
இன்றைய இறைமொழி
புதன், 5 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், புதன்
உரோமையர் 13:8-10. லூக்கா 14:25-33
விருந்துண்ணுதல், விருந்தோம்புதல், விருந்துக்கான அழைப்பை ஏற்றல் என்று போதித்த இயேசு தொடர்ந்து சீடத்துவம் பற்றிப் பேசுகிறார். சீடத்துவத்துக்குத் தேவையான காரணிகளை – உறவு மறுப்பு, உடைமை மறுப்பு, சிலுவை ஏற்பு – வரையறுக்கிற இயேசு, தொடர்ந்து ‘கோபுரம் கட்டும் நபர்,’ ‘போருக்குச் செல்லும் அரசர்’ என்னும் இரண்டு உருவகங்களைத் தருகிறார்.
கோபுரம் கட்டுகிற நபர் முழுமையாக தன் வலிமையையும் தன்னிடம் இருப்பவற்றின் வலிமையையும் அறிந்து செயல்பட வேண்டும். முழுமையான திட்டமிடல் இல்லை என்றால், முழுமையாக அவரால் கோபுரத்தைக் கட்ட முடியாது. ஒன்றைத் தொடங்கும் நபர் அதை முடிக்கும் வரைக்குமான முழுத்திட்டத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். இதையே சபை உரையாளர், ‘ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ (8:7) என்கிறார். ‘இறுதியை மனத்தில் வைத்துத் தொடங்குதல்’ என்ற விதியை ஸ்டீஃபன் கோவை முன்மொழிகிறார். இயேசுவைப் பின்பற்றுதல் என்பது இன்று தொடங்கி நகரும் நிகழ்வு அல்ல, மாறாக, அவரைப் போல சிலுவையில் இறப்பதுமே. அந்த இறுதியை மனத்தில் வைத்து ஒருவர் தொடங்க வேண்டும்.
போருக்குச் செல்லும் அரசர் முன்னதாக அமர்ந்து யோசிக்க வேண்டும். தன் வலிமையையும் மாற்றானின் வலிமையையும் அறிந்து அதற்கேற்ப வியூகங்களை மாற்ற வேண்டும். அல்லது சரணடைவதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும். உயிர்களும் பொருளும் வீணாகும். எந்த அளவுக்கு முன்னதாகவும் வேகமாகவும் திட்டமிட்டு முடிவு எடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவரால் வெற்றிபெற இயலும்.
சீடத்துவம் ஏற்பதற்கு முழுமையாகவும் முன்னதாகவும் நாம் திட்டமிட வேண்டியது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், நம் வாழ்வில் நிறைவும் வெற்றியும் கிடைக்க வேண்டுமெனில் நாம் முழுமையாகவும் முன்னதாகவும் செயல்பட வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், ‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ என்கிறார் பவுல். தன்னை அன்பு செய்யும் ஒருவர் தன் வாழ்வை முழுமையாகத் திட்டமிட்டு முன்னதாக முடிவுகள் எடுத்து வாழ்கிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: