• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உலகம் முழுவதையும். இன்றைய இறைமொழி. வெள்ளி, 8 ஆகஸ்ட் ’25.

Friday, August 8, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

புனித பிரான்சிஸ்கு சவேரியார் புனித இஞ்ஞாசியார் கடவுள் சார்நிலை ஆன்மா சார்நிலை இறைவனின் விருப்பம் வாழ்வின் சிலுவைகள்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 8 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 18-ஆம் வாரம், வெள்ளி
இணைச்சட்ட நூல் 4:32-40. மத்தேயு 16:24-28

 

உலகம் முழுவதையும்

 

‘ஒருவர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவருடைய ஆன்மாவை -வாழ்வை அவர் இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்? தம் ஆன்மாவுக்கு – வாழ்வுக்கு ஈடாக அவர் எதைக் கொடுப்பார்?’

 

பிரான்சிஸ்கு சவேரியார் தன்னுடைய வகுப்பறையில் பேராசிரியராக உரையாற்றிவிட்டு வெளியே வந்தபோது, இஞ்ஞாசியார் சொன்ன மேற்காணும் நற்செய்தி வார்த்தைகள் அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றிப்போடுகின்றது.

 

உலகில் உள்ள எல்லாமும் நமக்கு வாழ்வு தந்துவிடுவதில்லை.

 

காலையில் நன்றாக உண்கிறோம். மதிய நேரத்தில் பசித்துவிடுகிறது.

 

காலையில் புதிய ஆடை அணிகிறோம். மாலையில் அழுக்காகிவிடுகிறது.

 

காலையில் புதிய புத்தகம் ஒன்றை வாசித்து அறிவை வளர்க்கிறோம். மாலையில் அதைவிட புதிய கருத்து ஒன்று வந்துவிடுகிறது. அல்லது நாம் வாசித்தது பழையதாகிவிடுகிறது.

 

காலையில் நம் உறவினர் அல்லது நண்பரைச் சந்திக்கின்றோம். எவ்வளவோ பேசுகின்றோம், சிரிக்கின்றோம். ஆனால், மாலையில் ஏதோ ஒரு வெறுமை நம்மை கவ்விக்கொள்கின்றது.

 

ஆக, உடல் சார், மூளைசார், உள்ளம்சார் எதுவும் நமக்கு நிறைவைத் தருவதில்லை. அல்லது அவை நிறைவைத் தருவன போலத் தோன்றினாலும் விரைவிலேயே அவை சலிப்பையும் வெறுமையையும் தந்துவிடுகின்றன.

 

இம்மூன்றையும் கடந்த ஆன்மா சார் ஒன்றை இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கின்றது.

 

‘ஆன்மா சார்’ அல்லது ‘கடவுள் சார்’ நிலையில் நிறைவு மட்டுமே உண்டு. இதை அடைவதற்குத் தொடர் முயற்சி தேவை. அந்த முயற்சியின் முதல் படி இழப்பது.

 

மேற்காணும் மூன்று நிலையிலும் நாம் கூட்டுகிறோம் அல்லது சேர்க்கிறோம். உணவை, உடையை, அறிவை, உறவைக் கூட்டிக்கொண்டே போகிறோம். ஆனால், கூட்டுவதில் அல்ல குறைப்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது.

 

வாழ்க்கை இதை நமக்கு நன்றாக உணர்த்துகிறது. குழந்தையாய் இவ்வுலகிற்கு வந்தபோது வெறுமையாய் வருகிறோம். ஏனெனில் இறைமையிலிருந்து நாம் வருகிறோம். அப்புறம் வரிசையாகச் சேர்த்துக்கொண்டே போகிறோம். உடை, உணவு, இருப்பிடம், படிப்பு, நண்பர்கள், உறவினர்கள் என கூடிக்கொண்டே போகிறது. இறுதியில், உணவு ஒவ்வாமை, ஒரு கட்டில் அளவு இடம், ஒரு வேளை உணவு, மிகக் குறைவான உடை, மிகக்; குறைவான நண்பர்கள், உறுப்புகள் செயல் இழப்பு என இறுதியில் இறைமையாகவே மாறிவிடுகிறோம்.

 

இந்த இறுதியை முதலிலேயே மனத்தில் வைத்து வாழ்பவர்கள் தங்கள் ஆன்மாவை இழக்கமாட்டார்கள். இவர்கள் வாழ்வின் முக்கியமானவற்றின்மீது மட்டுமே அக்கறை காட்டுவார்கள். முக்கியமானவற்றை முதன்மைப்படுத்துதலே நாம் சுமக்கும் சிலுவை.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆற்றிய அரும் பெரும் செயல்களை எடுத்துரைக்கிறார். ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்வதற்குக் காரணம் அவருடைய விருப்பமே! இறைவனின் விருப்பம் ஏற்கிறவர் அன்றாட வாழ்வின் சிலுவைகளைச் சுமக்கத் தயாராகிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: