
இன்றைய இறைமொழி
வியாழன், 12 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், வியாழன்
1 அர 11:4-13. மாற் 7:24-30
நாம் ஆயிரம் யோசனைகள் அல்லது எண்ணங்கள் கொண்டிருக்கலாம். நம் செயல்தான் நாம் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. பல நேரங்களில் நம் எண்ணங்களோடு நாம் நிறுத்திக்கொள்கிறோம். நாம் விரும்புவதைச் செய்யவும் பெறவும் நமக்கு வெளியே தடைகள் இல்லை. நமக்கு நாம்தான் தடைகளாக நிற்கிறோம்.
நம் வாழ்வுக்கான பொறுப்பு நாம் எனவும், தொடர்ந்து செயலாற்றுதலே வெற்றி தரும் என்று நமக்குக் கற்பிக்கிறார் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பெனிசிய நகரத்துப் பெண்.
இவர் ஒரு பெண். புறவினத்துப் பெண். பேய் பிடித்த இளவலின் தாய். தான் விரும்பியது தன் மகளுக்கு நலம். அதைப் பெற்றுக்கொள்ள இயேசுவிடம் வருகிறார்.
வல்ல செயல்களை வழக்கமாக விரும்பிச் செய்கிற இயேசு இந்த நிகழ்வில் கொஞ்சம் பொறுமை காக்கிறார். ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவதில்லையே!’ என்கிறார் இயேசு. பெண் உடனடியாகக் கோபப்படவில்லை. இயேசுவைப் போல அவரும் பொறுமையோடு நிகழ்வைக் கையாளுகிறார். பிள்ளைகளுக்குரிய உணவு நாய்க்குட்டிகளுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், நாய்க்குட்டிகள் எப்படியோ பசியாறிவிடுகின்றன என்கிறார். மேசையின் மேலே இயேசு பார்த்தபோது, மேசைக்குக் கீழே பெண் பார்க்கிறார்.
தனக்கு நிகழ வேண்டிய செயல் இயேசுவால் மட்டுமே நிகழும் என்று உறுதியாக நம்பினார் இயேசு. பசியால் துடிக்கும் நாய்க்குட்டி எப்படியும் பசியாற விரும்புகிறதே அன்றி, திரும்பிப் போய்விட விரும்புவதில்லை. இரக்கப்பட்டு நாய்க்குட்டிகளுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், எதார்த்தமாக விழுகிற துகள்களால் நாய்க்குட்டிகள் பசியாறும் என்பது பெண்ணின் எண்ணமாக இருக்கிறது.
இவரிடம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
‘எதையும் தனிப்பட்ட அளவில் எடுத்துக்கொண்டு யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது’ என்பதுதான். அவர் கோபம் கொண்டு இயேசுவின் திருமுன்னிலையிலிருந்து நகர்ந்திருந்தால் அவருடைய மகள் நலம் பெற்றிருக்க இயலாது. நிகழ்வு தன் கட்டுக்கு வெளியே சென்றாலும் பொறுமையாகக் கையாண்டு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வருகிறார் பெனிசிய நகரத்துப் பெண்.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசருடைய இதயம் ஆண்டவராகிய கடவுளை விட்டு விலகிச் சென்றதை நாம் பார்க்கிறோம். உயரத்திற்குச் செல்லச் செல்ல விழுகிற ஆபத்தும் விழுந்தபின்னர் சேதமும் அதிகம் என்பதற்கு சாலமோன் சிறந்த எடுத்துக்காட்டு. மிக நன்றாகத் தொடங்கினார் சாலமோன். ஆனால், மிக மோசமாக முடிக்கிறார். அவருடைய ஞானம் பலரை பல நாடுகளிலிருந்து வரவைத்தது. பல இளவரசியர்கள் பல நாடுகளிலிருந்து வந்தார்கள். வந்தவர்கள் தங்கள் தெய்வங்களையும் கூட அழைத்து வந்தார்கள். விளைவு, சாலமோன் தன் கடவுளோடு சமரசம் செய்துகொள்கிறார். ‘ஆண்டவர் சாலமோன்மீது சினமுற்றோர். ஏனெனில், தமக்கு இருமுறை காட்சியளித்திருந்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து அவர் இதயம் விலகிச் சென்றது’ எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.
தான் இயேசுவின்மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் சமரசம் செய்துகொள்ளாத பெனிசிய நகரப் பெண் தான் வேண்டுவதைப் பெற்றுக்கொள்கிறார். தன் நம்பிக்கையில் சமரசம் செய்துகொண்ட சாலமோன் தன் அரசை இழக்கிறார். தாவீது கட்டியெழுப்பிய ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அவருக்குப் பின்னர் அரசு வடக்கு-தெற்கு என இரண்டாக உடைகிறது.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: