• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

துணையாளர். இன்றைய இறைமொழி. திங்கள், 11 மே 2026.

Monday, May 11, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 11 மே 2026
பாஸ்கா ஆறாம் வாரம்
திப 16:11-15. யோவா 15:26-16:4

 

துணையாளர்

 

திருத்தூதர்களின் பணி ஒரு பக்கம் தொழுகைக்கூடங்களிலும், பிறசமய ஆலய வளாகங்களிலும் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஆற்றங்கரைகளிலும், காற்றின் தூசியிலும் நடந்தேறுகிறது.

 

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.இவர்களில் ‘லீதியா’ என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா. ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

 

இன்று தொடங்கி வருகின்ற ஞாயிறு வரை வருகின்ற நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் இயேசுவின் விண்ணேற்றத்திற்கும், அதைத் தொடர்ந்து வருகின்ற தூய ஆவியார் பெருவிழாவுக்குமான முன்னோட்டமாக அமைகின்றன.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னுடைய திருத்தூதர்களிடம், ‘தந்தையிடமிருந்து நான் அனுப்பப் போகிற தூய ஆவியார் வருவார்’ என மொழிகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் திருத்தூதர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘நீரே எங்களோடு இருக்க எமக்கு ஏன் துணையாளர்?’ என்றும், ‘நீர் எங்களோடு இருக்க மாட்டீரா?’ என்றும் தங்கள் உள்ளங்களில் அவர்கள் கேள்விகள் எழுப்பியிருப்பார்கள்.

‘துணையாளர்’ என்னும் வார்த்தை கிரேக்கத்தில், ‘பாராக்ளேட்டோஸ்’ என்று இருக்கிறது. ‘பாராக்ளேஸிஸ்’ என்றால் ‘பரிந்து பேசுதல்,’ அல்லது ‘வழக்காடுதல்,’ அல்லது ‘துணைக்குப் பேசுதல்’ என்பது பொருள். இது ஒரு சட்டம்சார் வார்த்தை. அதாவது, வழக்கு மன்றத்தில் அல்லது நீதிமன்றத்தில் ஒருவருக்காக இன்னொருவர் பரிந்து பேசுவதை, வழக்காடுவதைக் குறிக்கிறது.

 

நான் எனக்கென வழக்காடுவதற்கு ஒருவரை ஏன் நியமிக்கிறேன்? அவர் சட்டம் தெரிந்தவராக இருக்கிறார். அவர் நன்றாக வாதம் செய்பவராக இருக்கிறார்.

 

எல்லாவற்றிற்கும் மேலாக என்னை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடாதவராக இருக்கிறார். ஏனெனில், எனக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கும் ஒருவர் திடீரென எனக்கு எதிராகப் பேசினால் என்ன ஆகும்?

 

என் எதிரியை வெற்றிகொள்ள என்னோடு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு நமக்கு பலம் தருகிறது.

 

இயேசு மொழிகின்ற அந்தத் துணையாளர் யார்?

 

ஒரு பக்கம், நம் உள்ளத்தில் எரிகின்ற நம்பிக்கை ஒளிதான் அந்தத் துணையாளர். ‘எனக்கு எதுவும் நடக்காது’ என்ற எண்ணம் அல்ல, மாறாக, ‘எனக்கு என்ன நடந்தாலும் நான் அதை எதிர்கொள்வேன்’ என்ற துணிச்சலான செயல்தான் அந்தத் துணையாளர்.

 

இன்னொரு பக்கம், அவர் நமக்கு அருகில் இருக்கிறார், நம் உள்ளத்தில் இருக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: