• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

திரும்பி வருதல். இன்றைய இறைமொழி. சனி, 7 பிப்ரவரி ’26.

Saturday, February 7, 2026   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சீடத்துவம் இறைவேண்டல் ஆன்மீக பயணம் அழைக்கப்படுதல் அனுப்பப்படுதல் திரும்பி வருதல் மேய்ப்புப்பணி மேய்ப்புப்பணி அறிக்கை மேய்ப்புப்பணி ஓய்வு மேய்ப்புப்பணி பரிவு

இன்றைய இறைமொழி
சனி, 7 பிப்ரவரி ’26
பொதுக்காலம் நான்காம் வாரம், சனி
1 அர 3:4-13. மாற் 6:30-34

 

திரும்பி வருதல்

 

மாற்கு நற்செய்தியாளருடைய புரிதலின்படி சீடத்துவத்துக்கு மூன்று பரிமாணங்கள் உண்டு: (அ) அழைக்கப்படுதல் – தம்மோடு இருக்குமாறு இயேசு அவர்களை அழைக்கிறார் (மாற் 3:14). (ஆ) அனுப்பப்படுதல் – இருவர் இருவராக அவர்கள் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். (இ) திரும்பி வருதல் – அனுப்பப்பட்டவர்கள் இயேசுவிடம் திரும்பி வந்து நிகழ்ந்தவற்றை அறிவிக்கிறார்கள் (இன்றைய நற்செய்தி வாசகம்).

 

சீடர்கள் திரும்பி வருகிற நிகழ்வில் மூன்று மேய்ப்புப்பணி கூறுகள் அமைந்துள்ளன: (அ) மேய்ப்புப்பணி அறிக்கை, (ஆ) மேய்ப்புப்பணி ஓய்வு, (இ) மேய்ப்புப்பணி பரிவு.

 

(அ) மேய்ப்புப்பணி அறிக்கை – திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை அனைத்தையும் அவருக்குத் தெரிவிக்கிறார்கள். அனுப்பப்பட்டவர்கள் தங்களை அனுப்பியவருக்குக் கடமைப் பட்டவர்களாக இருக்கிறார்கள். அனுப்பியவரின் அதிகாரத்திலேயே அவர்கள் சென்றதால் தங்களை அனுப்பியவர்களுக்கு மறுமொழி கூறுவதற்கு அவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

 

(ஆ) மேய்ப்புப்பணி ஓய்வு – தாங்கள் அடைந்த வெற்றியைப் பற்றி சீடர்கள் பகிர்ந்துகொண்டிருக்கும்போதே, ‘நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான இடத்திற்குப் போய் சற்றே ஓய்வெடுங்கள்!’ என்று தனியே அனுப்புகிறார் இயேசு. தங்கள் பணியோடு அவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ளக் கூடாது என நினைக்கிறார் இயேசு. ஓய்வு என்பது நமக்கு ஆற்றல் புதுப்பிக்கும் தளமாக இருந்தாலும், ஓய்வு நாம் வாழ்வில் இன்றியமையாதவர்கள் இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

 

(இ) மேய்ப்புப்பணி பரிவு – ஓய்வுக்காகச் செல்கிறார்கள் சீடர்கள். இயேசுவும் அவர்களோடு செல்கிறார். அங்கு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் அவர்கள்மேல் பரிவு கொள்கிற இயேசு, தன் மேய்ப்புப்பணி முதன்மையை உடனடியாக மாற்றுகிறார். மக்களுக்குக் கற்பிக்கத் தொடங்குகிறார்.

 

இந்த நிகழ்வில் மூன்று வகையான பயணங்கள் நமக்குப் பாடமாக இருக்கின்றன:

 

(அ) கடவுளை நோக்கிய பயணம் – ஒவ்வொரு நாள் இரவிலும் அவரிடம் திரும்பி வந்து அந்த நாள் எப்படி இருந்தது, நாம் என்ன கற்றோம், யாரைச் சந்தித்தோம் என்பதை அவரிடம் இறைவேண்டலில் அறிக்கையிடுதல்.

 

(ஆ) நம்மை நோக்கிய பயணம் – செயல்களின் ஆரவாரத்திலிருந்து நாம் ஓய்ந்திருக்கும்போது, நம்மால் செயல்பட இயலாமல் இருக்கும்போது நாம் நம் வாழ்வின் மறுபக்கத்தை உணர்கிறோம். நாம் ஓய்வெடுக்கும்போது நம்மை நோக்கித் திரும்புகிறோம். நாம் இல்லை என்றாலும் இந்த உலகம் இயங்கும் என்னும் உள்ளத்தைப் பெறுகிறோம்.

 

(இ) பிறர்நோக்கிய பயணம் – பரிவு என்னும் உணர்வு நம்மை மையப்படுத்தியது அல்ல, மாறாக, பிறரை மையப்படுத்தியது. பிறரை மையப்படுத்திச் சிந்திக்கத் தொடங்கும்போது ஒருவர் தலைவர் ஆகிறார். பரிவு என்னும் உணர்வு உடனடியான செயல்பாடாக மாற வேண்டும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் ஆண்டவராகிய கடவுளிடம் ஞானம் கேட்டு இறைவேண்டல் செய்கிறார். இறைவேண்டல், ஓய்வு, பரிவு போன்றவை ஞானம் பெற்றவரின் அடிப்படையான செயல்களாக இருக்கின்றன.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: