• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அன்பை உடுத்தி இரக்கத்தை வாழ்தல். இன்றைய இறைமொழி. வியாழன், 11 செப்டம்பர் ’25.

Thursday, September 11, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சீடத்துவம் பரிவு அன்பு இரக்கம் பரிவுள்ளம் உண்மை சீடத்துவம் கனிவு மனத்தாழ்மை மன்னிப்பு தாராள உள்ளம் நல்லெண்ணம் பொறுமை கிறிஸ்தவ அடையாளம் கிறிஸ்துவை அணிதல் ஒப்புரவு மனிதநிலை அன்பு தயாள குணம் கிறிஸ்தவ மதிப்பீடுகள்

இன்றைய இறைமொழி
வியாழன், 11 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 23-ஆம் வாரம், வியாழன்
கொலோசையர் 3:12-17. லூக்கா 6:27-38

 

அன்பை உடுத்தி இரக்கத்தை வாழ்தல்

 

(அ) கிறிஸ்துவின் ஆடைகளை உடுத்துதல்

 

‘பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால்’ அணிசெய்யுமாறு இறைமக்களை அழைக்கிற பவுல் (முதல் வாசகம்), அனைத்துக்கும் மேலாக அன்பைக் கொண்டிருக்குமாறு அறிவுறுத்துகிறார். அனைத்து விழுமியங்களின் வடிவம் அன்பே என மொழிகிறது திருஅவையின் மறைக்கல்வி எண் 1822. கிறிஸ்தவ அடையாளம் என்பது வெளிப்படையான ஆடைகளில் அல்ல, மாறாக, உள்ளார்ந்த மதிப்பீட்டில் அடங்கியுள்ளது. கிறிஸ்துவை அணிதல் என்றால் நம் சொற்கள் மற்றும் செயல்கள் வழியாக அவருடைய அன்பை மற்றவர்களு;கு வெளிப்படுத்துவதாகும்.

 

(ஆ) வரையறைகளைத் தாண்டிய அன்பு

 

‘உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்’ என மொழிகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). தந்தையின் இரக்கத்தைப் பிரதிபலிக்கும் மேலான அன்புக்கு நம்மை அழைக்கிறார் இயேசு. திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைவரும் உடன்பிறந்தோர்’ என்னும் சுற்றுமடலில் (எண். 66), மன்னிப்பும் ஒப்புரவும் அன்பின் வலுவின்மை அல்ல, மாறாக, வல்லமை என்கிறார். இன்றைய உலகம் பழிதீர்ப்பதையே விரும்புகிறது. இயேசுவோ இரக்கம் நோக்கி நம்மை அழைக்கிறார். மனிதநிலை அன்பு முடியும் இடத்தில் சீடத்துவம் தொடங்குகிறது. இறைவன் காட்டுகிற மாதிரியை அது பின்பற்றுகிறது.

 

(இ) நாம் அளக்கும் அளவை

 

நாம் அளக்கும் அளவை கொண்டே நமக்கும் அளக்கப்படும் என்கிறது நற்செய்தி வாசகம். தாராள உள்ளமும் தயாள குணமும் கொண்டிருத்தல் நலம். அன்பு, இரக்கம், மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை நாம் அளவிட முடியாது. அவை தாமாகவே வழிந்தோட வேண்டும். அளவைகளைத் தாண்டிய அன்பைப் பெறுவதற்கு அசாதாரண துணிச்சல் வேண்டும்.

 

நிறைவாக,

 

கிறிஸ்தவ மதிப்பீடுகளால் நம்மை அணிசெய்துகொள்ள அழைக்கிறார் பவுல். அன்பே அனைவரும் உடுத்தும் ஆடையாக இருக்க வேண்டும். அளவைகளை உடைத்து அள்ளிக் கொடுப்பதே கிறிஸ்து விரும்பும் சீடத்துவம். இப்படிச் செய்கிற ஒருவர் கடவுளின் இதயத்தைப் பிரதிபலிக்கிறார்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: