
இன்றைய இறைமொழி
வெள்ளி, 12 ஜூன் 2026
இயேசுவின் திருஇருதயம், பெருவிழா
இச 7:6-11. 1 யோவா 4:7-16. மத் 11:25-30
24 அக்டோபர் 2024 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் ‘திலெக்ஸித் நோஸ்’ (‘அவர் நம்மை அன்பு செய்தார்’) என்னும் தன் நான்காவது சுற்றுமடலை வெளியிட்டார். இச்சுற்றுமடலின் நோக்கம் என்ன? (அ) இயேசு கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துகொள்தல். (ஆ) மேலோட்டமான இந்த உலகத்தை விடுத்து நம் வாழ்வின் மையத்துக்குக் கடந்துசெல்தல். (இ) இயேசுவின் தூய்மைமிகு இதய பக்திமுயற்சி நமக்கு விடுக்கும் சமூக மற்றும் மறைத்தூதுக் கடமைகளைப் புரிந்துகொள்தல்.
1. தொடக்கத் திருஅவை இயேசுவின் அன்பு மற்றும் இரக்கம் குறித்து தியானித்தது. தொடக்கத் திருஅவைத் தந்தையர்களில் புனித அகுஸ்தீன் மற்றும் புனித கிறிஸோஸ்தம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் எழுதியுள்ளார்கள்.
2. மத்தியக் கால மறைஞானியர் (‘மிஸ்டிக்’) புனித ஜெர்ட்ருட் மற்றும் புனித மெக்டில்ட் போன்றோர் இரக்கம்நிறை இயேசு பற்றிய அனுபவங்களையும் காட்சிகளையும் பெற்றனர்.
3. இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇருதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.
4. திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.
1. படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல்.
2. இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல்.
3. பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.
4. நற்கருணை ஆராதனை: முதல் வெள்ளிக் கிழமைகளில் தனிப்பட்ட அல்லது குழும நற்கருணை ஆராதனை செய்தல். திருப்பலி கண்டு நற்கருணை உட்கொள்தல்.
5. இல்லம் மற்றும் பணியிடங்களில் படம் அல்லது திருவுருவம் நிறுவுதல்: அவருடைய கண்கள் நம்மை நோக்கியிருக்குமாறு, அவருடைய கண்பார்வையில் நம் வாழ்க்கையை வாழ்தல்.
6. திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆற்றிய அரும்பெரும் செயல்களை எடுத்துரைக்கிறார் மோசே. மிகக் குறைவான மக்களாக இருந்த அவர்களைத் தேடுகிறார், தம் மக்களாக ஏற்றுக்கொள்கிறார். அவர் தம் மக்கள்மேல் கொண்ட அன்பினால் அவர்களைப் பாதுகாத்து வழிநடத்துகிறார். கடவுளின் அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல, மாறாக, நம் உள்ளத்தில் உணரும் ஒரு சிந்தனை அல்ல. மாறாக, நமக்கு வெளியே காணக்கூடிய அளவில் நிகழ்ந்தேறும் செயல். நாம் வாழ்வில் ஏற்படும் மாற்றம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என மொழிகிற யோவான், தொடர்ந்து, ‘அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார்’ என்கிறார். நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்வதற்குத் தூண்டுதலாக இருப்பது கடவுள் நம்மேல் காட்டுகிற அன்பு.
நம் சுமைகளை அகற்றுவதாக வாக்களிக்கிற இயேசு அவருடைய சுமைகளை நம்மேல் ஏற்றுமாறு நம்மை அழைக்கிறார் (நற்செய்தி வாசகம்). ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்’ என்கிறார். நாம் சொற்களைப் பயன்படுத்திப் பேசும்போது நம் மொழி வளர்வதுபோல, அன்பு என்னும் செயலும் நாம் தொடர்ந்து செய்யும்போது நமக்கு எளிதாகிறது.
இறுதியாக,
இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:
(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.
(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார்.
(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், ‘கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்’ என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.
இப்பெருவிழா நாளில் இயேசுவின் திருஇதயத்தை நம் இல்லங்களின் தலைவராக அணி செய்வோம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: