• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

யூதாவும் சீலாவும். இன்றைய இறைமொழி. வெள்ளி, 8 மே 2026.

Friday, May 8, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வெள்ளி, 8 மே ’26
பாஸ்கா ஐந்தாம் வாரம்
திப 15:22-31. யோவா 15:12-17

 

யூதாவும் சீலாவும்

 

திருத்தூதர் பணிகள் நூலில் வரும் ‘சீலா’ இன்றைய கதைமாந்தர். தமிழில் இவருடைய பெயர் பெண்ணின் பெயர் போல இருக்கிறது. ஆனால், ‘சைலஸ்’ என்ற கிரேக்கப் பெயர் கொண்ட இவர் ஓர் ஆண்.

 

எருசலேம் திருச்சங்கம் விருத்தசேதனம் பற்றிய பிரச்சினைக்கு விடை கண்டபின் அதை உடனடியாக கடிதம் வழியாக திருச்சபையாருக்கு அறிவிக்கின்றனர். இவர்கள் அறிவிக்கும் முறை அந்தக் காலத்தில் இருந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகின்றது.

 

ஒரு கடிதம் எழுதுகின்றனர். கடிதத்தை பவுல் மற்றும் பர்னபாவின் கைகளில் கொடுத்தனுப்பியிருக்கலாம். ஆனால், ‘பவுலும் பர்னபாவும்தான் இதை எழுதினார்கள்’ என்று யாராவது குற்றம் சுமத்தக்கூடும் என்று மிகவும் நுணுக்கமாக அறிந்து, தங்கள் திருச்சபையிலிருந்த இருவரை – யூதா மற்றும் சீலா – அனுப்புகின்றனர். ஏன் இருவரை அனுப்ப வேண்டும்? ‘இருவரின் சாட்சியம் செல்லும்’ என்பதற்காகவும், வழியில் ஏதாவது ஒரு விபத்து நேரிட்டு ஒருவர் இறக்க நேரிட்டாலும் மற்றவர் இருப்பார் என்ற எண்ணத்திலும் இருவர் அனுப்பப்படுகின்றனர்.

 

தூது அனுப்புப்படுபவர் தன்னை யார் அனுப்பினாரோ அவருக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும். ஆகையால்தான் ஞானநூல்கள் தூது அனுப்புதலைப் பற்றி அதிகம் பேசுகின்றன.

 

சீலா தான் அனுப்பப்பட்ட தூதுக்கு உண்மையானவராக இருக்கிறார்.

 

தூது அனுப்பப்படுபவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். எத்துன்பத்தையும் எதிர்கொள்பவராக, எந்தவொரு உடனடி இன்பத்தையும் விரும்பாதவராக இருக்க வேண்டும்.

 

கடிதத்தின் உள்ளடக்கத்தில் இரண்டு விடயங்கள் நம்மைக் கவர்கின்றன:

 

ஒன்று, ‘இன்றியமையாதவற்றைத் தவிர வேறு எந்தச் சுமையையும் சுமத்தக் கூடாது.’ பல நேரங்களில் வழிபாடு மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளில் பல தேவையற்ற சுமைகளாகவே இருக்கின்றன. வெளிப்புற அடையாளங்கள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றிலிருந்து சமயத்தின் உண்மையான மையத்தையும் உட்கருத்தையும் பிரித்தறியும் தெளிவு பெற்றிருந்தனர் தொடக்கத் திருஅவையினர். இன்று பல இடங்களில் சமயத்தின் உட்கருத்து மறைந்து தேவையற்ற சடங்குகளே முதன்மையாக இருக்கின்றன என்பது நமக்கு வருத்தம் தருகிறது.

 

இரண்டு, யூதாவும் சீலாவும் வாய்மொழியாகவும் அறிவிக்கின்றனர். அதாவது, மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்களுக்கு விளக்கம் தருகின்றனர். விளக்கம் தருதல் அல்லது ஒன்றின் பொருளை மற்றவர்களுக்கு உணர்த்துதல் என்பது பெரிய கொடை. அக்கொடையைப் பெற்றவர்களாக இருக்கின்றனர் இவர்கள்.

 

கடிதம் உடனடியாக ஒரு விளைவை ஏற்படுத்துகிறது. அது என்ன?

 

‘திருஅவையினர் ஊக்கமடைந்து மகிழ்ச்சியுற்றனர்’

 

இன்றைய நாள்களில் நம் செய்தியும் வார்த்தையும் மற்றவர்களுக்கு ஊக்கமும் மகிழ்ச்சியும் மட்டுமே தர வேண்டும். இறைவனின் உடனிருப்பு தருகின்ற ஊக்கம் என்றும் இல்லாத அளவுக்கு இன்று நமக்குத் தேவையாக இருக்கிறது.

 

சீலாவின் பிரமாணிக்கம், அறிவுத்திறன், மற்றும் ஊக்கம் நாம் கற்க வேண்டிய பாடங்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: