இன்றைய இறைமொழி
வெள்ளி, 12 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 23-ஆம் வாரம், வெள்ளி
மரியாவின் திருப்பெயர் – நினைவு
1 திமொத்தேயு 1:1-2, 12-14. லூக்கா 6:39-42
(அ) நம் கடந்த காலத்தை மாற்றும் அருள்
தன் பழைய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கும் பவுல், தன் வலுவின்மையில் பொங்கி வழிந்த கடவுளின் இரக்கத்தைப் போற்றுகிறார்: ‘முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன் … இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் ஏற்படும் நம்பிக்கையோடும் அன்போடும் நம் ஆண்டவரின் அருள் அளவின்றிப் பெருகியது.’ மனமாற்றம் என்பது கடவுளை நோக்கித் தொடர்ந்து பயணம் செய்வது எனக் கற்பிக்கிறது திருஅவையின் மறைக்கல்வி (எண். 1425). கடவுளால் மன்னிக்க இயலாத பாவம் எதுவும் இல்லை. நம் பழைய காலமும் காயமும் இருளும் கடவுளின் அருளுக்கான வழிகளாக அமையலாம்.
‘பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற மற்றவருக்கு வழிகாட்ட இயலாது!’ எனக் கற்பிக்கிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). மற்றவர்களைத் தீர்ப்பிடும் முன் நம்மைத் தன்னாய்வு செய்து பார்க்க வேண்டும். நம்பிக்கையில் தலைமைத்துவம் என்பது தாழ்ச்சியால் வழிநடத்துவதே அன்றி, அதிகாரத்தால் அல்ல. நம்மை நாமே தூய்மைப்படுத்தாமல் நாம் மற்றவர்களைத் தூய்மைப்படுத்த இயலாது.
கிறிஸ்துவைப் பின்பற்றுதல் என்றால் கிறிஸ்துவின் தாழ்ச்சியையும் உண்மையையும் பிரதிபலித்தல் ஆகும். கிறிஸ்துவில் நிலைநிற்க வேண்டுமெனில் நாம் நம்மையே தகுதிப்படுத்த வேண்டும்.
இன்றைய நாளில் நாம் அன்னை கன்னி மரியாவின் திருப்பெயரை நினைவுகூர்கிறோம். இனிமையும் பாதுகாப்பும் எதிர்நோக்கும் வழங்கும் பெயர் இது. மரியா நம்மை இயேசுவிடம் அழைத்துச் செல்வாராக!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: