• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நம்மைத் தேடி வரும் கடவுள். இன்றைய இறைமொழி. ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2026.

Sunday, August 9, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு
1 அர 19:9,11-13. உரோ 9:1-5. மத் 14:22-33

 

நம்மைத் தேடி வரும் கடவுள்

 

நம் வாழ்வின் சோர்வு, விரக்தி, தனிமை, இருளில் நம்மைத் தேடி வருகிறார் கடவுள்.

 

(அ) மெல்லிய ஒலியில் கடவுள்

 

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவைத் தேடி வருகிறார் கடவுள். ‘எலியா’ என்றால் ‘ஆண்டவரே என் கடவுள்’ என்பது பொருள். பாகால் இறைவாக்கினர்கள் நானூறு பேரை எதிர்கொன்று அவர்களைக் கொன்றழித்த இறைவாக்கினர் எலியாவைக் கொல்லத் தேடுகிறார் ஈசபேல். ஈசபேல் அரசிக்கு அஞ்சி ஓரேபு மலையின் குகை ஒன்றில் ஒளிந்திருந்த இறைவாக்கினரைத் தேடி வருகிறார் ஆண்டவர். ‘நான் சாகப்போகிறேன்!’ என்று சோர்வடைந்தவருக்கு புதிய பணியை – சிரியாவின் அரசரை, இஸ்ரயேலின் அரசரைத் திருநிலைப்படுத்துதல், எலிசா இறைவாக்கினரை அருள்பொழிவு செய்தல் – வழங்குகிறார். சுழற்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றில் தம்மை வெளிப்படுத்தாத கடவுள் மெல்லிய ஒலியில் வெளிப்படுத்துகிறார். வன்மத்தின் வழியாக அல்ல, மென்மையின் வழியாகவே இறைவனைக் கண்டுகொள்கிறார் எலியா.

 

(ஆ) வானும் மண்ணும் சந்திப்பு

 

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 85), ‘பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை ஒன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்’ என்று பாடுகிறார் ஆசிரியர். மண்ணும் விண்ணும் சந்திக்கும் நிகழ்வே கடவுள் அனுபவம். இந்த அனுபவம் கிறிஸ்து நிகழ்வில் நடந்தேறுகிறது – இம்மானுவேல் – ‘கடவுள் நம்மோடு.’

 

(இ) மீட்பு தரும் கடவுள்

 

மீட்பின் வரலாற்றில் இஸ்ரயேல் மக்கள் முதன்மையான இடம் பெறுகிறார்கள். ஏனெனில், கடவுளின் வாக்குறுதி அவர்களுக்குத் தரப்படுகிறது. இந்த வாக்குறுதி கிறிஸ்து நிகழ்வில் நிறைவேறுகிறது. ஆனால், இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைப் பற்றி வருத்தம் கொள்கிறார் பவுல்.

 

(ஈ) கடலில் நடந்துவரும் கடவுள்

 

இயேசு கடலில் நடந்து வந்து சீடர்களை எதிர்கொள்கிறார். இந்த நிகழ்வை மத்தேயு, மாற்கு, யோவான் நற்செய்தியாளர்கள் பதிவு செய்கிறார்கள். இயற்கையின்மேல் ஆற்றல் கொண்டவராக இயேசுவைக் காட்டுகிறது இந்த வல்லசெயல். இந்த நிகழ்வில் பேதுருவையும் கடலில் நடக்கச் செய்து, பேதுருவின் முதன்மையை எடுத்துரைக்கும் நிகழ்வாக மாற்றுகிறார் மத்தேயு.

 

இந்த நிகழ்வில் முதலில் இயேசு சீடர்களோடு இல்லை, அடுத்து, அவர்கள் கண்களுக்கு ‘பேய்’ போலத் தெரிகிறார். கடைசியில் ‘உண்மையிலேயே நீர் இறைமகன்’ என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார்கள் சீடர்கள்.

 

நீச்சல் தெரிந்த பேதுரு மூழ்கத் தொடங்குகிறார். இயேசு அவரைத் தூக்கி விடுகிறார். அவருடைய நம்பிக்கைக் குறைவைக் கடிந்துகொள்கிறார்.

 

இந்த நிகழ்வு வழியாக மத்தேயு தன் குழுமத்தை நம்பிக்கையில் வளரச் செய்கிறார்.

 

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) கடவுளின் முன்னெடுப்பு

 

கடவுளே நம்மைத் தேடி வருகிறார். நம் வாழ்வில் சோர்வு, விரக்தி, தனிமை, இருள், அச்சம் சூழ்ந்து வரும்போது அவர் நம் அருகே வருகிறார். இன்றும் பல நபர்கள் வழியாக அவர் நம்மிடம் வருகிறார். நாமும் மற்றவர்களைத் தேடிச் செல்லும்போது கடவுளை அவர்கள் நடுவே எடுத்துச் செல்கிறோம்.

 

(ஆ) கடவுளைக் கண்டுகொள்தல்

 

மெல்லிய ஒலியில் கடவுளைக் கண்டுகொள்கிறார் எலியா. கடலின் நடுவில் ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள் சீடர்கள். இன்று நாம் கடவுளை நம் நடுவில் கண்டுகொள்ள வேண்டும்.

 

(இ) அச்சம் விடுத்தல்

 

கடவுள் தங்களோடு இருக்கிறார் என்னும் உணர்வு எலியாவின் அச்சம் போக்குகிறது. தம் சீடர்களின் அச்சம் போக்குகிறார் இயேசு. அச்சம் இருக்குமிடத்தில் நம்பிக்கை இருப்பதில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: