இன்றைய இறைமொழி
ஞாயிறு, 6 ஜூலை ’25
பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு
எசாயா 66:10-14. கலாத்தியர் 6:14-18. லூக்கா 10:1-12, 17-20
அமைதிநிறை பணியும் துன்பத்தில் மகிழ்ச்சியும்
‘புதிய படைப்பாவதே இன்றியமையாதது!’
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்திரண்ட பேரை, இருவர் இருவராக பணிக்கு அனுப்புகிறார். திருத்தூதர்கள் குழாமுக்கு வெளியே உள்ள மற்ற சீடர்கள் இயேசுவால் அனுப்பப்படுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். 12 பேர் அல்ல, 72 பேர் வந்தாலும் அறுவடைக்கு ஆள்கள் போதவில்லை என்பதே இயேசுவின் போதனை. ஊர்களைச் சுற்றிப்பார்க்க அல்ல, ஊர்களை வெற்றிகொள்ள அல்ல, மாறாக, ஊர்களுக்கு அமைதியை அறிவிக்க அவர்களை அனுப்புகிறாh இயேசு: ‘இந்த இல்லத்துக்கு அமைதி உண்டாகுக!’ பணிக்குச் சென்ற அவர்கள் திரும்பி வந்து இயேசுவிடம் பணியறிக்கை செய்கிறார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியின் திசையைக் கீழிருந்து மேல்நோக்கித் திருப்புகிறார் இயேசு. மனிதர்கள் தரும் பாராட்டில் அல்ல, கடவுள் தரும் கைம்மாற்றிலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்பது இயேசுவின் போதனை.
முதல் வாசகத்தில், எருசலேம் நகரை தாய்க்கு ஒப்பிடுகிற எசாயா, அந்நகர் வழியாக இஸ்ரயேல் மக்கள் பெறப்போகிற ஆறுதலை முன்னுரைக்கிறார். இரண்டாம் வாசகத்தில், பவுல் கிறிஸ்துவின் சிலுவை பற்றியே மகிழ்வதாக எழுதுகிறார்.
திருஅவையின் மறைத்தூதுப் பணி பற்றி எடுத்துரைக்கிற திருத்தந்தை 6-ஆம் பவுல், ‘இன்றைய நவீன மனிதர்கள் போதனையால் அல்ல, மாறாக, வாழ்க்கை முறையாலே ஈர்க்கப்படுகிறார்கள். நற்செய்திக்குச் சான்றுபகர்கிற வாழ்க்கையே நற்செய்தி அறிவிப்புக்கான வழி’ என்கிறார். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி, ‘தூய ஆவியாரே நம்மைப் பணிக்கு அனுப்புகிறார். அவரே நம் வழியாகச் செயலாற்றுகிறார்’ (எண். 852) என்று கற்பிக்கிறது.
பணி என்பது ஆற்றல் சார்ந்தது அல்ல, மாறாக, இருத்தல் சார்ந்தது. நாம் பெறுகிற வெற்றி அல்ல, மாறாக, நாம் பணிக்குக் காட்டுகிற பிரமாணிக்கமே மேன்மையானது. நாம் தனியாக அல்ல, மாறாக, குழுமமாக அனுப்பப்படுகிறோம்.
நாம் பல நேரங்களில் நம் செயல்பாடுகளை மையமாக வைத்து நம் தான்மையை வரையறுக்கிறோம். ஆனால், நம் செயல்களில் அல்ல, மாறாக, கிறிஸ்துவில் நாம் மையம்கொண்ட வாழ்க்கையே நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
அருள்பணியாளர் ஒருவர் கூறினார்: ‘மக்களுக்கு அமைதியை அறிவிப்பதற்காக நான் பணிக்குச் சென்றேன். ஆனால், இறுதியில் அமைதி எனக்கு தேவைப்பட்டது என உணர்ந்தேன். தோழமையில் மகிழ்வதே உண்மையான மகிழ்ச்சி.’
பணித்தளம் என்பது வட இந்தியாவிலோ, தூரமான கிராமங்களிலோ இல்லை. மாறாக, நம் இல்லம், பங்குத்தளம், வேலைபார்க்கும் இடம் என அனைத்துமே நாம் பணி செய்கிற இடங்களே. அமைதியை, மன்னிப்பை, மகிழ்ச்சியை நாம் கொண்டுவரும்போதெல்லாம் பணி செய்கிறோம்.
இயேசு இன்று என்னை எங்கே அனுப்புகிறார்?
நான் விட வேண்டிய சுமை எது?
வருகிற வாரத்தில் நான் அமைதியை விதைக்க முடியுமா?
ஆண்டவர் எனக்குத் தருகிற ஆறுதலை நான் மற்றவர்களுக்குக் கொடுப்பதே மறைப்பணி. கிறிஸ்துவின் தழும்புகளைத் தன் உடலில் தாங்குவதாக மொழிகிறார் பவுல். துன்பத்தில் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறார் பவுல்.
நாம் வார்த்தையைக் கேட்டுப் பின்பற்றுபவர்கள் மட்டுமல்லர், மாறாக, அனுப்பப்படுபவர்கள்!
அவருடைய அறுவடையின் பணியாளர்களாகச் செல்கிற நாம், அமைதியில் வழி நடப்போம்.
‘இந்த இல்லத்திற்கு அமைதி உரித்தாகுக!’ – இதுவே நம் மறைத்தூதுச் செய்தி.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: