இன்றைய இறைமொழி
வியாழன், 10 ஜூலை ’25
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – வியாழன்
தொடக்கநூல் 44:18-21, 23-29, 45:1-5. மத்தேயு 10:7-15
கொடையாகவே வழங்குங்கள்!
யோசேப்பின் சகோதரர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் அவர்களைச் சோதித்தறிந்து, இறுதியில், ‘நான்தான் யோசேப்பு … உங்கள் சகோதரன் யோசேப்பு’ என வெளிப்படுத்துகிறார். ஆனால், கதையின் சோகம் என்னவென்றால், இந்நிகழ்வுக்குப் பின், அவருடைய சகோதரர்கள் ஓரிடத்தில்கூட அவரை, ‘சகோதரர்’ என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்மேல் அச்சம் கொள்கிறார்கள். அவர் தங்களைப் பழிவாங்குவார் என நினைக்கிறார்கள். தங்கள் தந்தையின் இறப்புக்குப் பின்னர் பழிதீர்ப்பார் என்கிறார்கள். ஆனால், யோசேப்பு அவர்கள் தனக்குச் செய்த தீங்குக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மையே செய்கிறார். யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. ‘உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பினார்’ என மொழிகிறார். அதாவது, தான் விற்கப்படவில்லை, மாறாக, கடவுளால் அனுப்பட்டார் என்பதே அவருடைய புரிதல். தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தீங்கையும் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. தனக்குக் கிடைத்த அனைத்தும் கடவுளின் கொடை என்பதால் அதைக் கொடையாகவே வழங்கத் துணிகிறார்.
பேய்களை ஓட்டவும் நோய்நொடிகளைக் குணமாக்கவும் தம் சீடர்களுக்கு அதிகாரம் வழங்குகிற இயேசு, அவர்களைப் பணிக்கு அனுப்புமுன், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ‘கொடையாகப் பெற்றீர்கள். கொடையாகவே வழங்குங்கள்!’ என்பது அவருடைய முதன்மையான அறிவுரையாக இருக்கிறது. கொடையாகக் கொடுத்தல் என்பது இலவசமாகக் கொடுத்தல் அல்ல. கொடைக்கும் இலவசத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. இலவசம் பெரும்பாலும் வியாபாரம் சார்ந்தது. மற்றவர்களின் தேவை அறிந்து வழங்கப்படுவது கொடை. மற்றவர்களைத் தன் வயப்படுத்த வழங்கப்படுவது இலவசம். வழங்கப்படும் அனைத்து இலவசங்களுக்கும் மறைமுகமான விலை ஒன்று இருக்கும். ஆனால், கொடை பரிவுடன் தொடர்புடையது. கொடை அளிப்பவர் மற்றவருக்கு மேல் உயர்கிறார். கொடை அளிப்பவர் கணக்குப் பார்ப்பதில்லை. தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் மட்டும்தான் தன் வாழ்வைக் கொடையாகக் கொடுக்க முடியும். தன் வாழ்வைக் கொடையாகப் பார்ப்பவர் தான் அனுபவிக்கும் எதிர்ப்பு, நிராகரித்தல் பற்றிக் கவலையுறுவது இல்லை.
‘எடுத்துச் செல்வது,’ ‘கொடுத்துச் செல்வது’ என வாழ்க்கையை நாம் இரண்டு நிலைகளில் வாழ்கின்றோம். எடுப்பது எனக்கு, கொடுப்பது பிறருக்கு என்றுதான் அதன் இயக்கம் இருக்கின்றது. ஆக, எடுத்தலிலிருந்து கொடுத்தல் மனநிலைக்குச் செல்ல இயேசு தன் திருத்தூதர்களை அழைக்கின்றார்.
‘நிறைய இருந்தால் நல்லது’ என்ற மனநிலை இன்று எங்கும் பேசப்படுவதால், நாம் அதையே பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். ‘நிறையப் பணம்,’ ‘நிறையப் புகழ்,’ ‘நிறைய நண்பர்கள்’ என யார் அதிகம் எடுத்துக்கொள்கிறாரோ அவரே இன்று மேன்மையானவராகக் காட்டப்படுகின்றார். ‘நிறைய’ என்பது ஓர் ஆபத்தான வார்த்தை. ஏனெனில், ‘இதுதான் நிறைய’ என்று எப்போதும் நாம் எதையும் வரையறுத்துவிட முடியாத வண்ணம் நம் ஆசை கூடிக்கொண்டே போகும்.
நலம் தரும் பணியும், பேய் ஓட்டும் பணியும் கொடையாக மட்டுமே நடக்க வேண்டும் என்பது இயேசுவின் பாடம். ஏனெனில், இவ்விரண்டும் திருத்தூதர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டவை. ஆக, அவற்றுக்கு விலை பேசுவது சரியல்ல.
ஒவ்வொரு பொழுதும் நாம் இறைவனிடமிருந்து பெற்றிருக்கின்ற கொடை என்பதை உணர்தலே பெரிய ஞானம். இந்த ஞானம் பிறந்தால் நாம் எதையும் எடுத்துக்கொள்ள முயற்சிக்க மாட்டோம்.
யோசேப்பின் நம்பிக்கைப் பார்வை போற்றுதற்குரியது. மற்றவர்கள் நம் வாழ்க்கையை எப்படிப் பார்த்தாலும், அதை நாம் எப்படிப் பார்க்கிறோமோ அதைப் பொறுத்தே வாழ்வுக்குப் பொருள் கிடைக்கிறது. மற்றவர்கள் பார்வையில் தமக்குத் தீங்கு நேர்ந்தாலும், தன் பார்வையில் அதைக் கடவுளின் அழைப்பாகப் பார்க்கிறார் யோசேப்பு. விளைவு, தீங்கு செய்து பழிதீர்க்க அவர் முயற்சி செய்யவில்லை. தன் கைகளில் உள்ள அனைத்தும் கடவுளின் கொடை என அவர் உணர்ந்ததால், கைகளை விரித்துக் கொடுக்கிறார். திருத்தூதுப் பணிக்கான இயேசுவின் அழைப்பும் திருத்தூதர்கள் பெற்ற கொடையே. அனைத்தும் கடவுளின் கொடை என உணர்ந்து வாழ்பவர் குறைவிலும் நிறைவு காண்பார், எதிர்ப்பையும் சமாளித்துக்கொள்வார், வறுமையையும் வளமை ஆக்குவார்.
இதற்கான அழகிய வாழ்வியல் எடுத்துக்காட்டை முதல் வாசகத்தில் பார்க்கிறோம். அடிமையாக விற்கப்பட்டு, எகிப்தின் ஆளுநராக உயர்ந்த யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். அடிமையாக இருந்த தான் ஆளுநராக உயர்த்தப்பட்டது ஆண்டவரின் கொடை என்பதை உணர்ந்தார் யோசேப்பு. அதனால்தான், போத்திபாரின் மனைவி அவரைக் கவர்ந்திழுக்க முயன்றபோது, ‘ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்படுவதை நான் செய்யலாமா?’ என்று ஆண்டவரை மனத்தில் வைத்துக் கேட்கின்றார். அந்த நேரத்தில் அவர் தன் பார்வையில் நலமெனப்பட்டதையோ அல்லது அந்தப் பெண்ணின் பார்வையில் நலமெனப்பட்டதையோ செய்ய முயற்சிக்கவில்லை. தன் சகோதர்களைப் பழிதீர்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும், அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கின்றார். அவர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்கின்றார்.
‘நீங்கள் என்னை விற்றீர்கள். ஆண்டவர் என்னை அனுப்பினார்!’ எனச் சொல்கிறார் யோசேப்பு.
தான் விற்கப்பட்ட அடிமை என்ற நிலையில் அவர் தன் வாழ்க்கையை வாழவில்லை. அப்படி அவர் வாழ்ந்திருந்தால் அடிமையாகவே இருந்திருப்பார். வன்மம், பழியுணர்வு கொண்டு வளர்ந்திருப்பார். ஆனால், அனைத்திலும் ஆண்டவர் தன்னை அனுப்பியதாகவே அவர் உணர்ந்தார்.
இதுவே நம்பிக்கைப் பார்வை.
நம்பிக்கைப் பார்வை அனைத்தையும் கொடையாகவே பார்க்கும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: