• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

புதிய உறவுநிலை. இன்றைய இறைமொழி. சனி, 11 அக்டோபர் ’25.

Saturday, October 11, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இறைவனின் திட்டம் இயேசுவின் தாய் இறைவாக்கினர் யோவேல் இயேசுவின் பணி வாழ்வு மக்களின் எதிர்ப்பு மக்களின் ஏற்பு இயேசுவும்-அன்னை மரியாளும் ஆவிசார் உறவு ஆன்மிக உறவு இறைவார்த்தை கடைப்பிடிப்போர் கண் கடந்த உறவுநிலை பேறுபெற்றவர்-அன்னை மரியாள் பேறுபெற்ற நிலை மரியாவின் தாய்மை இறைத்தாய் பாபிலோன் பயிர் அறுவடை உருவகம் சீயோன்

இன்றைய இறைமொழி
சனி, 11 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் வாரம்
யோவேல் 3:12-21. லூக்கா 11:27-28

 

புதிய உறவுநிலை

 

‘கண்களுக்குத் தெரிகிற உறவுநிலையை விட கண்களைக் கடந்த உறவுநிலை மேலானது’

 

நம் இருத்தல் மற்றும் இயக்கம் சிறப்பாக இருக்கக் காண்கிற உலகம், அது கண்டு நம்மைப் பெற்றவர்களைப் புகழ்வது இயல்பு.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்தேறுகிறது. இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருந்தபோது, ‘உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்’ என வாழ்த்துகிறார். முந்தைய மொழிபெயர்ப்பில், ‘உம்மைத் தாங்கிய வயிறும் நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவை’ என்று உள்ளது.

 

இயேசுவின் பணி வாழ்வு மக்களின் எதிர்ப்பு, ஏற்பு என்னும் இரு தளங்களில் நகர்ந்து சென்றது. ‘இவன் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்’ என்று அவருடைய எதிர்ப்பாளர்கள் மொழிய, இங்கே ஒரு பெண் அவருடைய பிறப்புக்காக அவரைப் புகழ்கிறார்.

 

அந்தப் பெண் இச்சொற்களை மொழிந்தபோது இயேசுவின் தாய் மரியா அவரோடு உடனிருந்திருக்கலாம். அல்லது மரியா தற்செயலாக அந்த இடத்திற்கு வந்திருக்கலாம். அல்லது மரியாவின் வருகையை இயேசுவுக்கு உணர்த்துவதற்காக அப்பெண் சொல்லியிருக்கலாம். அல்லது மரியா இல்லாதபோது எதார்த்தமாக அப்பெண் சொல்லியிருக்கலாம்.

 

இந்த வாழ்த்தின் பொருள் எளியதுதான்: ‘நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். நீ நல்ல கனி. அப்படி என்றால் உன் அம்மாவும் அப்பாவும் நல்ல மரங்கள். மரங்கள் இனிதே வாழ்க!’

 

அப்பெண் இயேசுவுக்கும் மரியாவுக்கும் இருந்த உடல்சார் உறவு (இரத்த உறவு) பற்றிப் பேசுகிறார். ஆனால், இயேசுவா, அப்பெண்ணின் சொற்களை அடிப்படையாக வைத்து, தமக்கும் மரியாவுக்கும் இருக்கிற ஆவிசார் உறவு (ஆன்மிக உறவு) பற்றிப் பேசுகிறார்: ‘இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்’

 

கண்களுக்குத் தெரிகிற உறவுநிலையிலிருந்து கண்களைக் கடந்த உறவுநிலைக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார் இயேசு.

 

தமக்கும் மரியாவுக்கும் இருக்கிற ஆவிசார் உறவுபற்றிப் பேசுகிறார்: ‘இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.’

 

ஆக, இயேசு மட்டுமல்ல, மரியாவும் பேறுபெற்றவரே என்னும் கருத்து வாசகருக்கு வழங்கப்படுகிறது. இறைவனின் திட்டத்திற்கு ‘ஆம்’ எனச் சொன்னதால் மரியா பேறுபெற்றவர் ஆகிறார்.

 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) நம் கண்முன் நடக்கும் நன்மையைக் பார்க்கும்போது அந்த நன்மையைச் செய்தவரை மனுமுவந்து பாராட்டுதல் நலம். பல நேரங்களில் நாம் அவருடைய எளிய குடும்ப பின்புலத்தைக் கண்டு இடறல்படுகிறோம். பாராட்டுதல் அதிகரிக்கும்போது, இடறல்படுதல் குறையும்.

 

(ஆ) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கும் எவரும் பேறுபெற்ற நிலையை அடைய முடியும். நமக்கும் இயேசுவுக்கும் உடல்சார் உறவு சாத்தியமில்லை என்றாலும் ஆவிசார் உறவு சாத்தியம். ஆவிசார் உறவுக்கான வழி இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பது.

 

அந்தப் பெண் இச்சொற்களைச் சொன்னபோது இயேசு கண்டிப்பாகப் புன்முறுவல் பூத்திருப்பார். ‘அப்படியா! அதெல்லாம் ஒன்னுமில்லங்க! என்று வெட்கப்பட்டிருப்பார்.

 

இயேசுவின் கவனத்தை ஈர்த்து, அவரின் முகத்தில் புன்முறுவல் ஏற்படக் காரணமாயிருந்த அந்தப் பெயரில்லாப் பெண்ணும் பேறுபெற்றவரே!

 

கடவுளின் கவனத்தை ஈர்க்கவும் அவரைச் சிரிக்க வைக்கவும் ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

 

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் பாபிலோனுக்கு வழங்கும் தீர்ப்பு பற்றி யோவேல் முன்னுரைக்கிறார். பயிர்களை அறுவடை செய்தல் என்னும் உருவகம் இங்கே பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் சீயோன் நடுவே குடியிருப்பதாக வாக்களிக்கிறார்.

 

சீயோனின் நடுவே கடவுள் குடியிருக்கிறார்.

 

அந்தக் கடவுளைக் கருத்தாங்கிய தாயும், அவரின் சொற்களைத் தாங்குகிற நாமும் பேறுபெற்றவர்களே.

 

நிற்க.

 

மரியாவின் தாய்மை பற்றிப் பேசுகிற ‘கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி’, ‘உம் சொற்படியே எனக்கு ஆகட்டும்’ என்னும் சொற்கள் வழியாகவே, இறைத்தாய் என்னும் நிலையை அடைந்தார் எனச் சொல்கிறது (காண். எண் 963).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: