• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தொலைத்தலின் வலி. இன்றைய இறைமொழி. வியாழன், 6 நவம்பர் ’25.

Thursday, November 6, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

வாழ்வியல் அனுபவம் தொலைத்தலின் வலி தொலைத்தல் காணாமல் போன ஆடு காணாமல் போன நாணயம் இழத்தல் தேடுதல் தொலைத்தல்-தேடுதல் நம்பிக்கையாளர்கள் வாழ்தல்-இறத்தல் இறைவனுக்காய் வாழ்தல் இறைவனுக்காய் இறத்தல் கிறிஸ்து மையம்

இன்றைய இறைமொழி
வியாழன், 6 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், வியாழன்
உரோமையர் 14:7-12. லூக்கா 15:1-10

 

தொலைத்தலின் வலி

 

இன்றைய நற்செய்தியில், தொலைத்தலின் வலியை இரண்டு உருவகங்கள் வழியாக முன்மொழிகின்றார் இயேசு. இரண்டு பேர் தங்களிடம் உள்ளதைத் தொலைக்கின்றனர். முதலாமவர், ஓர் ஆண். இவர் தன் 100 ஆடுகளுள் ஒன்றைத் தொலைக்கின்றார். இரண்டாமவர், ஒரு பெண். இவன் தன் 10 நாணயங்களுள் ஒன்றைத் தொலைக்கின்றார்.

 

இருவருக்கும் பொதுவான சில பண்புகளை நாம் கண்டறிய முடியும்: (அ) காணாமல் போன ஆடு மற்றும் நாணயத்திற்கு அவர்கள் பொறுப்பேற்கின்றனர். (ஆ) தொலைந்தவை கிடைக்கும் வரை அவற்றைத் தேடுகின்றனர். (இ) தேடிக் கண்டவை பற்றி மகிழ்ந்து அக்களிக்கின்றனர்.

 

முல்லா கதை ஒன்றின் வழியாக, ‘நாம் எதை எங்கு தொலைத்தோமோ அதை அங்கு தேட வேண்டும்’ என நாம் கற்றுள்ளோம். ஆனால், மேற்காணும் இருவரும் எங்கெங்கோ தேடுகின்றனர். ஏனெனில், ஆடு பயணம் செய்யும் தொலைவு அதிகம். நாணயம் குதித்துச் செல்லும் தூரம் அதிகம். ஆக, கண்டடையும் வரை தேடுதலும் நன்று.

 

தொலைந்தவற்றைத் தேடுதல் நம் வாழ்வியல் அனுபவமும் கூட.

 

தொலைந்த பணம், கம்மல், புத்தகம், பேனா, ஃப்ளாஸ்க், பைக், சைக்கிள் என பலவற்றை நாம் தேடியுள்ளோம். தேடும் வரை உள்ள பதைபதைப்பு, தேடிய பொருள் கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது.

 

இன்று நம்மிடம் உள்ள எதுவும் தொலைந்து போகாமல் ட்ராக் செய்ய க்யூஆர் கோட் உள்ளது. நம்மிடமிருந்து எதுவும் தொலைந்து போகாதவாறு நாம் பார்த்துக்கொள்கிறோம்.

 

ஆனாலும், பொருள்கள் தொலைந்துபோகின்றன.

 

ஒரு பொருள் தொலைந்தவுடன் நம் மனம் கலங்குகிறது. பின் தேடலைத் தொடங்குகிறது. தேடுவது கிடைக்குமா? என்ற குட்டி பயம் வந்து உட்கார்ந்துகொள்கிறது. நம் கவனக்குறைவு பற்றி நம் மனம் நம்மைச் சாடிக் குற்றவுணர்வைத் தூண்டுகிறது. மற்றவரோடு ஒப்பிட்டு, தன்பரிதாபம் கொள்ளச் செய்கிறது. இவைதான் தொலைத்தலின் வலிகள்.

 

இந்த வலிகளை அனுபவிப்பவர் நாம் மட்டுமல்ல, நம் கடவுளும்தான் என்கிறார் இயேசு.

 

மனம் மாறிய ஒருவரைக் குறித்து, தொலைந்த நபர் கடவுளின் கைகளில் கிடைப்பது குறித்து அவர் மகிழ்ந்து கொண்டாடுகிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் புதியதொரு தொலைத்தல் அனுபவத்துக்கு நம்மை அழைக்கிறார். நம்பிக்கையாளர்கள் அனைவரும் கிறிஸ்துவில் தங்களையே தொலைக்க வேண்டும், இழக்க வேண்டும் என்பது அவருடைய அறிவுரையாக இருக்கிறது: ‘நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை. தமக்கென்று இறப்பதுமில்லை. வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்களாய் இருக்கிறோம்.’

 

ஆடு மேய்ப்பவர், தொலைந்த ஓர் ஆட்டுக்காக, தொன்னூற்றொன்பது ஆடுகளைக் குப்பை எனக் கருதுகிறார்.

 

இளவல் ஒருத்தி, தொலைந்த ஒரு நாணயத்துக்காக, ஒன்பது நாணயங்களைக் குப்பை எனக் கருதுகிறார்.

 

பவுல், தான் தொலைத்த கிறிஸ்து என்னும் செல்வத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, தன் இருத்தலை இழந்து கிறிஸ்துவை மையமாக்கிக்கொள்கிறார்.

 

ஏனெனில், தொலைத்தலின் வலி அறிந்தவர்கள் இவர்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: