இன்றைய இறைமொழி
வெள்ளி, 11 ஜூலை ’25
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – வெள்ளி
புனித பெனடிக்ட், ஆதினத் தலைவர் – நினைவு
தொடக்கநூல் 46:1-7, 28-30. மத்தேயு 10:16-23
இறுதிவரை மனவுறுதி
யோசேப்பு யார் என்பதை அவருடைய சகோதரர்கள் மட்டுமல்லாமல், பாரவோனும் அவருடைய அரசவையினரும்கூட அறிந்துகொள்கிறார்கள். யோசேப்பின் சகோதரர்களும் தந்தையும் தங்குமாறு கோசேன் என்னும் பகுதியை அவர்களுக்கென ஒதுக்கித்தருகிறார் பாரவோன். கோசேனுக்கு வருகிற யாக்கோபுக்குக் கடவுள் காட்சியளிக்கிறார். ‘நீ அஞ்சாதே!’ என ஆறுதல் தருகிறார். மேலும், ‘யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்’ என்னும் சொற்கள் வழியாக அவருடைய இறப்பையும் முன்னறிவிக்கிறார். தன் தந்தையை எதிர்கொள்ளச் செல்கிறார் யோசேப்பு. தன் தந்தையின் தோளில் சாய்ந்து வெகுநேரம் அழுகிறார். ‘உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்’ என அகமகிழ்கிறார் யாக்கோபு. யோசேப்பு இளவலாக இருந்தபோது கண்ட கனவுகள் இப்போது நிறைவேறிவிட்டதை நினைத்து வியந்திருப்பார்.
‘இப்போது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!’
மேற்காணும் வார்த்தைகளில் யாக்கோபின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவர் அனுபவித்த துன்பமும் தெரிகிறது.
தன் மகனைக் காண்போம் என்ற எண்ணம் அல்ல, மாறாக, தன் இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்ற மனவுறுதியே அவரைத் தன் மகனின் மடியில் சேர்த்தது.
தம் சீடர்களைப் பணிக்கு அனுப்புகிற இயேசு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை முன்னுரைக்கிறார். ஒன்று, அவர்கள் ஓநாய்களிடையே ஆடுகள் போலச் செல்கிறார்கள். அதாவது, வலுவானவர்கள்முன் வலுவற்றவர்களாகச் செல்கிறார்கள். இரண்டு, அவர்களுடைய பணிகள் எதிர்க்கப்படுவதோடல்லாமல், அவர்களும் இன்னலுக்கு ஆளாவார்கள். மூன்று, அவர்கள் தங்களுடைய இருப்பிடத்திலிருந்து விரட்டப்படுவார்கள். ஆனாலும், துன்பத்தின் நடுவிலும் இறைவனின் அருள்கரம் அவர்களை வழிநடத்தும் என்பதால் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை.
யாக்கோபுவின் அச்சம் கடவுளின் சொற்களாலும், யோசேப்பின் உடனிருப்பாலும் களையப்படுகிறது. கடவுளின் உடனிருப்பு சீடர்களின் அச்சம் களைகிறது. யாக்கோபின் வேர்கள் அவருடைய மண்ணிலிருந்து அகற்றப்படுகின்றன. பணிக்குச் செல்லும் சீடர்களின் வேர்கள் அவர்களுடைய இருப்பிடத்திலிருந்து அகற்றப்படுகின்றன. நம் வேர்கள் அகற்றப்படுவது நமக்கு வேதனை அளிக்கிறது. காய்ந்துபோய்விடுவோமோ என்ற அச்சம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. கடவுளின் உடனிருப்பு நம் அச்சம் போக்குகிறது. அவருடைய தோள்களில் சாய்ந்துகொள்வது நலம்.
‘ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே குடியிரு.
நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்.
உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.’
இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 37) வரிகள் இன்றைய வாசகங்களின் பொருளை மிக அழகாக விளக்குகின்றது. இயேசுவால் பணிக்கு அனுப்பப்படும் திருத்தூதர்கள் இயேசுவின் காலத்திலும், இயேசுவின் காலத்திற்குப் பின்னும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்ப்புகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் எப்படி பதிலிறுப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இன்றைய நற்செய்தியின் கருத்துரு இயேசுவின் காலத்திற்குப் பின்னர் மத்தேயு குழுமத்தில் எழுந்த பிரச்சினைகளைப் பற்றியதாகவே இருக்கிறது.
இயேசுவின் காலத்திற்குப் பின்னரே அவருடைய திருத்தூதர்கள் மிக அதிகமான துன்பங்களை எதிர்கொண்டனர். புதிய நம்பிக்கையாளர்களும் துன்பங்களுக்கு ஆளாகினர். இவற்றைப் பற்றி இயேசுவே முன்னுரைத்ததாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.
‘ஓநாய்களிடையே ஆடுகள்’ என்பதுதான் திருத்தூதர்களின் உருவகம். அதாவது, முற்றிலுமான கையறு நிலையில் சீடர்கள் தங்கள் பணியை எதிர்கொள்ள வேண்டும். ஓநாய்களிடமிருந்து அவர்கள் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. சீடர்கள் முன்மதி மற்றும் கபடற்ற தன்மை கொண்டிருத்தல் வேண்டும்.
ஆக, பிரச்சினைகள் இருக்காது என்ற போலியான வாக்குறுதியை இயேசு கொடுக்கவில்லை. மாறாக, பிரச்சினைகள் இருக்கும் என்பது எதார்த்தம் என்கிறார். தூய ஆவியாரின் உடனிருப்பு இருக்கும் என்ற ஆறுதலை அவர்களுக்கு வழங்குகிறார்.
‘இறுதிவரை மனவுறுதி’ என்பதுதான் இயேசுவின் இறுதிப்பாடமாக இருக்கிறது.
நம் மனவுறுதியைப் பாதிக்கக்கூடிய காரணிகள் அல்லது எதிர்மறை உணர்வுகள் மூன்று: ஒன்று, தாழ்வு மனப்பான்மை, இரண்டு, பயம், மூன்று, குற்றவுணர்வு.
திருத்தூதர்கள் அல்லது மத்தேயுவின் குழும உறுப்பினர்கள் மேற்காணும் எதிர்மறை உணர்வுகளால் மனவுறுதியை இழந்திருப்பார்கள். அந்த நேரத்தில்தான் மத்தேயு அவர்களுக்கு ஊக்கம் தருகின்றார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: