற்றி – சிந்திக்கத் தொடங்குகிறார்கள். ‘மரியாவின் மகன்தானே!’ என்று இயேசுவின் ‘கன்னிப் பிறப்பையும்’ கேலி செய்கிறார்கள். அவர்களுடைய முற்சார்பு எண்ணம், பயம், கோபம் ஆகியவற்றால் அவர்கள் இயேசுவை ஏற்கவில்லை.
(ஆ) அவர்களுடைய நம்பிக்கையின்மையால் இயேசு வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை. நம்பிக்கையும் வல்ல செயல்களும் இணைந்தே செல்கின்றன. கடவுளால்கூட செயலாற்றாத நிலையை நம் நம்பிக்கையின்மை உருவாக்குகிறது.
(இ) இயேசு மற்ற ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். தாம் ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றி இயேசு வருந்தவில்லை, தம் பணியை முடித்துக்கொள்ளவில்லை. மாறாக, அடுத்த ஊர் நோக்கி நகர்கிறார். ஆக, மற்றவர்கள் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் நம்மைக் கட்டுப்படுத்தத் தேவையில்லை.
இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் பாடம் என்ன?
நம் ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் இருக்கிறது. நம் வேர்கள் அங்கேதான் படர்ந்து நிற்கின்றன. கொஞ்சம் மெய்யியலாக்கம் செய்து பார்த்தால், நம் நிர்வாணநிலையை அறிந்தவர்கள் நம் ஊரார்தாம். குழந்தையாகப் பிறந்த நாளும், இறந்து அடக்கம் செய்யப்படுகிற நாளும் (பெரும்பாலும்) நம் சொந்த ஊரில்தான் நடக்கிறது. நாம் இருப்பது போல ஏற்றுக்கொள்பவர்களும் அவர்கள்தாம், நம்மைக் குறித்து இடறல்படுபவர்களும் அவர்கள்தாம். எப்படி நம் பெற்றோர்களை உடன்பிறந்தவர்களை நாம் தேர்ந்தெடுப்பதில்லையோ, அது போலவே நம் சொந்த ஊரையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை. நமக்கு அது கொடுக்கப்படுகிறது. நம் சொந்த ஊரோடு நாம் ஒப்புரவாகும்போது ஒட்டுமொத்த உலகத்தோடும் பிரபஞ்சத்தோடும் ஒப்புரவாகிறோம்.
ஆக, நம் சொந்த ஊர் நோக்கி நம் எண்ணங்களையும் பாதங்களையும் வைத்திருப்பது நலம்.
இன்றைய முதல் வாசகத்தில், தாவீது அரசர் மூன்றாவது பெரிய பாவம் செய்கிறார் – தன்னிடமுள்ள படைபலத்தைக் கணக்கெடுக்கிறார். இதற்கான தண்டனையாக மூன்று தண்டனைகளை முன்வைத்தபோது, கொள்ளை நோயைத் தேர்ந்தெடுக்கிறார். மக்கள் கொள்ளை நோயால் துன்புறுகிறார்கள். தாவீது வயது வந்த காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் நலனை மறந்துவிடுகிறார் என்பது நமக்கு வருத்தம் தருகிறது. எல்லாத் தலைவர்களையும் போல தாவீது நன்றாகத் தொடங்குகிறார். முடிவில் அனைவரையும்போலத் தன்னலம்கொண்டவராக மாறிவிடுகிறார். தன் ஊர் மக்களையும் யாரோபோல நினைத்து அவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுகிறார்.
மறவ நாட்டு மாணிக்கம், செம்மண் புனிதர் என அன்போடு அழைக்கப்படும் புனித அருளானந்தரின் (ஜான் தெ பிரிட்டோ) திருநாளை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இயேசு சபையின் மதுரை மிஷன் களப்பணியின் முக்கியமான மறைசாட்சி இவர். இவர் மதுரை உயர்மறைமாவட்டம் மற்றும் சிவகங்கை மறைமாவட்டத்தின் பாதுகாவலராகக் கொண்டாடப்படுகிறார்.
1693-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பாம்பாற்றங்கரையில் உள்ள ஓரியூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றார். பிப்ரவரி 3-ஆம் தேதி சிறையில் தன் தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதுகின்றார்:
‘கிறிஸ்தவர்களிடமிருந்து என்னைப் பிரித்து, அரசரின் சகோதரராகிய ஓரியூர் தடியத்தேவனிடம் அனுப்பி வைத்தனர். கால தாமதமின்றி என்னைக் கொன்று விடுமாறு அவனுக்கு இரகசிய உத்தரவும் அனுப்பப்பட்டது. இங்கு நான் ஜனவரி 31-ஆம் தேதி வந்துசேர்ந்தேன். பொறுமையின்றி நான் மரணத்தை எதிர்நோக்கி இருக்கின்றேன். அதுவே என்னுடைய இலட்சியத்தை நிலைநிறுத்தக் கூடியது. இதுவரை நான் செய்துவந்த வேலைக்குக் கைம்மாறாக என் உயிரைத் தியாகம் செய்யக்கூடிய பொன்னான சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டது.’
இந்த எழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகம் அதிகம். தன் தலை வெட்டப்படுவதற்காக அவர் குனிந்தபோது அவருடைய உள்ளத்தில் எழுந்த உணர்வு என்னவாக இருந்திருக்கும்! தன் நாட்டின் பாதுகாப்பு, உறவினரின் உடனிருப்பு, பணி என அனைத்தையும் துறந்துவிட்டு, இந்த மண்மேட்டில் முழந்தாள்படியிட்டுக் கிடக்க அவரால் எப்படி முடிந்தது?
தன் சொந்த ஊரை விடுத்து, நம் ஊரைத் தன் சொந்த ஊராக்கிக்கொண்டார் இவர்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: