• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

தேடல் தெளிவு. இன்றைய இறைமொழி. வியாழன், 8 அக்டோபர் 2026.

Thursday, October 8, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 8 அக்டோபர் 2026
பொதுக்காலம் 27-ஆம் வாரம்
கலா 3:1-5. லூக் 11:5-13

 

தேடல் தெளிவு

 

மனித உறவுகள் தேவைகள் அடிப்படையில் கட்டப்பட்டவை. நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு மற்றவருடைய நன்மைத்தனம் நமக்கு உதவி செய்தாலும், சில நேரங்களில் நம் விடாமுயற்சி வழியாக நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறோம்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் எடுத்துக்காட்டில், ஒருவர் தன் நண்பருடைய கதவை நள்ளிரவில் தட்டுகிறார். தட்டுபவருக்குக் கிடைக்கும் உதவியானது – அப்பமானது – நண்பரின் நன்மைத்தனத்தை முன்னிட்டோ, அவர்களுக்கு இடையேயான நட்பை முன்னிட்டோ அல்ல, மாறாக, தொடர்ந்து தட்டுகிற அவருடைய செயலை முன்னிட்டே நடக்கிறது. தொந்தரவின் பொருட்டே உதவி கிடைக்கிறது.

 

நிகழ்வில் நாம் காண்கிற இந்த நபர் தன் தேடலில் தெளிவுடன் இருக்கிறார். யாரிடம் சென்று தட்ட வேண்டும் என்பதை அறிந்தவராக இருக்கிறார்.

 

கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.

 

எது தேவை எனக்கு நான் என்பதைத் தெளிவாக அறிய வேண்டும் – இதுவே கேட்டல்.

 

தேவையானதை மட்டுமே முன்வைத்து கவனச் சிதறல்களை விடுத்து நகர வேண்டும் – இது தேடுதல்.

 

ஒரு முயற்சி பலன் தராதபோது தொடர்ந்து நான் முயற்சி செய்ய வேண்டும் – இதுவே தட்டுதல்.

 

‘காஃபி வேணுமா, டீ வேணுமா?’ என்னும் எளிதான கேள்விக்கான விடை தேடலைக்கூட நாம் மற்றவரிடம் விட்டுவிடுகிறோம். ‘எதுனாலும் ஓகே!’, ‘என்ன இருக்கு?’, ‘நீங்க என்ன எடுப்பீங்க?’ என்று நாம் சில நேரங்களில் விடையை மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

 

பல நேரங்களில் கடவுள் நம் செபத்தைக் கேட்பதில்லை என்று நாம் புலம்புகிறோம். கேட்பதிலேயே நமக்குத் தெளிவில்லாதபோது கடவுள் எப்படி நாம் கேட்பதைக் கொடுப்பார்? எடுத்துக்காட்டாக, ‘போர் நின்று அமைதி பிறக்க வேண்டும்!’ என்று செபிக்கிறோம். ஆனால், எந்தப் போர்? எங்கே நடக்கிற போர்? எப்போது முடிய வேண்டும்? எத்தகைய அமைதியை நாம் எதிர்பார்க்கிறோம்? – இவற்றுக்கான தெளிவு நம்மிடம் இல்லை.

 

தேடலில் தெளிவு கொண்டோர் தங்கள் இலக்கை எளிதில் அடைவார்கள்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: