இன்றைய இறைமொழி
செவ்வாய், 5 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 18-ஆம் வாரம், செவ்வாய்
புனித பனிமய அன்னை, விருப்ப நினைவு
எண்ணிக்கை 12:1-13. மத்தேயு 14:22-36
நானும் கடல்மீது நடக்க!
திருஅவையின் தொடக்கம் பெந்தகோஸ்தே நிகழ்வில் அல்லது அதற்குச் சற்று முன்னர் இயேசுவும் பேதுருவும் திபேரியக் கடல் அருகே மேற்கொண்ட ‘நீ என்னை அன்பு செய்கிறாயா?’ என்னும் உரையாடலில் தொடங்கியதாக நாம் நினைக்கிறோம். மத்தேயு நற்செய்தியின் (இன்றைய வாசகத்தின்) பின்புலத்தில் பார்த்தால், திருஅவையின் தொடக்கம் கலிலேயக் கடலில் புயலின் நடுவில் இயேசுவும் பேதுருவும் கரம் பிடித்துக்கொண்ட நிகழ்வில் தொடங்குவதாக நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசு கடல்மீது நடந்து சீடர்கள் இருந்த படகு நோக்கி வருகிறார். ‘ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்!’ என்று பேதுரு இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசுவும், ‘வா!’ என்கிறார். பேதுரு இரண்டாம் முறையாக இயேசுவிடமிருந்து ‘வா!’ என்னும் அழைப்பைப் பெறுகிறார். முதன் முதலாக இயேசு திருத்தூதர்களை அழைக்கும் நிகழ்வில் கலிலேயக் கடலின் கரையில் நின்றிருந்த பேதுருவிடம் (அவருடைய சகோதரரிடம்), ‘என்னைப் பின்பற்றி வா!’ என்கிறார். இயேசுவை நோக்கி நகர்ந்த பேதுருவின் கண்கள் பெருங்காற்றின் பக்கம் திரும்ப, அவர் மூழ்கத் தொடங்குகிறார். இங்கே வாசகருக்கு ஓர் ஐயம் எழுகிறது. பேதுரு தொழில்முறையாக மீன்பிடிப்பவர். அந்த வகையில் கடலின் ஆழம், நீரின் ஓட்டம், நீச்சல் அடித்தல் அனைத்தும் தெரிந்தவராக இருந்தாலும் அவர் தன் ஆற்றலை வீணாக்க முடிவெடுக்கிறார். தன் வலுவின்மையில் இயேசுவின் வல்லமை வெளிப்பட வேண்டும் என்பதற்காக அவர் மூழ்கத் தொடங்குகிறார்.
‘நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?’ எனக் கேட்கிற இயேசு. இயேசுவைப் பார்த்தபோது நீரில் நடந்த பேதுரு, பேரலையைப் பார்த்தவுடன் அச்சம் கொள்கிறார். அலைகள் அச்சம் தரும் வேளையில் ஆண்டவர் அமைதி தருகிறார். அமைதியை நோக்கிக் கடந்து செல்வதே நம்பிக்கைப் பயணம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆரோனும் மிரியமும் மோசேக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள். சகோதர உறவில் தோன்றும் பொறாமை உணர்வாக இது இருக்கிறது. உடனடியாக அவர்களைக் கடிந்துகொள்கிறார் கடவுள். மோசேக்கு தாம் அருள்கிற வெளிப்பாட்டின் மேன்மையை எடுத்துரைக்கிறார் கடவுள்.
மிரியமைத் தொழுநோய் பீடிக்கிறது. ஆரோனுக்கு அத்தண்டனை வழங்கப்படவில்லை.
உரோமை நகரில் உள்ள புனித கன்னி மரியாவின் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை (விருப்ப நினைவு) இன்று கொண்டாடுகிறோம். பனிமய அன்னை திருநாள் என்றும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. எபேசு பொதுச்சங்கம் 431-இல் அன்னை கன்னி மரியா இறைவனின் தாய் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இறைவனின் அன்னையாம் கன்னி மரியாவுக்கு உரோமையில் ஓர் ஆலயத்தை எழுப்புகிறார் திருத்தந்தை 3-ஆம் சிக்ஸ்துஸ்.
மரபுக் கதையாடல் ஒன்றின்படி, ஏறக்குறைய 352-இல் திருத்தந்தை லிபேரியுஸ் அவர்கள் ஆட்சிக்காலத்தில் உரோமை மேட்டுக்குடி தம்பதி யோவான் மற்றும் மனைவி குழந்தைப்பேறு வேண்டி அன்னை கன்னி மரியாவிடம் இறைவேண்டல் செய்தனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கன்னி மரியாவுக்கு ஆலயம் கட்டுவதாகப் பொருத்தனை செய்தனர். வேண்டுதல் நிறைவேறிவிடுகிறது. எங்கே ஆலயம் கட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, உரோமையின் வெயில் காலத்தில் ஓரிடத்தில் பனி பெய்யச் செய்து அடையாளம் காட்டுகிறார் மரியா. அந்த இடத்தில் ஆலயம் கட்டப்படுகிறது.
மரியா வீற்றிருக்கும் உரோமையின் குன்று நமக்குக் குன்றாத நம்பிக்கை வழங்குவதாக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: