இன்றைய இறைமொழி
செவ்வாய், 12 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 19-ஆம் வாரம், செவ்வாய்
இணைச்சட்ட நூல் 31:1-8. மத்தேயு 18:1-5, 10-14
இயேசுவின் சமகாலத்தில் விண்ணரசு விரைவாக வந்துவிடும் என்னும் எண்ணம் மேலோங்கி இருந்தது. அந்த விண்ணரசில் யார் முதன்மை வகிப்பர்? என்ற கேள்வியும் அத்தோடு எழுந்தது. ‘சிறுபிள்ளை போல’ ஆவதே விண்ணரசில் முதன்மை வகிப்பதற்கான வழி என்று சுட்டிக்காட்டுகிற இயேசு, தொடர்ந்து தாமும் தமது பணியும் சிறியோருக்கானது என முன்மொழிகிறார்.
(அ) சிறுபிள்ளை போல நுழைபவர் விண்ணரசில் முதன்மையாகக் கருதப்படுவார்.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு, குழந்தைகள் எந்தவொரு ‘அடையாளமும்’ இல்லாமல் குழந்தைகளாக மட்டும் இருக்கிறார்கள். பெரியவர்களைப் பார்க்கும்போது அவர்களுடைய படிப்பு, பதவி, பணி, பணம், அந்தஸ்து ஆகியவற்றை நாம் பார்க்கிறோம். அடையாளம் இழப்பவர்கள் அல்லது துறப்பவர்கள் மட்டுமே விண்ணரசில் நுழைய முடியும். அடையாளங்களை நாம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் பற்றிக்கொள்ளாமல் வாழக் கற்றல் நலம்.
(ஆ) சிறியோரில் ஒருவரையும் இழிவாகக் கருத வேண்டாம்.
நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தில் சில நேரங்களில் பாகுபாடு காட்டுகிறோம். சிறியோர்-பெரியோர் என்று மனிதர்களைப் பிரித்து, பெரியவர்களை உயர்த்தியும் சிறியோரைத் தாழ்த்தியும் காண்கிறோம். உயர்வு-தாழ்வு பாராட்டுதல் சால்பன்று.
(இ) தொலைந்துபோன சிறியோரைத் தேடிச் செல்கிற ஆண்டவராக இருக்கிறார் இயேசு.
நூறு ஆடுகளில் ஓர் ஆடு காணாமற்போகிறது. எண்ணிக்கையைக் காணும்போது ஒன்றைவிட 99 பெரியது. ஆனால், பெரியதை விடுத்து சிறியதைச் தேடிச் செல்கிறார் ஆயன். தொலைந்துபோன அந்த ஆட்டுக்காக துன்பம் ஏற்கிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், தலைமைத்துவம் மோசேயின் கைகளிலிருந்து யோசுவாவின் கைகளுக்கு மாறுகிறது. இளவலாக இருந்த யோசுவாவை தலைமைத்துவத்துக்குத் தயாரிக்கிறார் மோசே. ‘வலிமை பெறு! துணிவுகொள்! ஆண்டவரே உனக்கு முன் செல்வார், அஞ்சாதே!’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார். அவருடைய அச்சம் அகற்றி துணிவு தருகிறார் மோசே. யோசுவா என்ற சிறியவரைப் பெரிய தலைவர் ஆக்குகிறார் மோசே.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: