• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

உங்கள் உறவு தொடரும்! இன்றைய இறைமொழி. புதன், 12 ஆகஸ்ட் 2026.

Wednesday, August 12, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 12 ஆகஸ்ட் 2026
பொதுக்காலம் 19-ஆம் வாரம்
எசே 9:1-7. 10:18-22. மத் 18:15-20

 

உங்கள் உறவு தொடரும்!

 

இன்றைய நற்செய்தி வாசகம், மத்தேயு நற்செய்தியாளரின் குழுமப் போதனையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனித்தனியே கிறிஸ்தவ நம்பிக்கை பெற்றிருந்தாலும், குழுமம் என்னும் அடையாளத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். புரிதலின்மை, தவறாகப் புரிந்துகொள்ளப்படுதல், எரிச்சல், ஏமாற்றம், கோபம், பகைமை, பொறாமை போன்ற உணர்வுகள் மேலோங்கியபோது குழும வாழ்வு தடைபட்டது.

 

‘நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தார்கள்’ என்று திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம். ஆனாலும், அங்கே சண்டை சச்சரவுகளும் போட்டி மனப்பான்மையும் இருந்தது. கடவுள் நம்பிக்கையில் கட்டப்பட்ட குழுமம் என்றாலும் மனிதர்கள் தங்களுக்குரிய இயல்பை வெளிப்படுத்தியே வாழ்கிறார்கள்.

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசேக்கியேல் ஒரு காட்சி காண்கிறார். ‘ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக் கருவி இருந்தது’ என்று காண்கிறார். நம் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கொலைக்கருவி இருக்கிறது. நம் உள்ளத்தில் உள்ள எதிர்மறை எண்ணமாக இருக்கலாம், அடுத்தவருக்குத் தீங்கு நினைக்கும் மனப்பாங்காக இருக்கலாம், பொய்யுரைத்தல், பகைமை, பொறாமை, கோபம், புறங்கூறுதல் போன்றவையாக இருக்கலாம். இவை அனைத்துமே நாம் தாங்கி நிற்கும் கொலைக் கருவிகள். இவற்றால் உறவுகள் சீர்குலைகின்றன.

 

நம்பிக்கையாளருக்கு எதிராகப் பாவம் செய்கிற ஒருவரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கற்பிக்கிறது நற்செய்தி வாசகம். முதலில் தனித்து, அடுத்து இருவர் அல்லது மூவர் முன்னிலையில், இறுதியில் திருச்சபை முன்னிலையில். திருச்சபையைக் குறிக்கும் ‘எக்ளேசியா’ என்னும் சொல் இங்கேதான் முதன்முதலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

உணர்வு ஒத்து வாழ்கின்ற உறவுகள் நடுவே கடவுளின் பிரசன்னம் இருப்பதாக நற்செய்தி வாசகம் நிறைவு பெறுகிறது.

 

நம் குடும்பம், பங்கு, மறைமாவட்டம் போன்ற தளங்களில் எப்படியாவது நாம் ஒருவர் மற்றவரை வெற்றிகொண்டு உறவைத் தக்க வைக்க முயற்சி செய்வோம். உறவைக் கட்டி எழுப்புவது தென்னை மரம் வளர்வது போல மெதுவாக வளர்கிறது, உறவு உடைவதோ தேங்காய் விழுவது போல சட்டென உடைந்துவிடுகிறது!

 

‘உங்கள் உறவு தொடரும்!’ என்பது நாம் ஒருவர் மற்றவருக்கு வழங்கும் ஆசியாக இருக்கட்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு யெஸ்னி ப்ரேய்ஸ் முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: