• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

செயலே செபமாக! இன்றைய இறைமொழி. புதன், 7 அக்டோபர் 2026.

Wednesday, October 7, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 7 அக்டோபர் 2026
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
புனித செபமாலை அன்னை, நினைவு

கலா 2:1-2, 7-14. லூக் 11:1-4

 

செயலே செபமாக!

 

முதன்மையான கட்டளைகளாக இறையன்பையும் பிறரன்பையும் முன்மொழிகிறார் இயேசு. இறையன்பில் நாம் வளர்வதற்கான ஒரு வழி இறைவேண்டல். இறைவேண்டல் எப்படிச் செய்வதென இயேசு தம் சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

 

இயேசுவின் சமகாலத்தில் இறைவேண்டல் என்பது திருமறை நூல் வாசிப்பு எனவும், புகழ்ச்சிப் பாடல் பாடுவது எனவும் இருந்தது. இயேசு சொற்களைச் சுருக்கி செயல்களைக் கூட்டுகிறார்.

 

இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் மூன்று செயல்களுக்கு நம்மை அழைக்கிறது:

 

(அ) கடவுள் நம் தந்தை, எனவே, நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள் – இது இரத்த உறவோ, திருமண உறவோ அல்ல, மாறாக உடன்படிக்கை உறவு. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் சீனாய் உடன்படிக்கை வழியாகக் கடவுளுடைய மக்களாக இருந்தார்கள். கடவுள் அவர்களுடைய தந்தையாக இருந்தார். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் இரத்தம் என்னும் புதிய உடன்படிக்கை வழியாக, கடவுள் நம் தந்தையாகிறார்.

 

(ஆ) அன்றாட உணவு எங்களுக்கு அன்றாடம் தாரும்! – பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் பாலைநிலைப் பயணங்களில் ஆண்டவர் அன்றாடம் அவர்களுக்கு அப்பம் தந்தார். ஆண்டவர் வழங்கிய மன்னா கடவுளுடைய பாதுகாப்பின் அடையாளமாகத் திகழ்ந்ததோடு, இஸ்ரயேல் மக்கள் பற்றுறுதி, சரணாகதி, நிறைவு மனப்பான்மை, பிறர்நலம் கொண்டு வாழவும் அவர்களைத் தூண்டியது.

 

(இ) நாங்கள் மன்னிக்கிறோம், எங்களை மன்னியும்! – ஒருவர் மற்றவரின் குறைகளைப் பொறுத்துக்கொள்ளவும், நமக்கு எதிராக மற்றவர்கள் தவறு இழைக்கும்போது நீதியோடு அவருக்கு பதிலிறுப்பு செய்யாமல், இரக்கத்தோடு மற்றவரை மன்னித்தல்.

 

செபம் என்பதை விண்ணப்பங்கள் அடுக்கும் நேரம் அல்லது இடம் என எடுத்துக்கொள்ளாமல், கடவுளுக்கும் நமக்குமான உறவைச் சரிசெய்யும் நேரம் என எடுத்துக்கொள்வோம்.

 

நிற்க.

 

இன்று புனித செபமாலை அன்னையை நினைவுகூர்கிறோம். 7 அக்டோபர் 1571 அன்று லெபாந்தோ போரில் ஐரோப்பா வெற்றி பெற்றதன் அடையாளமாக அன்னை கன்னி மரியாவை வெற்றியின் அன்னை என அழைத்து, திருச்செபமாலை செபிக்க அழைக்கிறார் திருத்தந்தை 5-ஆம் பயஸ். தொடர்ந்து வந்த திருத்தந்தை 8-ஆம் கிரகொரி அன்னையை ‘செபமாலை அன்னை’ என அழைத்தார். தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இருக்கும் இந்த மாலையில் முத்துக்கள் நகர்வது, நகரும் நம் வாழ்க்கையை நினைவுறுத்துகிறது. கிறிஸ்துவின் பிறப்பு, பணி, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு என்று அவருடைய மறையுண்மைகளை இதில் தியானிக்கிறோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: