• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கிறிஸ்துவே மையம்! இன்றைய இறைமொழி. வெள்ளி, 5 செப்டம்பர் ’25.

Friday, September 5, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நம்பிக்கை கிறிஸ்தியல் பாடல் கிறிஸ்து-மையம் புனித அன்னை தெரசா கிறிஸ்து-படைப்பின் மையம் கிறிஸ்து-திருஅவையின் மையம் கிறிஸ்து-வாழ்வின் மையம் புதிய திராட்சை ரசம் புதிய வாழ்க்கை கிறிஸ்துவின் உடனிருப்பு கொல்கத்தா நகர் புனித தெரசா எளிமை-அன்பு-பணிவிடை வறியோர்-வான்கடவுள் முகம்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 5 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 22-ஆம் வாரம், வெள்ளி
புனித அன்னை தெரசா, நினைவு
கொலோசையர் 1:15-20. லூக்கா 5:33-39

 

கிறிஸ்துவே மையம்!

 

  1. கிறிஸ்து: காண இயலாத கடவுளின் காணக்கூடிய வடிவம்

 

இன்றைய முதல் வாசகத்தில் கிறிஸ்தியல் பாடல் ஒன்றை வாசிக்கிறோம். கிறிஸ்துவின் மேன்மையை எடுத்துரைப்பதுடன் கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கும் நமக்குமான தூரத்தைக் குறைக்கிறார் என எழுதுகிறார் பவுல்.

 

‘மகிழ்ச்சியும் எதிர்நோக்கும்’ என்னும் இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு, கிறிஸ்து கடவுளின் முழு தன்மையை மட்டுமல்ல, மானுடத்தின் முழு தன்மையையும் வெளிப்படுத்துகிறார் என்று பதிவு செய்கிறது (காண். எண் 22).

 

கிறிஸ்துவே படைப்பின் திருஅவையின் மையமாக இருக்கிறார் என்றால், நம் வாழ்வின் மையமாகவும் அவர் இருக்க வேண்டும். அவரை நாம் முதன்மையாகக் கொள்ளும்போது அனைத்தும் – வேலை, குடும்பம், பணி – அதன் இயக்கத்தையும் பொருளையும் கண்டுகொள்கிறது.

 

  1. புதிய திராட்சை ரசம், புதிய வாழ்க்கை

 

நோன்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்கிற இயேசு, ‘யாரும் புதிய இரசத்தை பழைய தோற்பைகளில் ஊற்றி வைப்பதில்லை’ என்கிறார். கிறிஸ்துவின் உடனிருப்பே புதிய இரசம் -இதுவே நமக்கு மகிழ்ச்சியும், புத்துணர்வும், மாற்றமும் தருகிறது.

 

கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வி (எண் 2011) அருள் என்பது கடவுளின் இலவசமான முன்னெடுப்பு என மொழிகிறது.

 

நம்பிக்கை என்பது பழைய சடங்குகளைப் பற்றிக்கொண்டிருப்பதில் அல்ல, மாறாக, தம் ஆவியால் கிறிஸ்து நம்மைப் புதுப்பிக்குமாறு அனுமதிப்பதில் உள்ளது. அச்சம், தன்னலம், கசப்புணர்வு என்னும் பழைய தோற்பைகளை நான் வைத்துக்கொண்டிருக்கிறேனா? அல்லது ஆண்டவராகிய இயேசு என்னை அவருடைய மகிழ்ச்சியின் அன்பின் பாத்திரமாக மாற்றுமாறு அவரிடம் சரணடைகின்றேனா?

 

  1. அன்னை தெரசா: வறியவரின் முகத்தில் வான்கடவுள்

 

இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடும் கொல்கத்தா நகர் புனித தெரசா (அன்னை தெரசா) கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருந்தார். கிறிஸ்து கொண்டுவந்த ஒப்புரவை மாந்தர் நடுவில் அவர் கொண்டு வந்தார்.

 

கிறிஸ்துவுடைய அன்பின் புதிய இரசத்தை அன்னை தெரசா வறியவர்களின் வாழிடங்களில் வழங்கினார்.

 

அவருடைய எளிமையும் அன்பும், பணிவிடையும் நமக்குப் பாடங்களாக அமையட்டும். அனைவரிலும் கடவுளைக் காணும் ஆன்மிகம் கற்றல் நலம்.

 

நிறைவாக,

 

கிறிஸ்துவே படைப்பின் மையம் என முன்மொழிகிறார் பவுல். வாழ்க்கையை மாற்றுகிற புதிய திராட்சை இரசத்தை வழங்குகிறார் இயேசு. நம் வாழ்வைக் கிறிஸ்துவில் பதிய வைப்போம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: