• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நீங்கள் சாட்சிகள்! இன்றைய இறைமொழி. வியாழன், 9 ஏப்ரல் ’26.

Thursday, April 9, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 9 ஏப்ரல் ’26
பாஸ்கா எண்கிழமை – வியாழன்
திருத்தூதர் பணிகள் 3:11-26. லூக்கா 24:35-48

 

நீங்கள் சாட்சிகள்!

 

லூக்கா நற்செய்தி வாசகத்தின் இறுதிப் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்துள்ளது. உயிர்த்த இயேசு தோன்றுதல் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் இரண்டு முறை தரப்பட்டுள்ளது. முதலில், எம்மாவு ஊருக்குச் சென்ற இரண்டு சீடர்களுக்கு இயேசு காட்சி தருகிறார். இரண்டாவதாக, கூடியிருந்த மற்ற சீடர்களுக்குக் காட்சி தருகிறார். இரண்டு நிகழ்வுகளிலும் உணவு முக்கியமானதாக இருக்கிறது. முதல் நிகழ்வில் அப்பம் பிட்கும்போது இயேசுவை சீடர்கள் அடையாளம் காண்கிறார்கள். இரண்டாவது நிகழ்வில் ‘உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா?’ என்று இயேசு கேட்க, வேக வைத்த மீன் ஒன்றை அவர்கள் அவருக்கு அளிக்கிறார்கள். உணவு என்பது உயிரின் வாழ்வின் அடையாளமாக இருக்கிறது. ஏனெனில், உணவு உண்பதன் வழியாக நாம் நம் வாழ்வை, உயிரைத் தக்கவைத்துக்கொள்கிறோம்.

 

அச்சம், திகில், கலக்கம் என்று மாறுகிற சீடர்களின் உணர்வு இறுதியில் மகிழ்ச்சியில் நிறைவுபெறுகிறது. இயேசுவின் உடனிருப்பு அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறது.

 

அவர்கள் மறைநூல்களைப் புரிந்துகொள்ளுமாறு அவர் அவர்களுடைய கண்களைத் திறக்கிறார். ‘நீங்கள் சாட்சிகள்!’ என்று புதிய பணியை அவர்களுக்கு வழங்குகிறார்.

 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) நோன்பு விடுத்து உண்ணுதல்

 

தவக்காலத்தில் நோன்பு இருந்தோம். நோன்பு என்றால் பசியை விரும்பி ஏற்பது. இனி நாம் பசியை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் நம்மோடு இருக்கிறார். இன்னொரு பக்கம், இயேசு இறந்து போயிருந்தாலும் சீடர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் – உண்ணுதல் உறங்குதல் – சரியாக இருக்கிறார்கள். வாழ்வில் நமக்கு என்ன இழப்பு, பிரச்சினை வந்தாலும் தொடர்ந்து வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும். நாம் பசித்துக் கிடப்பதால் பிரச்சினை தீர்ந்துவிடாது!

 

(ஆ) மறைநூல்களைப் புரிந்துகொள்தல்

 

இயேசுவின் சொற்கள் மறைந்துவிட்டவுடன் அவருடைய சொற்கள் நற்செய்தியாக, மற்ற நூல்களாக நமக்கு விவிலியத்தில் எழுதப்பட்டன. கடவுளின் சொற்களை நாம் புரிந்துகொள்வதற்கு நம் மனக்கண்கள் திறக்கப்பட வேண்டும். நம் புறக்கண்களைத் திறந்து நாம் இறைவார்த்தையை வாசித்தாலும், அகக்கண்கள் திறக்கப்பட்டால்தான் நாம் அதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

(இ) நீங்கள் சாட்சிகள்!

 

‘இவற்றுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகள்!’ என்று சொல்கிற இயேசு தம் சீடர்களைப் புதிய பணிக்கு அனுப்புகிறார். பூட்டிய அறையிலிருந்து வெளியேறுகிற சீடர்கள் இனி இயேசுவின் உயிர்ப்பை அறிவிக்க வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்கு நாம் நம் வாழ்க்கையால் சாட்சி பகர வேண்டுமெனில், நம் வாழ்வு மகிழ்ச்சியான வாழ்வாக அமைய வேண்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: