• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நாம் எடுப்பவர்களா? கொடுப்பவர்களா? இன்றைய இறைமொழி. ஞாயிறு, 10 ஆகஸ்ட் ’25.

Sunday, August 10, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி விழிப்பு நிலை இஸ்ரயேல் மீட்பு நம்பிக்கையின் பொருள் நம்பிக்கை-விவிலிய பொருள் விழிப்பாயிருக்கும் பணியாளர்கள் தயார்நிலை ஆயத்த நிலை எடுத்தல்-கொடுத்தல் பாதுகாப்பின்மை இறைப்பராமரிப்பு பொறுப்புணர்வு தலித் விடுதலை ஞாயிறு

இன்றைய இறைமொழி
ஞாயிறு, 10 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 19-ஆம் ஞாயிறு
சாலமோனின் ஞானம் 18:6-9. எபிரேயர் 11:1-2, 8-19. லூக்கா 12:32-48

 

நாம் எடுப்பவர்களா? கொடுப்பவர்களா?

 

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களின் மீட்பு அவர்களுடைய சொந்த முயற்சிகளால் அல்ல, மாறாக, கடவுளின் அளப்பரிய இரக்கத்தால்தான் நடந்தேறுகிறது என்று சொல்லப்படுகின்றது. இதை உணர அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் உள்ளத்தை கடவுளிடம் பதிப்பதுதான். இதன் நீட்சியாக, ‘நம்பிக்கை என்றால் நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை’ என்று தன் திருச்சபைக்கு அறிவுறுத்தும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், உறுதியோடும், ஐயமற்ற நிலையிலும் கண்ணுக்குப் புலப்படாதவற்றின்மேல் மனத்தைச் செலுத்த அழைக்கின்றார் (இரண்டாம் வாசகம்).

 

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக உள்ளது: (அ) ‘கவலை வேண்டாம்’ என்றும், ‘செல்வத்தின் மீதான கவலை பயனற்றது’ என்றும் அறிவுறுத்தும் பகுதி, (ஆ) ‘விழிப்பாயிருக்கும் பணியாளர்’ வழியாக தேவையான விழிப்பு நிலையை ஏற்படுத்தும் பகுதி. நாம் கவலை கொள்ளும்போதும் விழிப்பாயிருக்கத் தவறுகிறோம். ஏனெனில், கவலை நம்மை நம்முடைய இறந்த காலக் காயத்தோடு, அல்லது எதிர்கால பயத்தோடு கட்டிவிடுகிறது. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே பிளவுபட்டுக் கிடப்பதால் மனம் இன்றில் அல்லது நிகழ்காலத்தில் தங்க மறந்துவிடுகிறது.

 

‘உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ என்றால், நம்முடைய செல்வம் எது என்பதை தொடக்கத்திலேயே முடிவுசெய்துகொள்ள வேண்டும். இதில் நாம் சமரசம் செய்துகொண்டால், அல்லது ஒரே நேரத்தில் இரண்டு மூன்று செல்வங்களை வைத்திருக்க விரும்பினால் உள்ளம் பிளவுண்டு போவதோடு, அது மனச் சோர்வையும் உடல் சோர்வையும் ஏற்படுத்திவிடும். உள்ளத்தைச் சரியான இடத்தில் வைக்க நமக்குத் தேவையானவை எவை? (அ) கடவுளின் அரும்பெரும் செயல்கள் மேல் நம்பிக்கை – இஸ்ரயேல் மக்கள் போல, (ஆ) ‘எடுப்பதை’ விடுத்துக் ‘கொடுக்கத்’ தொடங்குவது – ஏனெனில், நாம் எடுப்பதை விட நாம் கொடுப்பதால்தான் மற்றவர்கள்மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும், (இ) தயார்நிலையில் இருப்பது – வரிந்து கட்டிக்கொண்டு, எரியும் விளக்குகளோடு செயலுக்குத் தயார்நிலை, (ஈ) நம்பிக்கைக்கு உரிய, அறிவாளியான பொறுப்பாளராக இருப்பது – நாம் யாருக்கும் எதற்கும் உரிமையாளர் அல்ல. பொறுப்பாளர்கள்தாம், மற்றும் (உ) கொடுக்கப்பட்டதை பெருகச் செய்வது – உழைப்பாலும் படைப்பாற்றலாலும்.

 

இன்றைய நற்செய்தி இரண்டு பகுதிகளாக உள்ளது. 12:32-34 ‘கவலை வேண்டாம்’ என இயேசு அறிவுறுத்தும் பகுதியாகவும், ‘செல்வத்தின் மீதான கவலை’ தேவையற்றதும் என சொல்வதாகவும், இரண்டாவது பகுதி 12:35-48 ‘விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்’ எடுத்துக்காட்டு வழியாக நம் வாழ்விற்குத் தேவையான விழிப்பு நிலையை, ஆயத்த நிலையை நமக்கு அறிவுறுத்துவதாகவும் அமைந்துள்ளது. நம் சிந்தனைக்காக ‘உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’ (12:34) என்ற இறைவாக்கை எடுத்துக்கொள்வோம். இந்த வாக்கு இரண்டு பகுதிகளையும் இணைப்பதாக உள்ளது. நாம் எதைப்பற்றிச் சிந்திக்கின்றோம்? நம் உள்ளம் எங்கே இருக்கின்றது? நாம் விழிப்பாயிருக்க நம் சிந்தனை தடையாக உள்ளதா?

 

மனித வாழ்க்கையின் உந்துதலை ‘எடுத்தல்’, ‘கொடுத்தல்’ என்று பிரிக்கலாம். நம்மில் ‘டேக்கர்’, ‘கிவர்’ என்ற இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். நம்மில் இருக்கும் ‘டேக்கர்’, ஒவ்வொரு நிகழ்விலும், நபரிலும் நமக்கு என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவது, வன்முறை, பொறாமை, ஒப்பீடு, பிளவு மனப்பான்மை இவைகளுக்குக் காரணமும் இவரே. நம்மில் இருக்கும் ‘கிவர்’ நம்மை மற்றவர்களுக்குக் கொடுக்க நம்மைத் தூண்டுபவர். நம் அன்பு, நட்பு, இரக்கம், கருணை, கரிசனை, தியாகம் அனைத்திற்கும் காரணம் இவரே. நம்மில் இருக்கும் இவ்விருவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியது எதார்த்தம் என்றாலும் நாம் எடுக்க வேண்டிய முடிவு நம்மில் இவர்கள் யார் செயலாற்றுகிறார்கள் என்று தீர்மானிப்பதுதான்.

 

‘உங்கள் உடைமைகளை விற்று’ எனக் கற்பிக்கும் இயேசு ‘எடுத்தலை’ விடுத்து ‘கொடுக்க’ அழைக்கின்றார். நாம் பிறக்கும்போது கைகளை இறுக மூடிக்கொண்டே பிறக்கின்றோம். இதுதான் நாம் அனுபவிக்கும் முதல் பாதுகாப்பின்மை. தாயின் வயிற்றில் எந்தக் கவலையும் இல்லாமல், பாதுகாப்பாக இருக்கும் நமக்கு வெளி உலகம் பாதுகாப்பற்றதாகத் தெரிகின்றது. பாதுகாப்பு வேண்டி நாம் எதையாவது பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். வாழ்வில் நமக்கு முன் எப்போதுமே ஒரு திரைச்சீலை இருக்கின்றது. திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என்பது நமக்குத் தெரிவதில்லை. இது ஒரு வரப்பிரசாதம் என்றாலும், இது அச்சுறுத்தலாகவும் இருக்கின்றது. நாளை என்ன நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் நம்மையறியாமலேயே எதையாவது பற்றிக்கொள்ளத் தூண்டுகின்றன. பணம், பொருள், நண்பர்கள், பதவி, படிப்பு என எதையாவது பிடித்துக்கொண்டு திரைச்சீலைக்கு முன் நின்று கொண்டேயிருக்கின்றோம். ‘துக்கத்திலும், தூக்கத்திலும், ஏக்கத்திலும் கழியும் வாழ்க்கை.

 

இன்று இயேசு தரும் பாடம் என்னவென்றால் திரைச்சீலைக்குப் பின் என்ன இருக்கும் என நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் உள்ளத்தை என்பக்கம் திருப்பு என்பதுதான்! நம் பாதுகாப்பு நம் செல்வத்தில் அல்ல இறைப்பராமரிப்பில் என்பதுதான். ‘என் பற்றுக்களா?’ அல்லது ‘இறைப்பராமரிப்பா’? இரண்டையும் பற்றிக்கொள்வது சாத்தியமல்ல. ‘எனக்கு இது வேண்டும்’ என்று நினைக்கின்ற மனம் ‘எனக்கு இன்னும் வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றது. ஒன்று கிடைக்க மனம் மற்றதற்குத் தாவுகின்றது. ‘இதைவிட அது நல்லது’ என நினைக்கின்றது. இந்த அங்கலாய்ப்பில் நம் கவனம் சிதறியே போகின்றது. இந்த அங்கலாய்ப்பு நம்மை எதிர்காலத்திலேயே அல்லது இறந்த காலத்திலேயே வாழ்பவர்களாக மாற்றுகிறது. இதற்கு மாறாக, இறைப்பராமரிப்பில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது நாம் ‘இன்றில்’ வாழத் தொடங்குகின்றோம். ‘இன்றில்’ வாழ்வதுதான் விழிப்பு நிலை, ஆயத்த நிலை. இயேசுவின் சீடர்கள் அங்கலாய்ப்பு, ஏக்கம் போன்றவற்றிலிருந்து மனச்சுதந்திரம் பெற்றவர்களாகவும், தாராள உள்ளம் கொண்டவர்களாகவும் இருக்க அழைப்புப் பெறுகின்றனர். ‘விழிப்பாயிருக்காத’ நிலை ஒருவர் மற்றவரை ‘அடிக்கவும், மயக்கமுற உண்ணவும் குடிக்கவும்’ (12:45) நம்மைத் தூண்டுகிறது.

 

கைகளை விரித்துக் கொடுப்பது. கைகளை மூடிப் பற்றிக்கொள்வதை விட, கைகளை விரித்துக் கொடுக்கும்போது திரைச்சீலை விலகி நம் கண்களுக்கு இறையரசு தெரிகின்றது. இந்த விரித்துக் கொடுத்தலை நம்மில் தூண்ட வேண்டியது ‘பொறுப்புணர்வு’. நாம் இந்த உலகில் வெறும் மேற்பார்வையாளர்களே. எதுவும் நமக்குச் சொந்தமில்லை? நம் பொருள், உறவுகள் அனைத்தையும் நாம் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. இன்று நாம் மேற்பார்வை செய்கிறோம். அது நாளை வேறொருடையவராகிறது. உயரம் தாண்டும் போட்டியில் போல நாம் ஒரு கட்டத்தில் கையிலிருக்கும் குச்சியை விட்டுத்தான் ஆகவேண்டும். விட்டால்தான் தாண்டி மறுபக்கம் செல்ல முடியும்.

 

ஜேம்ஸ் பட்டர்ஸன் ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறார்: ‘வாழ்க்கை என்பது பந்துகளை மாறி மாறிப் பிடிக்கும் ‘ஜக்லிங்’ விளையாட்டு போன்றது. நம் கையில் பணம், குடும்பம், உடல்நலம், நண்பர்கள், நன்னடத்தை என்ற 5 பந்துகள் உள்ளன. இவை அனைத்துமே காற்றில் நிற்கின்றன. ஒருநாள் நாம் உணர்கிறோம் இதில் பணம் என்பது இரப்பர் பந்து. நாம் கீழே போட்டாலும் மீண்டும் எழும்பி வந்து விடும். மற்ற நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவற்றில் ஒன்றை விட்டாலும் அவை கீறல் விடலாம், ஏன் நொறுங்கியே விடலாம்!’

 

இன்றைய நாளை (10 ஆகஸ்ட்) தலித் விடுதலை ஞாயிறு எனக் கொண்டாடி மகிழ்கிறோம். அரசியலமைப்புச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களும் பட்டியலினத்தவர்களும் ஒரே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நம் விருப்பத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பதிவு செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: