• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கடவுள் கனிவுடன் வருவார்! இன்றைய இறைமொழி. சனி, 12 ஜூலை ’25.

Saturday, July 12, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

திருத்தூதுப் பணி யாக்கோபு-யோசேப்பு குரு-சீடர் உறவு எதிர்நோக்கு அன்பு கடவுள் வருவார்

இன்றைய இறைமொழி
சனி, 12 ஜூலை ’25
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – சனி
தொடக்கநூல் 49:29-32, 50:15-26. மத்தேயு 10:24-33

 

கடவுள் கனிவுடன் வருவார்!

 

தொடக்கநூல் எதிர்நோக்குநிறை சொற்களுடன் முடிவடைகிறது. ‘கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்’ என்று தம் சகோதரர்களிடம் சொல்லிவிட்டு உயிர்விடுகிறார் யோசேப்பு. இன்றைய முதல் வாசகத்தில் யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் இறப்பு நிகழ்வுகளை வாசிக்கிறோம். இருவருமே தாங்கள் இறக்குமுன் தம் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் எதிர்நோக்கின் செய்தியை வழங்கிவிட்டுச் செல்கிறார்கள். மூன்று விடயங்கள் நமக்கு இங்கே தெளிவாகின்றன: (அ) இறப்பு என்பது எல்லாருக்கும் உரியது – இஸ்ரயேலின் பிதாமகனாகிய யாக்கோபும் எகிப்தின் ஆளுநரான யோசேப்பும் தங்கள் காலம் வந்தவுடன் இறக்கிறார்கள். (ஆ) நாம் இறந்தாலும் நம் இருத்தல் நம் பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் வழியாகத் தொடர்கிறது. (இ) வாழ்வின் சூழல் எப்படி இருந்தாலும் அதை நமக்கு ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நமக்கு உள்ளது. யோசேப்பு வேற்று நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் அரசன்போல வாழ்ந்தார். அவருடைய சகோதரர்களோ அதே நாட்டில் அடிமைகள் போல உணர்கிறார்கள்.

 

திருத்தூதுப் பணியின்போது தம் சீடர்கள் அனுபவிக்கிற துன்பங்களைத் தொடர்ந்து முன்னுரைக்கிறார் இயேசு. இயேசுவுக்கு நிகழ்ந்ததே அவருடைய திருத்தூதர்களுக்கும் நேரிடும். ஏனெனில், குருவைவிடச் சீடர் மேன்மையானவர் அல்லர். துன்புறுத்துவோர் யாவரும் உடலைத் துன்புறுத்தும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களே தவிர, ஆன்மாவை அல்லது நம் உளப்பாங்கைத் துன்புறுத்த அவர்களால் இயலாது. அவர்களுடைய வலிமையும் வரையறைக்கு உட்பட்டதே. மேலும், கடவுள்தாமே இப்பொழுதுகளில் நம்மோடு இருக்கிறார். ஆகையால், எதிர்நோக்கை இழந்துவிடாமல் காத்துக்கொள்தல் நலம்.

 

கல்லறையுடன் முடிவது அல்ல நம் வாழ்க்கை. எதிர்நோக்கு அணைந்துவிட்டால் கல்லறைக்கு முன்னரே நம் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. எதிர்நோக்கு என்னும் திரியை அணையாமல் காப்பது அன்பு என்னும் எண்ணெயே. யோசேப்பு தான் எதிர்நோக்கைப் பெற்றிருந்ததோடு, அதைத் தன் சகோதரர்களுக்கும் அளிக்கிறார். எதிர்நோக்கின் முதன்மையான எதிரி பயம். பயத்தைக் களைய அழைப்பு விடுக்கிறார் இயேசு.அதுவே போதும்

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: