• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

விடியற்காலையில்! இன்றைய இறைமொழி. ஞாயிறு, 5 ஏப்ரல் ’26.

Sunday, April 5, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 5 ஏப்ரல் ’26
ஆண்டவரின் உயிர்ப்பு ஞாயிறு
திப 10:34, 37-43. கொலோ 3:1-4. யோவா 20:1-9

 

விடியற்காலையில்!

 

பவுல் உரோமையருக்கு எழுதுகிற திருமடலில், ‘இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை. சாவு அவர்மேல் ஆற்றல் கொண்டிருக்க இயலாது’ என எழுதுகிறார். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு அவருடைய சீடர்களுக்கு ஓர் அடித்தள அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை அவர்களால் விவரிக்க இயலவில்லை. ஆனால், அவர்களுடைய வாழ்க்கை முழுமையான மாற்றம் பெற்றது (முதல் வாசகம்). பேதுரு துணிவுடன் இயேசுவைப் பற்றி அறிக்கையிடுவதை இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், யோவான் நற்செய்தியாளரின் பதிவை வாசிக்கிறோம். ‘காணுதல்,’ ‘நம்புதல்’ என்னும் இரண்டு சொற்களை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. மகதலா நாட்டு மரியா வெற்றுக் கல்லறையைக் கண்டார். இயேசு அன்பு செய்த சீடர், ‘கண்டார், நம்பினார்.’ காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் எனத் தோமாவுக்கு பின்னர் மொழிகிறார் இயேசு.

 

நம்முடைய நம்பிக்கை அறிக்கையில், ‘மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார்’ எனச் சொல்கிறோம். வாரத்தின் முதல்நாள் என்று வரையறுக்கிறது இன்றைய நற்செய்தி. ஓய்வுநாளுக்கு அடுத்த நாள். ‘முதல் நாள்’ என்னும் சொல்லாடல் பதிய நாள் இந்த உலகில் புலர்ந்ததை அறிவிப்பதோடு, புதிய நிகழ்வு நடக்கவிருப்பதையும் முன்னுரைக்கிறது.

 

கல் புரட்டப்பட்டிருப்பதைக் காண்கிற மகதலா மரியா கல்லறைக்குள் நுழையவில்லை. சீடர்களிடம் இதை அறிவிக்க ஓடுகிறார். ‘ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்’ என்கிறார். ‘இருள் நீங்கும் முன்பே’ என்னும் சொல்லாடல் அவர்களுடைய உள்ளத்திலிருந்த இருளின் அடையாளமாகவும் இருக்கிறது.

 

பேதுருவும் யோவானும் கல்லறையை நோக்கி ஓடுகிறார்கள். அன்புச் சீடர் முதலில் கல்லறையை அடைந்தாலும் பேதுருவுக்காகக் காத்திருக்கிறார். அவர் கண்டார், நம்பினார் என நிகழ்வை முடிக்கிறார் யோவான். உயிர்த்த நபரையோ, வானதூதரையோ அவர்கள் காணவில்லை. மாறாக, வெற்றுக் கல்லறையை மட்டுமே காண்கிறார்கள்.

 

இயேசுவின் உயிர்ப்பு என்பது ஓர் உள்ளார்ந்த அனுபவம். நம் வரைறை அனுபவத்தை நாம் கடக்கும் நிகழ்வு. இந்த அனுபவம் நமக்கு மூன்று பாடங்களைத் தருகிறது:

 

(அ) தாழ்வானது மறைந்து உயர்வானது வளர வேண்டும். கிறிஸ்துவின் உயிர்ப்பை எடுத்துரைக்கிற பவுல், அதற்கேற்ப நம் உள்ளங்களை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்துகிறார் (இரண்டாம் வாசகம்).

 

(ஆ) எல்லாம் கடந்து போகும். குருத்து ஞாயிறு, சிலுவை, பிலாத்து, ஏரோது, தலைமைக் குருக்கள், மக்கள். இறுதியில் கடவுள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறார். கடவுள்தாமே அனைத்தையும் தம் கட்டுக்குள் வைத்திருக்கிறார்.

 

(இ) உயிர்ப்பே நம் நம்பிக்கை வாழ்வின் அடித்தளம். இந்த நம்பிக்கையே எதிர்நோக்குக்கும் அன்புக்கும் நம்மை இட்டுச் செல்கிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: