• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தேவையானது ஒன்றே! இன்றைய இறைமொழி. செவ்வாய், 6 அக்டோபர் 2026.

Tuesday, October 6, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 6 அக்டோபர் 2026
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
புனித புரூனோ, நினைவு

கலா 1:13-24. லூக் 10:38-42

 

தேவையானது ஒன்றே!

 

பெத்தானியாவில் உள்ள மார்த்தா-மரியா-இலாசர் இல்லத்தாரின் விருந்தோம்பலில் அகமகிழ்கிறார் இயேசு. வாழ்வின் முதன்மையை இங்கே மார்த்தாவுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

 

மார்த்தாவைப் பற்றிய மூன்று சொற்கள்: ‘பற்பல பணிகள் புரிந்தார்,’ ‘பரபரப்பாகினார்,’ ‘தன்னை மரியா தனியே விட்டுவிட்டுதாகப் புலம்புகிறாள்.’

 

மரியாவைப் பற்றிய மூன்று சொற்கள்: ‘இயேசுவின் காலடிகளில் அமர்ந்தார்,’ ‘இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்,’ ‘மௌனம் காத்தார்.’

 

மரியாவை எடுத்துக்காட்டாக முன்மொழிகிற இயேசு, ‘ஆனால், தேவையானது ஒன்றே!’ என்று மார்த்தாவுக்கு அறிவுரை பகர்கிறார் இயேசு.

 

இன்றைய சமூக வலைத்தளங்களை நாம் எடுத்துக்கொள்வோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூட்யூப், நெட்ஃப்ளிக்ஸ் போன்றவற்றை விருந்தினர்களாக நாம் நம் வீட்டில் வரவேற்கிறோம். அவர்கள் வந்தவுடன் நாம் பரபரப்பாகிறோம், தனிமையை உணர்கிறோம், ஏதோ செய்துகொண்டிருப்பது போல உணர்கிறோம்.

 

மார்த்தா இங்குமங்கும் உடலளவில் நகர்ந்துகொண்டே இருந்தார். மரியாவோ உடல் ஒரே இடத்தில் இருந்தாலும், உள்ளம் இயேசுவோடு இணையப் பெற்றார்.

 

இன்று நம் வாழ்வின், பணியின் பரபரப்புகளை எண்ணிப் பார்ப்போம். நாம் கடவுளின் காலடிகளில் அமரும் மணித்துளிகள் மட்டுமே தேவையானவை! கடவுளே நாம் தேர்ந்துகொள்ள வேண்டிய பங்கு.

 

உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதருடைய அடிப்படைத் தேவைகள் எனக் கருதப்படுகின்றன. ஆபிரகாம் மாஸ்லோ என்னும் உளவியல் அறிஞர் மனிதர்களின் தேவைகளைப் படிநிலைப்படுத்துகிறார்: உடல்சார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள், உறவுத் தேவைகள், தன்மதிப்புத் தேவைகள், தன்நிர்ணயத் தேவைகள்.

 

இயேசு மேற்காணும் தேவைகளுக்கு மேலாக நம்மை அழைக்கிறார். கடவுளுடைய பாதத்தில் அமர்வதும் அவரால் விருந்தோம்பல் செய்யப்படுவதுமே மேலான தேவை.

 

நிற்க.

 

இன்று நாம் புனித புரூனோவை நினைவுகூர்கிறோம். இத்தாலி நாட்டின் கலாப்ரியா மாகாணத்தின் பாதுகாவலர் எனக் கொண்டாடப்படுகிற இவர் கார்த்தூஸியன் சபையை நிறுவியவர். இவருடைய மாணவர்களில் ஒருவரே பின்னர் திருத்தந்தை இரண்டாம் அர்பன் என உயர்ந்தார். ஆயர் பொறுப்பு புரூனோவுக்கு வழங்கப்பட்டபோது அதை அவர் மறுத்தார். தாழ்ச்சி, தீராத கற்றல் ஆர்வம், இறைவேண்டல் ஆகியவற்றால் பலரின் ஆன்மிக வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக இருந்தார் இவர்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: