• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆறுதலின் புதல்வர். இன்றைய இறைமொழி. வியாழன், 11 ஜூன் 2026.

Thursday, June 11, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 11 ஜூன் 2026
புனித பர்னபா, திருத்தூதர் – விழா
திப 11:21-26, 13:1-3. மத் 10:7-13

 

ஆறுதலின் புதல்வர்

 

‘சைப்பிரசு நாட்டைச் சேர்ந்த லேவியர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் யோசே. திருத்தூதர்கள் அவரை, ‘ஆறுதலின் புதல்வர்’ அல்லது ‘ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்’ (பர்னபா) என்று அழைத்தார்கள்.’

 

திருத்தூதர் பணிகள் நூல் 4:36-இல் நாம் காணும் இந்த நபரை இன்று நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ‘உண்மையான கிறிஸ்தவ சீடர்’ (திப 14:14) என அறியப்படுகிறார். திருத்தூதர் பவுலின் நுகத்தடித் தோழராகப் பணியாற்றுகிறார். அவருடைய திருத்தூதுப் பயணங்களில் உடன் செல்கிறார். எருசலேம் திருச்சங்கத்தில் பங்கேற்கிறார். ‘எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர்’ என்று தெர்த்தூலியன் மொழிகிறார். மிலான் நகரத்தின் திருத்தூதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

 

இவர் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் எவை?

 

(அ) ஒருவரின் இறந்தகாலம் அல்ல, அவருடைய எதிர்காலமே முக்கியம்

 

திருத்தூதர் பவுலை நாம் பெரிய அளவில் கொண்டாடுகிறோம். அவருடைய பணியைப் பாராட்டுகிறோம். முதன்முதலாக அவர் பணியைத் தொடங்கியபோது மற்ற திருத்தூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ள அஞ்சினார்கள். ஏனெனில், பவுலுடைய இறந்த காலம் – திருஅவையைத் துன்புறுத்துபவராக இருந்த காலம் – அவர்களுக்கு நெருடலாக இருக்கிறது. ‘அவர் எப்படி இருந்தார்’ என்பது முக்கியமல்ல, ‘அவர் எப்படி மாறுவார்’ என்று அவருடைய எதிர்காலத்தை முன்மொழிந்து திருத்தூதர்களின் கூட்டத்தில் பவுலைச் சேர்த்தவர் பர்னபா. நாம் யாருடைய இறந்த காலத்தையும் வைத்து அவர்களை முத்திரை குத்தவோ, அவர்களைப் பற்றி இடறல்படவோ தேவையில்லை.

 

(ஆ) வாழ்வின் இரண்டாம் வாய்ப்புகளைக் கொண்டாடுவோம்

 

வாழ்க்கை நமக்கு ஒருமுறைதான் வாய்ப்பு கொடுக்கிறது என நினைக்கிறோம். இல்லை. வாழ்வின் வாய்ப்புகள் இரண்டாம் முறையும் வரவே செய்கின்றன. யோவான் மாற்குவை பவுல் திருத்தூதுப் பயணத்திற்கு ஏற்க மறுக்கிறார். ஏனெனில், மாற்கு முதன்முறை பாதியிலேயே அவர்களை விட்டுச் சென்றுவிட்டார். பர்னபா அதைப் பொருட்படுத்தவில்லை. யோவான் மாற்குவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகிறார். இந்த மாற்குவே இயேசுவைப் பற்றிய நற்செய்தியை முதலில் எழுதுகிறார்.

 

(இ) தாராள குணத்தின் முன்மாதிரி

 

தொடக்கத் திருஅவையில் நம்பிக்கையாளர்கள் அனைத்தையும் விற்றுவிட்டு திருத்தூதர்கள் காலடிகளில் வந்து போட்டார்கள் என வாசிக்கிறோம். ஆனால், எந்தத் திருத்தூதரும் தனக்குரியதை விற்றதாக – பேதுருவும் யோவானும் யாக்கோபும் தங்கள் படகுகளையும் வலைகளையும் விற்றார்களா? – விவிலியம் பதிவு செய்யவில்லை. பர்னபா அவருக்குரிய நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களின் காலடிகளில் வைக்கிறார். ஏழைக்கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காசுகளைப் போட்டதுபோல, தன்னிடம் இருந்த அனைத்தையும் இழக்கத் துணிகிறார் பர்னபா. இது வெறும் பண இழப்பு அல்ல, மாறாக, அந்தஸ்து, பணி என அனைத்தையும் இழக்கிறார். திருத்தூதுப் பணியே போதும் எனச் சொல்லி அனைத்தையும் இழக்கிறார்.

 

(ஈ) பணி என்பது நம் தலைப்புகளைப் பொருத்தது அல்ல

 

தொடக்கத் திருஅவையில் விளங்கிய ‘திருத்தூதர்,’ ‘திருத்தொண்டர்,’ ‘மூப்பர்,’ ‘கண்காணிப்பாளர் – ஆயர்’ என்னும் எந்தத் தலைப்பும் பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. திமொத்தேயு, தீத்து போன்ற இளவல்கள் ஆயர்களாக ஏற்படுத்தப்பட்ட போதும், திருத்தூதுப் பணியில் நிறைய அனுபவம் வாய்ந்த அவர் தனக்காக எந்தப் பதவியையும் பொறுப்பையும் கேட்டுப் பெறவில்லை. பவுலுடைய வளர்ச்சிக்கு தானே காரணம் என்று பெருமை பாராட்டவில்லை. அரயோபாகு மன்றத்தில் பவுல் உரையாற்றியபோது அவரோடு நிற்கிறார். பவுலுக்கு முதன்மையான இடம் தரப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் வருந்தவில்லை. தனக்கு வெளியே இருந்து வரும் தலைப்புகள் அல்ல, மாறாக, தனக்கு உள்ளே உள்ள கிறிஸ்துவே போதும் என்று தொடர்ந்து பணி செய்தார் பர்னபா.

 

தூய ஆவியாருக்கும் இவருடைய பெயர் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான், ‘பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன்’ என்கிறார் (முதல் வாசகம்).

 

‘கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள். கொடையாக வழங்குங்கள்’ என்று நற்செய்தி வாசகத்தில் தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

 

நம் குடும்பத்திலும் பணித்தளத்திலும் ஒருவர் மற்றவருக்கு ஊக்கம் தர நாம் முயற்சி செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: