• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

செல்வம் துறப்பு. இன்றைய இறைமொழி. சனி, 8 நவம்பர் ’25.

Saturday, November 8, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சீடத்துவம் செல்வம் இறையாட்சி செல்வத் துறப்பு செல்வ துறவு நேர்மையற்ற செல்வம் உண்மைச் செல்வம் கடவுள்-பணிவிடை செல்வம்-பணிவிடை கடவுள்-செல்வம் தெரிவு பணத்துறப்பு செல்வம்-வழித்துணை

இன்றைய இறைமொழி
சனி, 8 நவம்பர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் வாரம், சனி
உரோமையர் 16:3-9, 16, 22-27. லூக்கா 16:9-15

 

செல்வம் துறப்பு

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘செல்வம்’ என்ற ஒற்றைச் சொல்லை மூன்று நிலைகளில் பயன்படுத்துகின்றார் இயேசு: (அ) ‘நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்,’ (ஆ) ‘யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?’, (இ) ‘நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.’

 

‘நேர்மையற்ற செல்வம்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும் இயேசு, ‘செல்வம்’ என்பது பயன்படுத்த வேண்டிய பொருள்தானே தவிர, வாழ்வின் இலக்கு அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றார்.

 

‘உண்மைச் செல்வம்’ என்பது இறையாட்சி சார்ந்தவற்றைக் குறிக்கிறது. நம்மிடமிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாத, திருடர் கொள்ளையிட இயலாத, கரையான் அரிக்காத செல்வம் இதுவே. கடவுளே இச்செல்வம். கடவுளைப் பற்றிக்கொள்வதிலும் கடவுள் நம் நிறைவைக் காண்பதிலும் இது அடங்கியுள்ளது.

 

மூன்றாவதாக, ‘செல்வம்’ என்பதைக் கடவுளுக்கு எதிராக முன்வைக்கின்றார் இயேசு. ‘கடவுள்’ மற்றும் ‘செல்வம்’ என்னும் இரண்டில், ஒருவர் ஏதாவது ஒன்றை மட்டுமே தெரிவு செய்ய முடியும். ஒன்று மற்றொன்றுக்கு முற்றிலும் முரணானது. லூக்கா நற்செய்தியில் சீடத்துவம் பற்றிய போதனை வரும் இடங்களில் எல்லாம், பணத்துறப்பு அல்லது செல்வத் துறப்பு பற்றிய குறிப்பும் வருகின்றது. செல்வம் அல்லது பணம், சீடத்துவத்தின் பெரிய தடைக்கல் என்பது லூக்காவின் புரிதல்.

 

நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்’ என்று பதிவு செய்கின்றார் லூக்கா.

 

‘தாங்கள் செல்வராய் இருப்பதால் நேர்மையாளர்கள்’ என்று மொழிந்தனர் பரிசேயர். மேலும், இச்சொல்லாடலைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எவ்வழியிலும் செல்வத்தைத் தேடத் துணிந்தார்கள். ஆனால், அவர்கள் தங்களிலே நேர்மையற்றவர்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

 

செல்வம் என்பது வழித்துணையாக இருக்கலாமே தவிர, வழியாகவும் வழியின் இலக்காகவும் இருக்கத் தேவையில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: