
இன்றைய இறைமொழி
செவ்வாய், 4 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், செவ்வாய்
உரோமையர் 12:5-16. லூக்கா 14:15-24
‘இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்!’ என்று இயேசுவைப் பார்த்துச் சொல்கிறார் ஒருவர். பரிசேயர் ஒருவருடைய வீட்டில் பங்குபெற்ற அந்த நபருக்கு இறையாட்சி விருந்து தேடலாக இருக்கிறது. ஆனால், ‘இறையாட்சி விருந்து’ எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படாது, ஏற்றுக்கொண்டவர்கள் சுவைக்கமாட்டார்கள் என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.
இயேசு தருகிற உருவகத்தில், மூன்று பேர் மூன்று காரணங்களுக்காக விருந்தை நிராகரிக்கிறார்கள்: (அ) நிலம் வாங்கியிருக்கிறேன் – உடைமை. (ஆ) ஏர் மாடுகளை ஓட்ட வேண்டும் – வேலை. (இ) திருமணம் முடித்திருக்கிறேன் – உறவு.
உடைமை, வேலை, உறவு போன்றவை சீடத்துவத்துக்கான தடைகளாக இருக்கின்றன.
விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அழைப்பையும் விருந்தையும் நிராகரித்த நிலையில், அழைப்பு வீதியில் உள்ளவர்களுக்கு – ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் – விடுக்கப்படுகிறது. அவர்களும் வலிந்து அழைக்கப்படுகிறார்கள். விருந்துக்கு வந்த அவர்கள் விருந்தை இரசிப்பதில்லை. நேற்றைய நற்செய்தியில் இத்தகையோரை விருந்துக்கு அழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார் இயேசு. அழைக்கப்பட்டவர்கள் தாங்கள் அழைக்கப்பட்ட நிலைக்குத் தங்களையே தகுதிப்படுத்த வேண்டும் என்பது இயேசு இங்கே தருகிற பாடம்.
‘இறையாட்சி விருந்து’ என்பதை ‘வாழ்வுக்கான அழைப்பு’ என்று எடுத்துக்கொண்டால், வாழ்வுக்கான அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்ய நாம் பல நேரங்களில் சாக்குப் போக்குகள் சொல்கிறோம். அல்லது அழைக்கப்பட்ட நிலைக்கு நம்மை உயர்த்திக்கொள்ளத் தயங்குகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில், குழுமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தாங்கள் பெற்றுள்ள அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும் என அழைக்கிறார் பவுல்.
நம் திறன்களைப் பயன்படுத்துவதன் வழியாக நாம் வாழ்வின் அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்ய இயலும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: