
இன்றைய இறைமொழி
வெள்ளி, 13 பிப்ரவரி ’26
பொதுக்காலம் ஐந்தாம் வாரம், வெள்ளி
1 அர 11:29-32, 12:19. மாற் 7:31-37
இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில், இயேசுவின் வல்ல செயலும், இரண்டாவது பகுதியில், அந்த வல்ல செயலுக்கான பதிலிறுப்பும் தரப்பட்டுள்ளது.
காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவருக்கு இயேசு நலம் தருகிறார். இந்த வல்ல செயல் நடைபெறும் விதம் சற்றே வித்தியாசமாக உள்ளது. அந்த நபரைத் தனியான இடத்துக்கு அழைத்துச் செல்கிற இயேசு, சமகாலத்து ரபிக்கள் அல்லது மருத்துவர்கள்போல செயல்கள் செய்து, இறுதியில், ‘எப்பத்தா!’ (‘திறக்கப்படு!’) என மொழிகிறார்.
இயேசுவுக்கும் குணமான அந்த நபருக்கும் மட்டுமே தெரியும் விதமாக நடந்தேறுகிறது வல்ல செயல். வல்ல செயலின் இறுதியில், ‘இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவருக்கும் (அவர்களுக்கும் – உடன் வந்தவர்களுக்கும்) கட்டளையிடுகிறார் இயேசு.’
வல்ல செயலின் இறுதியில் இயேசு எதற்காக அதை யாருக்கும் சொல்ல வேண்டாமென மொழிகிறார்?
இலக்கிய அடிப்படையில், மாற்கு நற்செய்தியாளர் தன் நற்செய்தியின் முதல் பகுதி முழுவதும் (அலகு 1-8) மெசியா இரகசியம் காக்கிறார். இயேசு யார்? என்னும் கேள்விக்கான விடையை மறைத்து நிகழ்வுகளை நகர்த்துகிறார்.
ஆன்மிக அடிப்படையில், கடவுள் அனுபவம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட நிலையில் பெற வேண்டிய அனுபவம். மற்றவர்களின் சொற்களும் அறிக்கையும் ஒருவருக்கு அந்த அனுபவத்தைத் தர இயலாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், மக்களின் வாய்களும் திறக்கப்பட, அவர்கள் அனைவரும், ‘இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!’ எனப் பாராட்டுகிறார்கள்.
இயேசு யார்? என்னும் கேள்விக்கான விடை விரைவில் வெளிவரப்போகிறது என்பதன் முன்னோட்டமாக அமைகிறது இந்த நிகழ்வு.
குழந்தைகள் திருமுழுக்கு நிகழ்வில் ‘எப்பத்தா’ என்னும் சடங்கு உண்டு. ‘நீ அவருடைய நற்செய்தியை காதால் கேட்கவும் நாவால் அறிக்கையிடவும்’ என்று அருள்பணியாளர் குழந்தையின் காதுகளிலும் உதட்டிலும் சிலுவை அடையாளம் வரைகிறார். இறைவார்த்தையைக் கேட்கக் காதுகளைத் திறக்கவும், அதை அறிவிக்க நம் வாயைத் திறக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
கேட்டல் நம்பிக்கைக்கான பாதையாக அமைகிறது (காண். உரோ 10:17). கேட்டல் கீழ்ப்படிதலுக்கு வழிவகுக்கிறது. பேசுவதற்கு நம்மால் இயன்றும் நல்ல சொற்களை நாம் பேசவில்லை என்றால், கேட்பதற்கு நம்மால் இயன்றும் நற்செய்தியைக் கேட்க இயலவில்லை என்றால், நம்மையும் பார்த்து, ‘திறக்கப்படு!’ என்கிறார் இயேசு.
கேட்டல் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்களுக்காக நாம் இன்று செபிப்போம்.
இன்றைய முதல் வாசகத்தில் சாலமோன் அரசரின் இறப்புக்குப் பின்னர், ஒருங்கிணைந்த அரசானது வடக்கே இஸ்ரயேல் தெற்கே யூதா என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதை நாம் வாசிக்கிறோம். வடக்கு பத்துக் குலங்களுக்கு அரசராக எரோபொவாமும் தெற்கே இரண்டு குலங்களுக்குத் தலைவராக ரெகோபொவாமும் மாறுகிறார்கள். அரசர்கள் மாறினாலும் அவர்களை வழிநடத்துகிற கடவுள் மாறாதவராக இருக்கிறார்.
அவர் இன்றும் நம் நடுவே அனைத்தையும் நன்றாகச் செய்கிறார்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: